கனடாவில் இயங்கிவரும் ‘கைலாசா அமைப்பு’ நடத்திய தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்
கனடாவில் பல வருடங்களாக சிறந்த முறையில் இயங்கிவரும் ‘கைலாசா அமைப்பு’ நடத்திய தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்ட நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று 21ம் திகதி மதியம் அளவில் மார்க்கம் நகரில் அமைந்துள்ள ‘இரா விழா மண்டபத்திில் சிறப்பாக நடைபெற்றது.
கனடா ‘கைலாசா அமைப்பின்’ இயக்குனர் சபை மற்றும் தொண்டர்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழாவிற்கு பல முக்கிய விருந்தினர்கள் அழைக்கப்பெற்றிருந்தனர்.
பிரம்ரன் மாநகர பிதா பெற்றிக் பிறவுண் அவர்கள். ஒன்றாரியோ மாகாண சபையின் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதியின் மக்கள் உறுப்பினர் அரிஸ் பாபிகியன் அவர்கள் மற்றும் மார்க்கம் மாநகர சபையின் 7ம் வட்டார உறுப்பினர் வனிதா நாதன் ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
விழா ஆரம்பத்தில் உலக கைலாசா அமைப்பின் நிறுவனர் மகாசந்திதானம் சுவாமி நித்தியானாந்த அவர்களின் திருவருவப் படத்திற்கு மரியாதை செய்யப்பெற்று பின்னர் மண்டபத்திற்கு அதை ஊர்வலமாக எடுத்து வந்தார்கள்.
தொடர்ந்த பக்தியும் பரவசமும் நிறைந்த விழாவாக இந்த தமிழர் மரபுரிமை நாள் நகர்ந்து சென்றது.
இந்த விழாவில் கனடாவில் பல துறைகளில் சிறந்து விளங்கும் பலருக்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப் பெற்றன. பாடகர் பிரபா அவர்கள் தெய்வீகப் பாடல் ஒன்றை இசைத்து சபையோரை மகிழ்வித்தார்.
கவிஞர் இராஜ்மீரா இராசையா அவர்கள் கவிதை ஒன்றை இயற்றிப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தார்.