நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர். ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக இழந்த நிலையில் இந்தியாவுடனான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இருப்பினும் இந்த ஆட்டத்தை டிஃபெண்ட் செய்த நியூசிலாந்து 19.5 ஓவர் வரை இந்திய அணியை கொண்டு சென்றது.
2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் மிகக்குறைவான ரன்னை இந்திய அணி கடும் திணறலுக்கு பின்னரே எட்டியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இவ்விரு போட்டிகளிலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சுப்மன் கில், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக இஷான் கிஷன், சுப்மன் கில் ஆகியோர் சமீபத்தில்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்து கவனம் பெற்றார்கள். இந்நிலையில் டி20 போட்டிகளில் இருவரின் பேட்டிங் கவலை அளிப்பதாக உள்ளது.
தொடரை வெல்வது யார் என்பதை இறுதி செய்யும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்த சூழலில் நாளை கட்டாயம் நல்ல ரன்களை எடுக்க வேண்டும் என்கிற நெருக்கடி இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்பட்டுள்ளது. அணியில் சுப்மன் கில்லிற்கு பதிலாக பிரித்வி ஷாவை பயன்படுத்த வேண்டும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், பேட்ஸ்மேன்களில் எந்த மாற்றமும் செய்யாமல் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விளையாடினார். அந்த வகையில் நாளையும் அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.