பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு
இலங்கையை விட்டுப் பிரித்தானிய ஆட்சி நீங்கிய நாளைத் தென்னிலங்கைச் சிங்களதேசம் சுதந்திர நாளாகக் கொண்டாடி மகிழ, தமிழர் தேசம் அதனைக் கரிநாளாகவே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. தமிழர் தேசத்தை ஒற்றையாட்சி என்ற சிறைக்குள் வலுக்கட்டாயமாக முடக்கி வைத்திருக்கும் அரசியலமைப்பில் இந்நாளைச் சுதந்திர நாளாகத் தமிழர்களால் ஒருபோதும் கொண்டாட இயலாது. ஆனால், 75ஆவது சுதந்திர தினத்தைக் கோலாகலமாக இலங்கை அரசாங்கம் கொண்டாடுவதற்குத் தயாராகிவரும் நிலையில் அது சிங்கள தேசத்துக்கும் இருண்ட கரிநாளாகவே அமைந்திருக்கிறது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் சுதந்திரதினம் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள தன்சானியா நாடு அண்மையில் தனது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை இரத்துச் செய்துள்ளது. அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை மாற்றுத்திறன் மாணவர்களுக்கான தங்கும் இல்லங்களை அமைப்பதற்குப் பயன்படுத்துமாறு அந்நாட்டின் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், தன்சானியாவைவிட மிகவும் மோசமான பொருளாதாரச் சீரழிவுக்குள் சிக்கித்திணறிக் கொண்டிருக்கும் இலங்கையில் ஜனாதிபதி உணவின்றித் தவிக்கும் தன் சிங்களதேசத்தைப் பற்றியேனும் சிந்திப்பவராக இல்லை. பெருமெடுப்பில் சுதந்திர தினக்கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகிறார்.
இலங்கைத் தீவின் பொருளாதாரம் இன்று மீண்டெழ முடியாத படுகுழிக்குள் வீழ்ந்து கிடப்பதற்குத் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தமிழர் தேசத்தின் மீது தொடுத்து வந்த யுத்தமே பிரதான காரணம். இதற்கு வித்திட்டது பௌத்த, சிங்கள மேலாதிக்கத்தை நிறுவுகின்ற இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு முறைமையே ஆகும். பிரித்தானியர்களிடம் இருந்து சிங்களத் தலைமைகளிடம் ஆட்சி கைமாறிய நாளில் இருந்து ஒற்றையாட்சி முறைமையின்கீழ் தமிழர் தேசம் தொடர்ந்து அடக்கி ஒடுக்கப்பட்டதன் விளைவாகவே தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தத் தலைப்பட்டனர்.
போரின் தாங்கொணாக் கடன் சுமையை தமிழ் மக்களுடன் சேர்ந்து சிங்கள மக்களும் சுமந்து நிற்கின்றனர். தென்னிலங்கை அரசியல் தலைமைகள் இது குறித்து அக்கறை கொள்ளவில்லை. மாறாக, தொடர்ந்தும் தமிழர் தேசத்தை அடக்கி ஒடுக்குவதில் மட்டுமே குறியாக இருக்கின்றன. தமிழர் தனியானதொரு தேசம் என்று இலங்கையின் அரசியலமைப்பு அங்கீகரிக்காதவரை தமிழர்களுக்குச் சுதந்திரதினம் கரிநாளாகவே இருக்கும். தமிழர்களுக்கு விடிவு கிடைக்காத வரைக்கும் சிங்களதேசமும் இருண்டதாகவே இருக்கும் என்ற நிதர்சனத்தைச் சிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.