யாழிலிருந்து நடராராசா லோகதயாளன்.
தேர்தல் காலத்தில் கட்சி மாற்றம், அணி உருவாக்கம், புதிய கூட்டு இவற்றிற்குப் பஞ்சம் இருப்பது இல்லை இது வடக்கு கிழக்கிற்கு மட்டும் விதி விலக்கும் இல்லை.
இலங்கையின் மினித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த தேர்தல் நடக்குமா என்பதும் இன்றுவரை உறுதி கூறமுடியாத நிலைமையே காணப்படுகின்றது. இவ்வாறு நடக்குமா என ஐயம் உள்ள ஒரு தேர்தலிற்காக அரசியல் குத்து வெட்டுக்கள் இழுபறிகள் மட்டுமன்றி குழி பறிப்புக்களும் தொடங்கிவிட்டன.
வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மேலும் சில கட்சிகளை இணைத்து கூட்டமைப்பு அமைக்க ரெலோ முயல்கின்றது. கூட்டமைப்பிலேயே தமிழ் அரசுக் கட்சியின் வாக்கு வங்கியினையும் ரெலோவிற்கு தாரை வார்ப்பதாக தமிழ் அரசுத் தொண்டர்கள் நினைகின்றனர். இதேநேரம் ஒருவாறு கூட்டமைப்பிற்குள் இணைந்துவிட்ட புளட் ரெலோவிற்கு இவ்வளவு சபைகளையும் அள்ளிக் கொடுத்த தமிழ் அரசுக் கட்சி யாழில் எமக்கு மட்டும் வலி.தெற்கு மட்டும்தானா இம்முறை மானிப்பாய் அல்லது கோப்பாயினையும் பெற வேண்டும் என எண்ணும் இந்த நிலையில் முல்லைத்தீவு மன்னாரிலும் நிலை இதைவிட மோசமாகவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டம் விரும்பியோ விரும்பாமலோ ஒருவரின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ளது இதனால் இம்முறையும் அங்கே நம்மை வெட்டிவிடுவாரோ என்ற அச்சமும் உள்ளது. இந்தக் காலத்திலேயே தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவில் மெகா கூட்டணி என்ற பேச்சிற்கே இடம் இல்லை. முடிந்தால் ஏனைய இரு கட்சிகள் இணங்கினால் அனைவரும் தனியாகவும் அவர்கள் இணங்காது விட்டால் கூட்டமைப்பாகவும் மட்டுமே போட்டியிடுவதாகத் தீர்மானித்தனர். இதனை கூட்டமைப்பில் உள்ள கட்சிகளையும் வெட்டிவிட முயற்சி எனவும் ஓர் கூற்று கூறப்படுகின்றது. இது கூட்டமைப்பின் நிலை எனில் வெளிக் கட்சிகளிடமும் இதுதான் நிலையாகவே உள்ளது ஆனால் விடயம் வெளியே தெரியவில்லை என்பதுதான் உண்மை.
குறிப்பாக இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகள் மட்டத்திலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய ஒரே தேர்தலாக இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் விளங்குகின்றது. ஏனெனில் தமிழர் தரப்பில் கூட்டமைப்பிற்கு வெளியே ஓர் மகா கூட்டணியை அமைத்து விடுவோம் என மூத்த அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான என். சிறீக்காந்தா பெரும் முயற்சியில் ஈடுபடுகின்றார். இதற்காக சி.வி.விக்னேஸ்வரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், ஐங்கரநேசன், ஆனந்த சங்கரி, அனந்தி சசிதரன் ஆகியோரையும் சந்தித்துப் பேசியுள்ளார். அக்கூட்டணியும் முதல் கோணல் முற்றும் கோணலாகவே காணப்படுகின்றது. ஏனெனில் அங்கே எந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடக்கம் பெரும் பிரச்சனையாகவே உள்ளது. இந்த நிலையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளட்டும் வெளியே வந்தால் இதிலே இணைத்து பயணிக்கலாம் என்பது இதில் உள்ளவர்களின் கணிப்பாக உள்ளது.
இவ்வாறு கூட்டணி அமைத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தனக்கு கிடைத்த புதிய சின்னமாகிய மானில் ஒரு முறை பாய்வோம் என எண்ணுகின்றார். இதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் அணியும் இணங்கிவிட்டது. இருப்பினும் மூத்த அரசியல்வாதியான சிறீக்காந்தவோ மான் இன்னும் வளரவில்லை அதனால் ஓடாது வேறு சங்கரி ஐயாவுடன் பேசி சூரியனில் அல்லது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மீனில் போட்டியிடலாம் என ஆலோசிக்கின்றார். இதிலே மீனில் போட்டியிட்டால் அது சுரேஸ் பிறேமச் சந்திரனின் கட்சி நான் பங்குகொள்ள மாட்டேன் என அடியோடு கூறிவிட்டார் பொ.ஐங்கரநேசன் என்பதனால் அதிலும் ஒரு இடர்பாடாகவுள்ளது. இவை அனைத்தையும் தாண்டி ஒருவாறு சங்கரியாரை சரி செய்து அந்தக் கட்சியின் பெயரில் போட்டியிட சம்மதித்தால் விக்னேஸ்வரன் அணி இணங்குமா புதிய கட்சி எடுத்து முதல்முறையும் வேறு சின்னமா என்ற தாக்கமும் அவருடன் இணைந்த மணி அணியும் இணங்குமா என்பதும் கேள்விக்குறியாகவே இருந்தாலும் இதைவிட பெரும் நெருக்கடியும் காத்திருக்கின்றது.
