மு.நித்தியானந்தன் லண்டன்
‘மாத்தளை எங்கள் மலையகத்தின் தலைவாயில்.தமிழகக் கரையிலிருந்து பயங்கரப்படகுகள் மூலம் கடலைக்கடந்து, கொடிய கானகங்களுக்கிடையே கால்நடையாய் உயிர்தப்பி வந்ததற்காக நன்றி கூறும் முதல் தெய்வம் எங்கள் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன். மலையக மக்களின் வரலாறு மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வரலாற்றுடன் ஆரம்பமாகிறது” என்கிறார் மலையகத்தின் கல்விமான் அமரர் இர.சிவலிங்கம்.
இந்த மாத்தளை மண்ணை தன் சுவாசத்தில், மூச்சில், ரத்தநாளங்களில், சிந்தனையில் ஏற்றிப் பெருமிதம் கொள்பவர் மாத்தளை வடிவேலன். மாத்தளைப் பிராந்தியத்தில் அவர் காலடிகள் படாத இடமேயில்லை. அங்குலம் அங்குலமாக அந்தப்பிரதேசத்தை அளந்து வைத்திருப்பவர் அவர்; தெரிந்து வைத்திருப்பவர்; வடிவேலன் கிட்டத்தட்ட எழுபத்தைந்து ஆண்டுகளாக அந்த மண்ணோடு போராடி வந்திருக்கிறார்.அந்த மண்ணில் நடந்து முடிந்த அரசியல் மாற்றங்கள், எழுச்சிகள், புரட்சிகர இயக்கங்கள், அடுத்தடுத்து தொடர்ந்து இடம்பெற்ற இனவன்முறைகள், அவற்றிற்கு எந்த நேரத்திலும் பலியாகும் மக்களாக குறிவைக்கப்பட்ட மலையக மக்கள், உண்ண உணவின்றி தமிழ்த் தொழிலாளர்கள் அந்த மண்ணை விட்டே வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட அவலம், தோட்டங்கள் அரச உடைமை ஆக்கப்பட்டபின், மாத்தளையின் பெருந்தோட்டங்களின் பொலிவே சிதைந்து போன கோலம், இன சௌஜன்யம் குலைந்து போன கொடுமை –
இத்தனையையும் அவர் கண்கூடாக்கண்டிருக்கிறார். தன் நெஞ்சிலே தணல் கொண்டு திரிந்திருக்கிறார். தோல்வியையும் துயரத்தையும் சுமந்து கொண்டிருக்கிறார்.மாத்தளை வீதிகளிலே அணிவகுத்துச் சென்ற ஊர்வலங்களில் அவர் முன்னணியில் நின்றிருக்கிறார். அரசியல் மேடைகளில் அவர் துணிவோடு முழங்கியிருக்கிறார்.
பொதுத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். தோல்விகளைக் கண்டிருக்கிறார், துவண்டு போனதில்லை.
மாத்தளையில் உயிரோட்டம் மிக்க இலக்கியப் பாதையைச் செப்பனிடுவதில் அவர் மூலகாரணராயிருந்திருக்கிறார்.
மாத்தளையில் கே.முருகேசப்பிள்ளையும் ஷெய்கு கலைமானுல் காதிரியும் ஏற்றிவைத்த உன்னத இலக்கியச்சுடரை முன்னேந்திச் சென்ற பெருமகனாக மாத்தளை வடிவேலன் திகழ்கிறார்.இர.சிவலிங்கம், எஸ்.திருச்செந்தூரன்,பாரதியின் பேத்தி விஜயபாரதி, அவரது கணவர் சுந்தரராஜன், கு.அழகிரிசாமி ஆகிய இலக்கிய ஆளுமைகளுக்கு மாத்தளையில் செங்கம்பளம் விரித்து சிறப்புச் செய்த நிகழ்வுகளில் ஆர்வத்தோடு கலந்து கொண்ட இளைஞராக வடிவேலன் திகழ்ந்திருக்கிறார். மாத்தளை கார்த்திகேசு, மலரன்பன், அல் -அஸ{மத், கதிர்வேல், பூபாலன், சி.கா.முத்து, ஆ .ராஜலிங்கம், பழனிவேல், கே.கோவிந்தராஜ், எச்.எச்.விக்ரமசிங்க, மாத்தளை சோமு என்று பேரணியின் அணைப்புடன் செயற்பட்டவர் வடிவேலன்.மாத்தளையின் இலக்கியப்பாரம்பரியத்தை முன்னெடுத்த முக்கிய ஒரு கண்ணியாக வடிவேலன் இலக்கிய வரலாற்றுக்குரியவராகிறார்.
