டி20 போட்டிகளில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சூர்ய குமார் யாதவ் டி20 போட்டிகளில் 1164 ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 187.43 ஆக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 68 சிக்சர்களை டி20 போட்டிகளில் அடித்துள்ளார். இது எந்த பேட்ஸ்மேனும் இதுவரை செய்யாத சாதனையாக டி20 கிரிக்கெட் வரலாற்றில் உள்ளது.
சிறந்த வீரராக சூர்யகுமாரை அறிவித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டி20 ஃபார்மேட் போட்டிகளில் வியக்கும் வகையில் சூர்யகுமார் யாதவ் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டில் அவரது ஆட்டம் பாராட்டும் வகையில் உள்ளது. டி20 வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் செய்யாத சில சாதனைகளை சூர்யகுமார் ஏற்படுத்தியுள்ளார். பல மேட்ச்களில் அவர் அற்புதமாக விளையாடியுள்ளார். அவற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நாட்டிங்ஹாமில் நடந்த டி20 போட்டியின்போது 55 பந்துகளில் 117 ரன்களை குவித்தார். அந்த மேட்ச் மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்று. அது அவருடைய டி20 போட்டிகளில் முதல் சதம். அவரை கடந்த ஆண்டின் டி20 ஃபார்மேட்டுக்கான மிகச்சிறந்த வீரராக அறிவிக்கிறோம்’ என்று கூறியுள்ளது.
இதற்கிடையே, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 360 ரன்கள் விளாசிய இந்திய அணியின் சுப்மன் கில் ஒருநாள் பேட்ஸ்மேனுக்கான ஐசிசி தரவரிசையில் 20 இடங்கள் முன்னேறியுள்ளார் 6ஆவது இடத்தில் உள்ளார். 2023ஆம் ஆண்டை சுப்மன் கில் அற்புதமாக தொடங்கியுள்ளார். நியூசிலாந்திற்கு முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளிலும் கில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் விளையாடினார். இந்தாண்டில் மொத்தம் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 567 ரன்களை அவர் குவித்துள்ளார். சராசரி 113.40 ஆக உள்ளது. ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக விளையாட கில் பொருத்தமானவரா என்ற விமர்சனங்கள் முன்பு எழுந்த நிலையில், அவை அனைத்திற்கும் கில் பதிலடி கொடுத்துள்ளார். 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் 1,254 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் 4 சதங்களும், 5 அரைச் சதங்களும் அடங்கும். சராசரி 73.76 ஆக உள்ளது. பெஸ்ட் ஸ்கோர் 208.