(26.01.2023)
(மன்னார் நிருபர்)
மன்னார் மாவட்டத்தில் உள்ள கோரை குளம் பகுதிக்கு ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருகை தருவதன் அடிப்படையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்த பறவைகளை பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்ட பறவைகள் கண்காணிப்பகம் இன்றைய தினம்(26) வியாழக்கிழமை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பெண்கள் மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் “வேல்ட் ஓரியன் கிளப்” மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையில் பறவைகள் மற்றும் ஈரநிலம் தொடர்பாக பணியாற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்பில் குறித்த கண்காணிப்பகம் அமைக்கப்பட்டு வைபவரீதியாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல் ,மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் பேராதனை பல்கலைக்கழக தாவர அறிவியல் பேராசிரியர் நிமல் குணதிலக, மழைக்காடுகள் தொடர்பான பேராசிரியர் சாவித்திரி குணதிலக, பறவைகள் ஆய்வு பேராசிரியர் சம்பத் செனவிரட்ன மற்றும் கயோமினி ,பெண்கள் மேம்பாட்டு பேரவை மாவட்ட இணைப்பாளர் ரெபேக்கா மெராண்டா, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட அமைப்பின் பிரதிநிதிகள்,கல்வி திணைக்கள அதிகாரிகள்,கடற்படை உயர் அதிகாரிகள்,விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வின் இறுதியில் ஈரநிலங்களின் முக்கியத்துவம் மற்றும் மன்னார் நோக்கி இடம் பெயரும் வெளிநாட்டு பறவைகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான தெளிவு படுத்தலும் வழங்கப்பட்டது.
அதே நேரம் மன்னார் மாவட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள பறவைகள் கழகத்தின் அங்குரார்ப்பணம் இடம்பெற்றதுடன் அக் கழகத்துக்கு தேவையான தொலைநோக்கி உள்ளடங்களான தொழில்நுட்ப கருவிகளும், புத்தகங்கள், வழங்கி வைக்கப்படமை குறிப்பிடத்தக்கது