ஐ.எம்.எஃப் கடனுக்கான இறுதித் தடையும் நீங்கியதை அடுத்து நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
சீனாவும் தமது நிலைப்பாட்டிலிருந்து இறங்கிவந்து இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கியதை அடுத்து ஐ எம் எஃப் கடனிற்கான தடைகள் விலகுவதாகப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைப்பதற்குத் தடங்கலாக இருந்து வந்த கடன் வழங்குநர்களின் கடன் மறுசீரமைப்புக்கான இணக்கம் முழுமையாக எட்டப்பட்டுள்ளதாக அரச தரப்பால் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியா ஏற்கனவே கடன் மறுசீரமைப்புக்கு இணங்கியிருந்த நிலையில் சீனாவும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்துடன் கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் வெளியிட்டுள்ளது.
சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளதாக சீனத்தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான கடன்களுக்குப் பொறுப்பான சீனாவின் எக்ஸிம் வங்கி, சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடன்களை இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம் செய்யும் என்று கூறியது.
சீனாவின் ஆதரவைப் பெறுவதற்கான இலங்கையின் முயற்சிகள் மற்றும் அதன் கடன்களை மறுசீரமைப்பதற்கான பேச்சுக்கள் பல மாதங்களாக நடைபெற்றது.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட 2.9 பில்லியன் ரூபா பெறுமதியான, நிதி வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துக்கு ஆதரவளிப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக இந்தியா அறிவித்த சில நாட்களில் சீனா இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளது.
சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநர்களாவர். சர்வதேச நாணய நிதியத்துக்கு இந்திய உத்தரவாதங்கள் வழங்கப்பட்ட உடனேயே அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கைக்கு ஆதரவளிக்க மற்றைய நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
இதேவேளை, சீனாவின் சர்வதேச திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சென் சோவ், கடந்த வாரத்தின் முற்பகுதியில் இலங்கை வந்திருந்தார். சீனா தனது கடன்களை மறுசீரமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கை குறித்து சில ‘நல்ல செய்திகளை’ அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
வெளிநாட்டுக் கடன்களுக்குப் பொறுப்பான அரசு நிறுவனமான சீன எக்ஸிம் (ஏற்றுமதி-இறக்குமதி) வங்கியின் கடிதம், நேற்று ஆரம்பமான சீன புத்தாண்டை முன்னிட்டு கொழும்பை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.