தாயக மக்களின் தனித்துவமான அரசியலிருப்பை உறுதிப்படுத்துவதிலும் நாம் பேதங்களை மறந்து செயலாற்றிவருகின்றோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் கனடா வாழ் நிமால் விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள தைப்பொங்கல் செய்தியில் தெரிவிப்பு
சனவரி 15, 2023
பல்வேறு தடைகள், சவால்களுக்கு மத்தியிலும் நமது அரசியல் பயணம் தொடர்கின்றது. தாயக மக்களின் தனித்துவமான அரசியலிருப்பை உறுதிப்படுத்துவதில் – நாம் பேதங்களை மறந்து செயலாற்றிவருகின்றோம். மேற்குலகில் ஒரு டயஸ்போரா சமூகமாக நாம் எழுச்சியுற்றிருக்கின்றோம். தாயகத்தில் நமது மக்கள் பலமற்றவர்களாக இருக்கின்றனர். அதனை ஈடுசெய்யும் வகையில் நாங்கள் அவர்களின் சர்வதேச குரலாக வளர்சியுற்றிருக்கின்றோம். இந்த பின்புலத்தில் நோக்கினால், யூத டயஸ்போராவிற்கு பின்னர், ஒரு டயஸ்போரா சமூகமாக, ஈழத் தமிழ் சமூகம் வளர்ச்சியடைந்திருக்கின்றது. தாராளவாத மேற்குலகின் புலம்பெயர் சமூகமாக நாம் எழுச்சியுற்றிருக்கின்றோம். இந்த எழுச்சியை அரசியலோடு மட்டும் நாம் சுருக்கிவிடக் கூடாது. நமது தாயகத்தினை பொருளாதாரரீதியில் உயர்த்துவதற்கான அடித்தளமொன்றை நாம் ஏற்படுத்த வேண்டும். அதனை எங்களால் மட்டுமே செய்ய முடியும். வேலியால் விழுந்தவரை மாடு மிதித்த கதையாக – சிங்கள யுத்தத்தால் சீரழிந்த நமது மக்கள், இப்போது பொருளாதார நெருக்கடியின் கோரப்பிடிக்குள் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நாம் இருகரம் நீட்டுவதுடன், அவர்களது பொருளாதார சுயத்திற்காகவும் நாம் உறுதியுடன் பணியாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இவ்வாறு கனடா வாழ் நாடு கடந்த அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினராக நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த செய்தி அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;_
தமிழினமானது, தனக்கெனத் தனித்துவமான மொழி, கலை, பண்பாடு, மரபுகள், வழக்காறுகள் முதலிய கட்டமைப்புகளைக் கொண்ட ஓர் இனமாகும். இன்றைய உலகில் ‘இயற்கையைப் போற்றுவோம்’ என்ற முழக்கங்களைக் கேட்கின்றோம். இது சார்ந்த மாநாடுகளைப் பார்க்கின்றோம். எனினும். நம் முன்னோர் 2500 ஆண்டுகளுககு முன்பே இயற்கையைப் போற்றிய நிகழ்வைப் பொங்கல் விழா எமக்கு எடுத்துரைக்கின்றது. வானிலே கார்முகிலை எழச் செய்து, கடல் நீரை முகக்க வைத்து நமக்கு மழையைக் கொடுத்துப் பயிர்களுக்குமப் பசுமையைத் தந்து நமக்கும் ஒளியாக நின்று அனைத்து வளங்களும் நமக்குக் கிடைக்க கதிரவன் அல்லவா அடிப்படையானவன் என்ற செய்நன்றி மறவாத் தன்மையோடு, உயரிய எண்ணத்தோடு கொண்டாடப்படுவதே பொங்கல் விழாவாகும். பண்டைத் தமிழ்ழன் கொண்டாடிய பொங்கல் விழாவைப் புறநானூற்றிலே நாம் காணுகின்றோம். இராசராசன் காலத்திலே புதிதுண்ணல் என்ற பெயரில் கொண்டாடப்பட்டதையும் பார்க்கின்றோம்.
ஈழத்தைப் பொறுத்த வரையிலே அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகளால் இப்பண்பாட்டு விழுமியங்கள் யாவும் அழிக்கப்பட்டன அல்லது அழிந்தன. இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து விடுலை பெற்ற நாள் முதல் இன்றைய நாள் வரை நடந்தேறிய நிகழ்ச்சிகள் யாவும் தமிழர் கலைபண்பாடுகளை வாழ்க்கை முறைகளை சீரழிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தன என்பதைச் சமூகவியலாளர்கள் நன்கறிவர்.
அரசியல்ரீதியில் நாம் இணைந்தும், தனித்தும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அதே போன்று, தாயகத்திலும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் இணைந்தும், தனித்தும் இயங்கிவருகின்றன. ஒரு ஜனநாயக அரசியல் தளத்தி;ல் இவ்வாறுதான் அமைப்புக்கள் இயங்கும். நமது விட்டுக்கொடுக்க முடியாத நிலைப்பாடுகளில் நாம் இணைந்திருப்போம் – அவ்வாறான நிலைப்பாடுகளில் தனித்திருப்பதும் பிரச்சினைக்குரிய விடயமல்ல. ஆனால் நாம் முடிந்தவரையில் தமிழ் தேசியத்திற்கான ஓரணியாக செயலாற்றுவதே காலத்தின் தேவையாகும். எனவே நாம் அரசியலில் உறுதியாக இயங்கிவருவது போன்று, தாயக மக்களின் பொருளாதார மீட்சிக்காகவும் அதே வேகத்துடன் பணியாற்றுவோம்.
