விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றுவது எப்படி? என்பது குறித்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு முன்னாள் வீரர் ஜெஃப் தாம்சன் ஆலோசனை வழங்கியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதைத் தொடர்ந்து, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வலுவான நிலையில் ஆஸ்திரேலியா அணி இருப்பதால், இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 போட்டிகளைக் கொண்ட இந்த கிரிக்கெட் தொடர் வரும் 9ஆம் தேதி தொடங்கி மார்ச் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த கடந்த 3 தொடர்களில் ஆஸ்திரேலிய அணியால் ஒருமுறைகூட வெற்றி பெற முடியவில்லை.
இன்னொரு பக்கம் கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து, உள்ளூரில் நடந்த எந்த ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் இந்திய அணி இழக்கவில்லை. தற்போது இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் நல்ல பார்மில் இருப்பதால், இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு விராட் கோலி மிகுந்த சவாலாக இருப்பார் என்று சர்வதேச கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரது விக்கெட்டை கைப்பற்றுவது குறித்து, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் தாம்ஸன் சில ஆலோசனைகளை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது- விராட் கோலிக்காக பிரத்யேகமாக பந்துவீச தேவையில்லை. மற்ற வீரர்களுக்கு எப்படி பேச வேண்டுமோ அதே போன்று அவருக்கு வீச வேண்டும். ஆனால் அவர் ரன் எடுக்க சிரமப்படும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு இருக்க வேண்டும். ஒரு ரன்னை கூட அவர் மிகவும் கஷ்டப்பட்டு எடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சும், ஃபீல்டிங் வியூகமும் அமைந்திருக்க வேண்டும். இயல்பாகவே விராட் கோலி ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர். அவர் விளையாடும்போது ரன் எடுக்கப்படவில்லை என்றால் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார். அப்போது தவறான ஷாட்களை அடித்து நிச்சயமாக ஆட்டம் இழப்பார். எனவே அவரை ரன் எடுக்க விட்டுவிடக்கூடாது. இவ்வாறு ஜான்சன் கூறியுள்ளார்.