மாத்தளையின் ஆத்மீகச் செழுமையின் போஷிப்பிலே ஊட்டம் பெற்று, நிறைவு காணும் பக்குவம் அவருக்கு வாய்த்திருக்கிறது. மாத்தளையின்புனிதத் திருத்தலமாகக் கருதப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரகார வெளியில் ஆத்ம லயிப்பில் சுகிப்பவர் அவர்.
மாத்தளையின் வால்ராசா கோயில், வெட்டரி வால்சாமி, எழு கன்னியம்மன் கோயில், முனியாண்டி, வேட்டைக்கறுப்பன், இடும்பன், வைரவர் கோயில், தொட்டிச்சியம்மன் கோயில், ஊமையன் கோயில் என்று மாத்தளையில் குடிகொண்டிருக்கும் தெய்வங்கள் எல்லாம் அவர் நெஞ்சிலும் குடிகொண்டுள்ளன.
மலையக நாட்டுப்புறவியலில் முதன்மை ஆய்வாளராக மாத்தளை வடிவேலன் சிறப்புப் பெறுவதற்கு அவரது ‘மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலாறும்’ (1997), ‘மலையக நாட்டுப்புறவியலில் மாரியம்மன்'(2007), ‘மலையக பாரம்பரியக் கலைகள்’ (1992) ஆகிய நூல்கல் சாட்சி சொல்லவல்லன.’மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலாறும்’ என்ற மாத்தளை வடிவேலனின் நூல் ‘ஒரு அசாத்திய தீமிதிப்பு’ என்று எழுதினார் இர.சிவலிங்கம் அவர்கள். இந்துசமய இராஜாங்க அமைச்சு நடத்திய நாட்டுப்புற வியல் கருத்தரங்கில் ‘காமன் கூத்தும் மலையக மக்களின் சமூக வாழ்வில் அதன் பங்களிப்பும்’ என்ற பொருண்மையில் மாத்தளை வடிவேலன் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை அறிஞர்களின் பாராட்டைப்பெற்ற கட்டுரையாகும். தனது ஆய்வுப்பொருளின் மீது ஆழ்ந்த ஈடுபாடும், தோட்ட மக்களுடன் அவர் கொண்டுள்ள இடையறாத தொடர்ந்த நெருக்கமும் கள ஆய்வுகளில் அவருக்குப் பெருந் துணையாய் அமைந்துள்ளன.
பதினைந்து ஆண்டு காலம் இந்து சமய, கலாசார அலுவல்கள் அமைச்சில் கலாச்சார உத்தியோகஸ்தராகப் பணியாற்றிய காலப்பகுதியில் மலையகத்தின் ஆலயங்கள் பற்றிய மிகத் துல்லியமான தவல்களை அவர் சேகரித்துக்கொண்டிருந்தார். தோட்டங்கள், ஆலயங்கள் என்று தொடர்ந்த களப்பணியில் ஈடுபட்டிருந்ததால் மலையகத்தின் தொன்மங்கள், ஐதீகங்கள், தெய்வ வழிபாட்டு முறைகள்,மக்கள் நம்பிக்கைகள் போன்ற அனைத்து வாழ்வியல் கோலங்களோடும் வடிவேலன் பின்னிப்பிணைந்தவராக மிளிர்ந்தார்.
இளமையில் சகல அமைப்புகளையும் கண்டனத்தோடு நோக்கிய வடிவேலன், பின்னால் அவை அனைத்தோடும் இணைந்து செயற்படுவதன் மூலமே மலையக மக்களுக்குக் காரிய சாத்தியமான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்று நம்பிச் செயற்பட்டார்.
