நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாaந்து அணி பேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளது. தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, சுப்மன் கில் சதம் அடித்து சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இதனை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்திய அணி தொடரை வென்றுள்ள நிலையில் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்றைய ஆட்டத்தில் 2 மாற்றங்களை கேப்டன் ரோஹித் சர்மா செய்திருந்தார். முகம்மது ஷமி மற்றும் சிராஜிற்கு பதிலாக உம்ரான் மாலிக் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கிய ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர், இருவரும் டி20 மேட்ச்சைப் போல விளையாட ஆரம்பித்து ரன்களை குவித்தார்கள். ரோஹித் சர்மா101 ரன்னும், சுப்மன் கில் 112 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர். அடுத்து வந்த விராட் கோலி 36 ரன்னும், இஷான் கிஷன் 17 ரன்களும் எடுத்து ஏமாற்றம் அளித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 14 ரன்னில் நடையைக் கட்டினார். ஒரு கட்டத்தில் 400 ரன்களை அணி எளிதாக கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் 350யை தாண்டி விடுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். கடைசி ஓவர்களில் ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாகூரின் சிறப்பான ஆட்டத்தால் அணி 50 ஓவர்கள் முடிவில் 385 ரன்களை எட்டியது.
பாண்ட்யா 38 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரியுடன் 54 ரன்களும், ஷர்துல் தாகூர் 17 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 25 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.