நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் 2ஆவது போட்டி நாளை லக்னோவில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்தி அணி களம் காண்கிறது. முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மோசமான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்திய நிலையில் ஆடும் லெவனில் நாளை மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுத்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3ஆவது களத்தில் இறங்கிய சாப்மன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரை தவிர்த்து பேட்டிங் யூனிட்டில் ஃபின் ஆலன் 35, கான்வே 52,கிளென் பிலிப்ஸ் 17, டேரில் மிட்ச்செல் 59 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர்.
குறிப்பாக டேரில் மிட்ச்செல் 30 பந்துகளில் 5 சிக்சர் 3 பவுண்டரியுடன் 59 ரன்கள் விரைவாக எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவை தவிர்த்து மற்றவர்கள் ரன்களை வாரி வழங்கினர். அர்ஷ்தீப் சிங் 4 ஓவரில் 51 ரன்களை கொடுத்தார். உம்ரான் மாலிக் வீசிய ஒரே ஓவரில் 16 ரன்கள் சென்றது. கேப்டன் பாண்ட்யா 3 ஓவர்களில் 33 ரன்களைக் கொடுத்தார். பேட்டிங்கை பொருத்தவரை சுப்மன் கில் 7, இஷான் கிஷன் 4, ராகுல் திரிபாதி 0, தீபக் ஹூடா 10 ரன்கள் என மிகமோசமான ஆட்டத்தை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.
இஷான் கிஷன் கடந்த 7 டி20 போட்டிகளில் 37, 2, 1, 5, 8, 17, 4 என ரன்களை எடுத்துள்ளார். இதேபோன்று தீபக் ஹூடாவின் ஆட்டமும் ஏமாற்றம் அளிக்கிறது. இவ்விரு வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களுக்கு நாளை வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. நாளை கட்டாய வெற்றி பெற வேண்டும் என்பதால் கேப்டன் பாண்ட்யா மீதான அழுத்தம் இயல்பாகவே அதிகரித்துள்ளது.