2022 ஆம் ஆண்டுக்கான டி20 அணியினை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இந்திய அணியின் விராட் கோலி, சூர்குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அந்த ஆண்டுக்கான சிறந்த வீரர்களை கொண்ட அணியை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இன்று டி20 போட்டிக்கான அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இதற்கு கேப்டனாக இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஓராண்டில் அவரது அற்புதமான ஆட்டம் காரணமாக அவருக்கு கேப்டன் பொறுப்பு அளித்து ஐசிசி கவுரவப்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் கலக்கிய இந்திய அணியின் விராட் கோலிக்கு 11 வீரர்கள் அணியில் மஇடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை தொடரில் அவர் 276 ரன்களை குவித்தார். இதேபோல் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கும் சூர்ய குமார் யாதவும் ஐசிசி அணியில் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு மட்டும் சர்வதேச டி20 போட்டிகளில் அவர் ஆயிரம் ரன்களைக் கடந்து மொத்தம் 1,164 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் 2 சதங்களும், 9 அரைச் சதங்களும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 187.43. உலகக்கோப்பையில் மட்டும் சூர்யகுமார் 239 ரன்கள் எடுத்துள்ளார். ஐசிசி பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் அவர் முதலிடத்தில் இருக்கிறார்.
மற்றொரு வீரரும் டி20க்கான இந்திய அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்ட்யாவும் ஐசிசி அணியில் இடம்பெற்றுள்ளார். தொடர்ந்து அவர் ஆல்ரவுண்டராக கலக்கி வருவதால் அவர் மீதான எதிர்பார்ப்பும், கவனமும் அதிகரித்துள்ளது. இந்திய வீரர்கள் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை தவிர்த்து, ஜோஸ் பட்லர், பாகிஸ்தான் அணியின் முகம்மது ரிஸ்வான், கிளென் பிலிப்ஸ், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஸா, இங்கிலாந்தின் சாம் கர்ரன், இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கா, பாகிஸ்தானின் ஹாரிஸ் ரவுப், ஜோஷ்வா லிட்டில் ஆகியோர் டி20க்கான ஐசிசி அணியில் இடம்பெற்றுள்ளனர்.