ஈழமகன்- சுயாதீன ஊடகவியலாளர், முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலகத்தின் கீழுள்ள திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களாகிய தம்மை பிரதேச செயலாளர் குரங்கு காவலுக்கு அமர்த்துவதாக அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்
தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் இயற்கையான முறையில் செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாய அறுவடை விழா கடந்த வருடம் புரட்டாதி மாதம் (17) இடம்பெற்றிருந்தது ,
அதற்கான அர்ப்பணிப்பு மிக்க சேவைகள் தொடர்பில் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட மாவட்ட செயலாளர் மாந்தை கிழக்கின் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை வாழ்த்தியிருந்தார்
ஆனால் தற்போது ஒவ்வொரு நாளும் காலை 7 மணியளவில் பிரதேச செயலக வளாகத்துக்குள் செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலப்பகுதிக்கு வருகை தந்து 2 மணித்தியாலங்கள் ஒவ்வொரு உத்தியோகத்தர்களும் குரங்கு காவல் இருக்கவேண்டும் என பிரதேச செயலாளர் பணித்துள்ளதாக தெரிவித்துள்ள உத்தியோகத்தர்கள் , வெளி மாவட்ட உத்தியோகத்தர்களுக்கு பணி நாட்களிலும் , குறித்த பகுதியை சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு பணிநாட்கள் தவிர்ந்த விடுமுறை நாட்களிலும் குரங்கு காவல் இருப்பதாக தெரிவித்த உத்தியோகத்தர்கள் காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை தாம் ஒவ்வொருவரும் 2 மணித்தியாலங்கள் குரங்கு காவல் இருக்கவேண்டி உள்ளது எனவும் இது தொடர்பில் தாம் மிகுந்த மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருப்பதாவும் தெரிவித்துள்ளனர்
தாம் பட்டப்படிப்பினை முடித்து விட்டு குரங்கு காவல் இருப்பதாக எமது செய்தி சேவைக்கு கவலையுடன் தெரிவித்த ஆண் உத்தியோகத்தர்கள் , தம்மை விட பெண் உத்தியோகத்தர்கள் நிலைமை மிக மிக மோசம் என கவலை வெளியிட்டுள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பெண் உத்தியோகத்தர்கள்
“காலை 7 மணிக்கு குரங்கு காவலை பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலைமை இருக்கும் போது, தமது சிறு பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பதா , அல்லது தமது குடும்ப தலைவர்களுக்கு சமைத்து வைப்பதா,அல்லது குரங்கு காவலுக்கு வருவதா என்ற தர்மசங்கடமான நிலைமை உருவாகின்றது என்று தெரிவித்த அவர்கள், தமது பிள்ளைகளின் பாடசாலை எதிர்காலம் கேள்விகுறியாகுவதற்கும் , மற்றும் தமது குடும்ப வாழ்க்கை பிரச்சனைகளுக்கு ஒரு ஆரம்ப புள்ளியாக இந்த குரங்கு காவல் இருப்பதாகவும் தெரிவித்த அவர்கள், மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களை மீட்க இன்னொரு மீட்பர் இல்லையா என தாம் அங்கலாய்ப்பதாகவும் தெரிவித்தனர்