-நக்கீரன்
கோலாலம்பூர், பிப்.04:
மலேசியாவில் சுற்றுலாத் தலமாக விளங்குவதுடன் இந்து சமய மையமாகவும் உருமாறிவரும் பத்துமலை அருள்மிகு திருமுருகன் ஆலயத்தில் இன்று மாலை சேவற்கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கும் 133-ஆவது தைப்பூச நந்நாள் தொடர்பில் அருள்மிகு கோலாலம்பூர் மாரியம்மன் தேவஸ்தானத்-திற்குட்பட்ட மாரியம்மன் ஆலயத்தில் இருந்து நேற்றிரவு பத்து மணியளவில் வெள்ளி ரதம் புறப்பட்டது.
நேற்று பிற்பகல் 2:00 மணியிலிருந்தே அருள்மிகு மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ள கோலாலம்பூர் துன் எஸ்.லீ சாலை முதல் ரத ஊர்வலம் இடம்பெறும் பாதை நெடுகிலும் மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டு, பக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டு, ஆன்மிக சூழல் கலைகட்டத் தொடங்கி இருந்தது.
நேரம் செல்ல செல்ல, துன் எஸ்.லீ சாலைப் பகுதியில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரளத் தொடங்கினர். கடந்த ஈராண்டுகளாக தைப்பூச ரத ஊர்வலத்தின்போது பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்-பட்டிருந்ததாலோ என்னவோ, இவ்வாண்டு நாட்டின் மையப் பகுதியான கிள்ளான் பள்ளத்தாக்கில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் ரத ஊர்வலத்தில் பங்குகொள்ள ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
வழி நெடுகிலும் அரசியல் கட்சிகள், செய்தித் தாள் அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள், தொழில் முனைவர்கள் என்றெல்லாம் ஏராளமான தரப்பினர் தண்ணீர்ப் பந்தல் அமைத்து, ஊர்வலத்தில் கலந்து கொண்ட சமய அன்பர்களுக்கு சுவை நீரையும் நந்நீரையும் தாராளமாக வழங்கினர்.
குறிப்பாக, மலேசிய இந்தியர் காங்கிரஸ்(மஇகா) சார்பில் பெரும் பந்தல் அமைக்கப்பட்டு ஆன்மிக இன்னிசைக் கச்சேரி நடத்தப்பட்டது. மஇகா தேசிய துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ மு.சரவணன் தலைமையில் அக்கட்சியினர் அணிதிரண்டு ரதத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.
தமிழ்க் கடவுள் திருமுருகன், வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்திருந்த ரதம் ராஜா லாவுட் சாலையை எட்டும்பொழுது விடியற்காலை 4:00 மணியாகிவிட்டது. ரத ஊர்வலம் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதற்குள் அதிகமான பக்தர்கள் பத்துமலை முருகன் ஆலயத்தை நடந்தே அடைந்துவிட்டனர்.
தொடர்ந்து பாதை எங்கெனும் பக்தர்கள் சாரைசாரையாக நடந்து கொண்டிருந்தனர்.
வேடிக்கைப் பார்ப்பதற்காக திரண்டவர்கள் சொற்பமான பேராக இருந்த வேளையில், மிகப் பெரும்பாலோர் வருங்கால திருமணம், திருமணம் முடித்தவர்கள் தங்களுக்கான நிறைவான வாழ்க்கை, மகப்பேறு, நல்ல எதிர்காலம் உள்ளிட்ட வேண்டுதல்களை இலக்காகக் கொண்டு இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஒரு சில பக்தர்கள் சிறிய கலத்தில் பால் ஏந்தியும், மற்றும் சிலர் சிறு காவடி சுமந்தும் ஊர்வலத்தில் பங்கு கொண்டனர். அதேவேளை, இளைஞர் பட்டாளம் ஓரோர் இடத்தில் தத்தம் மோட்டார் வாகனத்துடன் குழுமியிருந்தனர். நடை தளர்ந்த பலர், சாலை மருங்கில் அமர்ந்தபடி ஆங்காங்கே இளைப்பாறியதையும் காண முடிந்தது.
உருமி மேளக் குழுவினர், பக்திப் பரவசம் பெருக்கெடுக்கும் வகையிலும் தங்களை விளம்பரப்படுத்தும் நோக்கிலும் தன்னார்வ முறையில் உருமி இசையுடன் பாடிக் கொண்டிருந்தனர்.
தைப்பூச விழா என்பது, திருமுருகக் கடவுளுக்கு உரிய விழாவாகும். இதைக் கருதாமல் ஒருசில பக்தர் கூட்டம் முரணான வகையில் நடந்து கொண்டது. இராமர் படத்தை வைத்துக் கொண்டு கிருஷ்ண கடவுளுக்கான பஜனையைப் பாடிக் கொண்டிருந்தது அக்கூட்டம்.
ராஜா லாவுட் சாலையில் இரு வாகனங்களில் ஒன்றில் திருமுருக சிலையையும் இன்னொன்றில் விநாயகக் கடவுள் சிலையையும் வைத்து அலங்காரப்படுத்தி இருந்தனர். ரதம் வரும்போது உடைப்பதற்காக தென்னம் மட்டையைப் பரப்பி அதில் தேங்காய் குவிக்கப்பட்டிருந்த அந்த இடத்தில் இசைக்கப்பட்ட பாடல் ஐயனாரைப் பற்றியதாக இருந்தது.
ஆண்டுதோறும் இத்தகையப் போக்கைக் கண்டிருந்த ஆன்மிகத் தலைவர்கள், தைப்பூச விழாவை முருகக் கடவுளுக்கு உரியதாக அனுசரிக்க வேண்டும் என்று ஒன்றுக்கு பல தடவை முன்னெச்சரிக்கையுடன் அறிவுறுத்தி இருந்தும், இதை யெல்லாம் பொருட்படுத்தாத சிலர், தான் தோன்றித்தனமாக நடந்து கொண்டது, முருகக் கடவுளுக்கான கௌமார வழிபாட்டை சிதைப்பதாக இருந்தது.
அதைப்போல, ராஜா லாவுட் சாலையில் பெர்த்தாமா வணிக வளாகத்தின் பின்பகுதியில் ரத ஊர்வலம் வந்த பாதையில் காலியான மதுப் புட்டிகள் நிறைந்த பையை வைத்துள்ளனர். அதிலிருந்த மது ‘டின்’கள் சிதறிக் கிடந்தது, அந்த வழியே வந்த பக்தர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு மனம் நெருடலானது; இத்தனைக்கும் ஒரு காவல்காரர் அதன் அருகே பணியில் இருந்தார். இது, பண்பு நலம் குறைந்தவர்களின் செயலா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்ட அடாத செயலா என்பது தெரியவில்லை.
எவ்வளவுதான் நாகரிகம் வளர்ந்தாலும் சமய சான்றோர்கள் ஆன்மிக அறிவைப் புகட்டினாலும் கல்வியறிவு வளர்ந்தாலும் பொல்லாத மக்கள் எல்லா இடத்திலும் எல்லா வேளையிலும் தங்களின் கீழான செயலை வெளிப்படுத்த நாணுவதில்லை.