மூன்று கட்சிகள் மட்டுமே கூட்டாக இருக்கும் இடத்திலேயே எந்தக் கட்சிக்கு எத்தனை சபை அல்லது எத்தனை உறுப்பினர்கள் என்பதில் அதி உச்ச இழுபறியில் நிற்கும் ரெலோ கடந்த உள்ளூராட்சித் தேர்தலின்போதும் எல்லா இடமும் பறந்து திரிந்து அனைவரும் கையை விட மீண்டும் கூட்டமைப்பு தான் தஞ்சம் என வந்த நிலை இருப்பினும் மெகா கூட்டணி எனச் சென்றால் மட்டும் எத்தனை சபை கிடைக்கும் அல்லது எத்தனை உறுப்பினர்களிற்கான சந்தர்ப்பத்தினை பெறப் போகின்றனர் என்பதனை காணவும் ஆவலாய் உள்ளது. ஏனெனில் யாழ்ப்பாணத்தில் மட்டும் 3 சபைகள் முழுமையாகவும் மேலும் இரு சபைகளில் 50 வீதமும் பெற்ற ரெலோ இம்முறை அமைக்கும் மெகா கூட்டணியில் பெறப்போகும் சபையினையும் ஆசனங்களையும் பெற ஆர்வம் உள்ளது. இது யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி ஏனைய மாவட்டத்திலும் இதுதான் யதார்த்தம்.
தமிழர் தரப்பில் இவ்வாறு உள்ளது ஏனைய கட்சிகள் நல்ல ஒற்றுமையாக உள்ளனர் அல்லது அங்கே பிரச்சனை இல்லை அவர்கள் சாதாரணமாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளனர் என நினைத்தால் அதுவும் தவறான கணிப்பாகவே இருக்கின்றது. தேசியக் கட்சிகள் முதல் அரசோடு நல்ல உறவோடு உள்ள கட்சிகள் வரையில் இதுதான் நிலையாகவுள்ளது. இதில் ஐ.தே.கட்சி தனித்து போட்டியிடுவதா அல்லது மொட்டுக் கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் இன்னமும் முடிவல்ல. கூட்டிணைந்தால் தெற்கில் ஒரு நிலை இருந்தாலும் வடக்கு கிழக்கில் வாக்கினைப் பெற முடியாது என்பதாக உள்ளூர் அரசியல்வாதிகள் ஐயம் தெரிவிக்கின்றனர். இதேநேரம் மொட்டுக் கட்சியும் ஈ.பி.டி.பியும் இணைந்து போட்டியிடுவதற்கான ஓர் பேச்சும் தொடர்கின்றது. அவ்வாறு இணைந்து போட்டியிட்டால் எந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது வீணையை விட முடியாது என அந்தக் கட்சி உறுதியாகவுள்ளது. இதனால் மொட்டின் நிலை என்னவென்றே நெரியவில்லை. இதேநேரம் யாழ்ப்பாணத்தில் உள்ள சபைகளில் முக்கியமான சபை மாநகர சபை அதில் தற்போது ஈ.பி.டி.பி சார்பில் 10பேர் உள்ள நிலையில் மணிவண்ணன் சார்பில் ஈ.பி.டி.பி எடுத்த தீர்மானத்திற்கு உடன்படாது ஐவர் அதிருப்தியில் உள்ளதோடு கண்டிப்பாக நால்வர் கட்சியில் இருந்து வெளியேறியே தீருவர் என்ற தோற்றமே காணப்படுகின்றது. இது இறுதியாக ஈ.பி.டி.பி கட்சியினால் நடாத்தப்பட்ட உறுப்பினர்களிற்கான கலந்துரையாடலில் அப்பட்டமாகியது அந்த ஐவரும் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கூட்டிய கூட்டத்தில் பங்கு கொண்டிருக்காதபோதும் ஒருவர் மட்டும் எனக்கு காச்சல் எனத் தெரிவித்து விட்டார். அவ்வாறு தெரிவித்தவர் சில நாள்களின் பின்னர் சபையில் மூத்த உறுப்பினரும் அமைச்சரின் நெருங்கிய சகாவும் ஆகிய ஒருவரது இல்லத்தை நாடி தனது உள்ளக் குமுறலை கொட்டிவிட்டார். இன்னுமொருவரோ போர் முடிந்து அபிவிருத்தியும் தேவையென எண்ணி இணைந்து போட்டியிட்டால் அமைச்சர் அதிகமாக புலியை திட்டுகின்றார். எமது மண் என்றுமே புலிக்குத்தான் முன்னுரிமை அதனால் இனி இணைந்து போட்டியிட மாட்டேன் என்கின்றார்.
இவை அனைத்திற்கும் அப்பால் இன்னுமொரு உறுப்பினர் கூறும் கூற்று தூக்கி வாரிப்போடுகின்றது. அதாவது தனது மகளிற்கு திருமணம் பேசி அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்து திருமணத்திற்கு தாள் வைக்கும் நிலையில் அந்த திருமணம் முறிந்து விட்டதாம் ஏனெனில் ஈ.பி.டி.பி கட்சியில் இருக்கும் ஒரே காரணத்தால்தான் திருமணம் முறிந்தது அதனால் இனி வேண்டவே வேண்டாம் என்கின்றார். இதேபோன்று இன்னுமொருவரோ எந்த விடயத்திற்கும் எம்மிடம் எந்தக் கருத்தையும் கேட்காது அவர்களே முடிவெடுத்து விட்டு அதனை மட்டுமே செய்யுமாறு கூறுவதானால் நாம் ஏன் இருக்க வேண்டும் என்கின்றார். இது ஈ.பி.டி.பி கட்சியின் நிலைமையாகவுள்ளது.
(தேர்தல் முடியும்வரை இந்த நிலை தொடரும் அதனால் அதுவரை இக் கட்டுரையும் தொடரும்)