உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடந்த கிராஸ் ஓவர் ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வென்று ஜெர்மனி காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. நாளை மறுதினம் நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் நேரடியாக நுழைந்த இங்கிலாந்து அணியுடன் ஜெர்மனி மோதவுள்ளது. ஒடிசாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் பங்குபெற்ற 16 அணிகள் ஏ,பி.,சி,டி என 4 குரூப்களாக பிரிக்கப்பட்டிருந்தன. இதில் ஒவ்வொன்றிலும் 4 அணிகள் இடம்பெற்றிருந்தன.
இவற்றில் வெற்றிப் புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தை பிடித்த அணிகள் நேரடியாக காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் நேரடியாக காலிறுதிக்கு சென்றன. குரூப்களில் கடைசி 2 மற்றும் 3ஆம் இடம்பிடித்த அணிகளுக்கு இடையே கிராஸ் ஓவர் மேட்ச்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் வெற்றி பெற்ற அணிகள், நேரடியாக சென்ற அணிகளுடன் காலிறுதியில் மோதும். அந்த வகையில் கடைசி கிராஸ் ஓவர் போட்டி ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையே இன்று புவனேஸ்வரத்தின் கலிங்கா மைதானத்தில் நடைபெற்றது.
தொடர்ச்சியாக பந்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஜெர்மனி வீரர்கள் அதிரடியாக விளையாடி, எதிரணியை பதற வைத்தனர். ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்தில் மார்க்கோ மில்ட்கா, 18 ஆவது நிமிடத்தில் நிக்லஸ் வெலன்,23 ஆவது நிமிடத்தில் மேட்ஸ் கிராம்புஷ், 24 ஆவது நிமிடத்தில் மோர்டிஸ் ட்ரெம்பெர்ஸ், 59 ஆவது நிமிடத்தில் கோன்சாலோ பெல்லட் என ஜெர்மன் வீரர்கள் அற்புதமாக 5 கோல்களை விளாசினர். பிரான்ஸ் தரப்பில் 57 ஆவது நிமிடத்தில் பிரான்கோயிஸ் கோயட் ஒரு கோல் அடித்தார். இந்த ஆட்டத்தில் 5-1 என்ற கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றுள்ளது. நாளை மறுதினம் நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் நேரடியாக நுழைந்த இங்கிலாந்து அணியுடன் ஜெர்மனி மோதவுள்ளது.