(10-01-2023)
மன்னார் மாவட்டத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நேற்று திங்கட்கிழமை (09) மதியம் மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை,வடமாகாண பிரதம செயலாளர், மன்னார் மற்றும் வுனியா மாவட்டங்களை சேர்ந்த பிரதேச செயலகங் களின் பிரதேச செயலாளர்கள், பங்கு தந்தையர்கள், மாகாண சபை திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலில் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் முக்கியமாக காணிப் பிரச்சினை தொடர்பாகவும் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ள காணிகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இரண்டு மாவட்டங்களிலும் பிரதேச செயலாளர் களினால் தங்களது பிரதேசங்களில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர்களது பிரதேசத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய மற்றும் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
உணவு பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. உணவு உற்பத்தி சம்பந்தமாக பிரதேச செயலாளர்களூடாக உணவு உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பது தொடர்பாகவும் ,உணவு உற்பத்தி போசாக்கு மட்டத்தினை மக்களிடையே உயர்த்துவதற்கான வழி முறைகளை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.