தீவிர சமூகச் செயற்பாட்டாளரான வடிவேலன் 1974இல் காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ், நோர்த் மாத்தளையில் தோட்டங்கள் சுவீகரிக்கப்பட்டு, தோட்டத் தொழிலாளர்கள் வீதிகளுக்கு வந்த நிலையில் அவர்களின் ஜீவமரணப் போராட்டத்தை கண்கூடாகக் கண்டார்.நாடு என்றும் காணாத உணவு நெருக்கடியில் சிக்கியிருந்தது. ஒரு கட்டத்தில் அரசாங்கத்திடம் இலங்கை மக்களுக்கான உணவுப்பொருட்களின் கையிருப்பு வெறும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. உணவு விநியோகம் ஒவ்வொரு கிழமையையும் எவ்வாறு தாக்குப்பிடிப்பது என்ற அளவிலேயே நடந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் மாத்தளையில் மகாவெலகந்த, மடவெளை 1ஆம், 2ஆம் தோட்டங்களைச் சேர்ந்த 210 குடும்பங்கள் வேலை இழந்து, காசும் இல்லாமல், ஒரு வேளைச் சாப்பாட்டுக்கும் வழியின்றி அல்லலுற்ற நேரத்தில்,அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் உடனடி நடவடிக்கையில் எச்.எச்.விக்ரமசிங்க, மாத்தளை வடிவேலன்,பாக்கியம் செல்லப்பா, கதிர்வேல்,மலரன்பன், கே.வேலாயுதம் சந்தனம் கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து துரித கதியில் செயற்பட்டதை நோர்த் மாத்தளை மக்கள் இன்றும் நினைவு கூர்வர்.
அப்போது உணவு விநியோக ஆணையாளராக இருந்த எஸ்.பத்மநாதன் அவர்களை எச்.எச்.விக்ரமசிங்க சந்தித்து, நிலைமையை விளக்கி, அவர் உடனடியாகவே இந்த மக்களுக்கு உதவிட முன்வந்தார். அப்போது பிரதி ஆணையாளராக இருந்த எம்.எல்.எம்.மரைக்கார் பெருங்கருணையுடன் இந்த நிவாரணப்பணிகளை மேற்கொண்டார்.இந்தக் குடும்பங்களுக்கு உடனடியாக 2 கொத்து அரிசியும் சீனியும் இலவசமாக விநியோகிக்குமாறு மரைக்கார் அவர்கள் மாத்தளை அரசாங்க அதிபர் சிறில் கமகே அவர்களுக்கு ஆணை பிறப்பித்தார். கடந்து போன ஒரு மாதத்திற்குமான உணவும் அவர்களுக்கு சேர்த்து வழங்கப்பட்டது. இந்தத் தோட்டங்களிலிருந்த தொழிற்சங்கங்கள் இந்தப் பிரச்னையைக் கண்டுகொள்ளவேயில்லை. தனி மனிதர்களாக அத்தருணத்தில் இவர்கள் செய்த சமூகப்பணி போற்றத்தக்கது என்பதில் ஐயமில்லை.
அது மட்டுமல்ல , அரசு மகாவெலகந்த, மடவெளை தோட்டங்களை சுவீகரித்த கையோடு , அத்தோட்டங்களில் இயங்கிக்கொண்டிருந்த தோட்டப்பாடசாலைகளை மூடிவிட்டன. இந்தத் தோட்டப்பாடசாலைகளில் பயின்று கொண்டிருந்த மாணவர்களின் கல்வி இடைநிறுத்தப்பட்டது.
இப்பாடசாலைகளை மீண்டும் தொடங்கிட அப்போது தம்புள்ள பாராளுமன்றத் தொகுதியின் பிரதிநிதியாகவும் கலாசார அமைச்சராகவும் இருந்த டி.பி.தென்னக்கோன் அவர்களிடம் மனுவைச் சமர்ப்பித்து, அவர் கல்வி அமைச்சின் செயலாளராகவிருந்த ரிச்சர்ட் உடுகம அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்து, மீண்டும் தோட்டப்பாடசாலைகள் இயங்க ஆரம்பித்தன.
இவற்றிற்கு ஆதாரமாக இருந்து செயற்பட்டவர்கள் எச்.எச்.விக்ரமசிங்கவும் மாத்தளை வடிவேலனுமே ஆவர். அமைச்சர்களாக, அமைச்சின் உயர் பதவியில் அமர்ந்திருப்பவர்களாக ஆற்றப்பட்ட பணிகள் அல்ல இவை. வெறுஞ் சாமானியர்களாக, எந்த விசிட்டிங் கார்டும் இல்லாதவர்களாக அதிகார பீடங்களை நாடி, ஏழை எளியவர்களுக்காகப் போராடியவர்கள் இவர்கள். அவை இரண்டு கொத்து அரிசி வாங்கிக் கொடுத்ததாக இருக்கட்டும், பதவி உயர்வுக்காக அமைச்சரிடம் மனுக் கொண்டு போவதாக இருக்கட்டும், இம்மாதிரிச் சின்னச்சின்ன வேலைகளை எல்லாம் எடுத்துப்போட்டுக்கொண்டு வேலை செய்யும் மனம் பெரிது.
மிகுதி அடுத்தவாரம்.