நமது குரல் வலுவாக இருப்பதற்கான அடித்தளத்தை நமது பொருளாதார வாழ்வே நமக்குத் தருகின்றது. ஒரு சமுதாயம் பொருளாதாரத்தில் நலிவுற்றிருந்தால், அதனால், அதற்கான தனித்துவமான எதிர்காலம் தொடர்பில் சிந்திக்க முடியாது. ஆனால் இந்த நிலைமை ஒரு ஆயுதப்போராட்டச் சூழலில் மாறுபடும். 2009 இற்கு முன்னரும் தாயகத்தில் பொருளாதார பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. ஆனால் ஆயுதப் போராட்டம் வழங்கிய வெளிச்சத்தில், அந்தத் துன்பங்கள் இரண்டாம்பட்சமாகியது. அதே வேளை ஆயுதப் போராட்டத்தை தாண்டி, மக்களை எவராலும் அணுகவும் முடியாமலிருந்தது. ஆனால் இப்போது நிலைமைகள் அப்படியல்ல. மக்களின் பொருளாதார இயலாமைகளை, வறுமையை, அரசியலாக்கும் அன்னியக் குழுக்கள் பல்கிப் பெருகிவிட்டன. அவ்வாறான குழுக்களை தடுத்துநிறுத்தும் வல்லமையும் தற்போதுள்ள தமிழ் தேசிய கட்சிகளுக்கில்லை. ஜனநாயகத்தின் பெயரால் இவ்வாறான தலையீடுகள் இடம்பெறுகின்ற போது, ஒரு கட்டத்திற்குமேல் அவற்றை தடுப்பதும் சாத்தியமில்லை.
இந்த இடம்தான் நாம் பணியாற்ற வேண்டிய இடமாகும். ஏனெனில் பொருளாதாரரீதில் பலவீனமான நிலையிலிருக்கும் மக்களை தமிழ் தேசியமென்னும் ஒரு சொல்கொண்டு மட்டும் கையாள முடியாது. அவர்களது வாழ்வே நெருக்கடிக்குள் இருக்கின்ற போது, அவர்களை நமது வெறும் சுலோகங்களால் மட்டும் திருப்திப்படுத்திவிட முடியாது. இந்த இடைவெளியை பயன்படுத்தியே, தென்னிலங்கை கட்சிகளும், அவர்களுக்கு ஆதரவுவழங்கும் தமிழ் குழுக்களும் பலவீனமான தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவுகின்றனர். அவர்களால் வெற்றிபெறவும் முடிந்திருக்கின்றது. இதனை தடுத்துநிறுத்தி, நமது தாயக மக்களை தமிழ் தேசியத்தின் பக்கமாக பிணைக்க வேண்டுமாயின், நாம் அவர்களது பொருளாதார வாழ்வை மீட்டெடுக்கும் பல்வேறு செயல்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அரசியலதிகாரம் கிடைத்த பின்னர்தான் இவ்வாறான விடயங்களை நாம் செய்வோமென்றால், அதற்கிடையில் கணிசமான மக்கள், அவர்களது வறுமையின் பிடியால், சிதறிவிடுவர்.
சிதறிய மக்களை மீளவும் ஓரிடத்திற்கு கொண்டுவருவது மிகவும் கடினம். எனவே வருமுன் காப்போமென்னும் அடிப்படையில், நமது தாயகத்தின் பொருளாதாரத்தை மீட்பதற்கான பணியில், நாம் அனைவரும் ஓன்றிணைய வேண்டும். இன்று வடக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதன் காரணமாக தமிழ் நாட்டிற்கும் ஈழத்தமிழர் தாயகத்திற்குமான வர்த்தக, கலாசாரா தொடர்புகள் அதிகரிக்கப்போகின்றன. இது பிறிதொரு புறம், நமக்கான பொருளாதார திட்டங்களுக்கான வாய்ப்புக்களையும் வழங்கும். இவற்றை முற்றிலும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். இதன் மூலம் நமது தாயக மக்கள் நன்மையடையக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும். தாயகத்திலுள்ள இளைஞர் யுவதிகள் அங்கு வாழமுடியுமென்னும் நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.
புதுவை அண்ணர் கூறியிருப்பது போன்று – ‘காலத்தை தவறவிட்டால் பின்னர் கண்டவனெல்லாம் கதவை தட்டுவான், எனவே, நமது பணிகளை செய்வதற்கான காலத்தை தவறவிடுவோமானால், பின்னர், நமது மக்கள் மற்றவர்களால் சிதறிடிக்கப்படுவதையும் நம்மால் தடுக்கமுடியாமல் போகும். இதுவரை நடந்தவைகள் போகட்டும், இந்தத் தைத்திருநாளில், நமது தாயகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணிகளுக்காக உறுதிபூணுவோம்.
ஈழத்தமிழ் மக்களுக்கு இழந்த நாட்டை மீட்டு எடுப்பது ஒன்றே வழி!
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழிக்கமைய பிறக்கப் போகும் தைத்திங்கள் தமிழ் மக்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் கொண்டு வர வேண்டுமென வாழ்த்தி விடைபெறுகின்றேன்.
நன்றி.
நிமால் விநாயகமூர்த்தி
உறுப்பினர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.