இலங்கையின் நிர்வாக சேவை பதவிகளில் அரசாங்க அதிபர் எனனும் அந்தஸ்த்து அதிகம் உள்ள உயரிய பதவிக்குரிய ஆசனங்களில் இதுவரை ஆயிரக்கணக்கானவர்கள் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்களில் அந்தந்த மாவட்டங்களில் வாழும் அல்லது வாழ்ந்த மக்களால் இன்றும் போற்றிப் புகழப்படுகின்றவர்களாக பலரின் பெயர்களைக் குறிப்பிடலாம்.
இவ்வாறாக, யாழ்ப்பாண அரச அதிபரின் ஆசனத்தை இதுவரை காலமும் அலங்கரித்த தமிழர் அல்லது தமிழர் அல்லாதவர்களின் புகைப்படங்கள் இன்னும் யாழ்ப்பாண செயலகத்தில் காட்சிப்படுத்தப்பெற்றுள்ளன. சுமார் நாற்புத வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண அரச அதிபராக விளங்கிய சிலரது பெயர்கள் எம்மவர்களுக்கு இன்னும் ஞாபகத்தில் தொடரும் பெருமை மிக்கவை.
அவர்களில் தமிழர் அல்லாத லயனல் பெர்ணான்டோ மற்றும் தமிழராக தேவநேசன் நேசையா ஆகிய இருவரையும் குறிப்பிடலாம். இவர்கள் இருவரதும் பணிகாலத்தில் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டம் பரப்பளவில் விரிந்ததாக இருந்தது தற்போதைய கிளிநொச்சி மாவட்டம் மன்னார் மாவட்டம் போன்றைவை யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் அடங்கிய காலம் ஒன்று இருந்தது. புரப்பளவில் பெரிதான மாவட்டமாக இருந்தாலும் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகள் அதிகம் இருந்ததாக கூறமுடியாது.
பின்னாளில் மன்னார் மாவட்டமும் கிளிநொச்சி மாவட்டமும் தனியான மாவட்டங்களாக அறிவிக்கப்பெற்று தொடர்ந்து அவரை இயங்கத் தொடங்கிய காலப்பகுதியில் வடக்கு கிழக்கும் மற்றும் மத்திய மாகாணங்களில் சுமூகமான நிலை இருக்கவில்லை. தமிழ் இளைஞர்களின் ஆயதப் போராட்டத்தின் தொடக்கப் பகுதியில் மாவட்ட நிர்வாகங்கள் எந்தவிதமான சீர்குலைவும் இல்லா நிலை காணப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவ்வாறன நிலை தொடரக்கூடியதான சாதகமான சூழ்நிலை மாற்றமடையத் தொடங்கியது.
இந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அரசாங்க அதிபராக பதவி வகித்தவர்கள் சந்தித்த சவால்கள் மிக அதிகம் என்றே சொல்லலாம். அந்த காலப்பகுதியில் அரசாங்க சேவை அல்லது உள்;ராட்சி சேவை ஆகியவற்றில் எந்த பதவிகளில் பணியாற்றியவர்களுக்கெல்லாம் அன்றிருந்த நெருக்கடியான அல்லது கொந்தளிப்பு மிக்க நிலை தெளிவாகத் தெரிகின்ற காட்சியாக விளங்கியது.
அவ்வாறான காலப்பகுதியில் சிறந்த மக்கள் சேவையாளன் ஆனால் கண்டிப்பு மிகக் கொண்டவர்கள் என்ற பெயரோடு யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த பஞ்சலிங்கம் அவர்கள் தனது உயிரைப் பலி கொடுக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை அன்று தோன்றியது.
ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையின் பிற மாவட்டங்களில்; அரசாங்க அதிபர்களாக பணியாற்றும் ஒவ்வொருவரும் எதிர் கொள்ளும் சவால் முன்னையது போன்று இல்லாவிடினும் நிதிப் பற்றாக்குறையினால் அவதிப்படும் அரசாங்கம் ஒன்றின் நிர்வாகப் பிரிவுத் தலைவராக பணியாற்றுவது என்பது சாதாரண விடயம் அல்ல என்பதையும் அனைவரும் அறிவார்கள்.
இவ்வாறான ஒரு நாட்டைப் பாதிக்கும் பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த பல ‘சிக்கல்கள’; தலைவிரித்தாடும் நேரத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பெற்றுள்ள உயர்திரு சிவபாதசுந்தரம் அம்பலவாணர் அவர்கள் வரவேற்று இவ்வாரத்தின் கதிரோட்டத்தின் பக்கத்தையும் நாம் அலங்கரிக்க விரும்புகின்றோம்.
அவரது கடந்த கால அரச சேவை மற்றும் அவர் வகித்த உயர் பதவிகள் போன்றவை தேசத்தில் உள்ள பல தரப்பட்ட மக்களாலும் அரசியல்வாதிகளாலும் உற்று நோக்கப்பெற்றுள்ளன என்பதே இந்த பதவி அவரைச் தேடிச் சென்று ஒப்படைக்கப்பட்டுள்ளதற்கு சான்றாகும். நாம் அறிந்த வரையில் மனித நேயமிக்க ஒருவராகவும் தேடல் மிகக் கொண்ட ஒரு வாசகராகவும் தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் ஒரு ஆர்வலராகவும் படைப்பாளியாகவும் காணப்படும் அவரது பிற ஆற்றல்கள் மற்றும் ஈடுபாடுகள். தனது புதிய பதவியை பக்குவமாகத் தொடர்வதற்கு துணையாக நிற்கும் என்ற வாழ்த்துக்களோடு அவரது எதிர்காலம் மேலும் சிறந்து விளங்கவும் பிரார்த்திக்கின்றோம்.