போதை ஒழிப்பை உள்ராட்சி வேட்பாளர்களில் இருந்து ஆரம்பிப்போம்
பொ. ஐங்கரநேசன் அறைகூவல்
யுத்தத்துக்குப் பின்னர் தமிழ் மக்களிடையே போதைப்பொருட் பாவனையும் இதன் விளைவாக வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. போதையில் மிதக்கும் அரசியல்வாதிகள் போதைப்பொருள் எதிர்ப்பு ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கும் இழிவு அரசியலே இங்கு நிலவுகிறது. போதை அரசியல்வாதிகளால் மக்களுக்கு ஒருபோதும் சரியான பாதையை வழிகாட்ட முடியாது. எனவே இந்த உள்ராட்சித் தேர்தலில் போதை வேட்பாளர்களையும் வாக்குகளுக்காக மதுபானங்களை விநியோகிக்கும் வேட்பாளர்களையும் நிராகரிப்போம். போதை ஒழிப்பை உள்ராட்சி வேட்பாளர்களில் இருந்து ஆரம்பிப்போம் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அறைகூவல் விடுத்துள்ளார்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நல்லூர் பிரதேசசபைத் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுகின்றது. இதன் பரப்புரைக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.02.2023) கோண்டாவிலில் இடம்பெற்றபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், விகிதாசார முறையில் நடைபெறும் உள்ராட்சித் தேர்தலில் ஒவ்வொரு சபைக்கும் நூற்றுக்கணக்கானவர்கள் போட்டியிடுகின்றார்கள். இவர்கள் நண்பர்களாகவும் அயலவர்களாகவும் உறவினர்களாகவும் இருக்கும்போது யாருக்கு வாக்களிப்பதென்று முடிவெடுக்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். தேர்தல்களில் வேட்பாளர்களின் தெரிவு நட்புநிலை சார்ந்தும் உறவுநிலை சார்ந்தும் அமைந்தால் ஒருபோதும் தகுதியான வேட்பாளர்களைத் தெரிவு செய்யமுடியாது. எனவே, மக்கள் தெரிந்தவர்கள், உறவினர்கள் என்ற வட்டங்களையும் தாண்டிச் சிந்தித்துத் தகுதியானவர்களை அடையாளங்கண்டு வாக்களிக்க முன்வர வேண்டும்.
உள்ராட்சிச் சபைகள் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் நிறைவேற்றிக் கொடுப்பதற்கென உருவாக்கப்பட்ட அமைப்புகள். மக்களின் நல்வாழ்வை உறுதிசெய்யும் வகையில் அபிவிருத்திப் பணிகளைத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களினூடாக முன்னெடுப்பதே இவற்றின் முதன்மைப்பணி. இவை தேசிய அரசியலைப் பேசும் களங்கள் அல்ல. ஆனாலும், தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் அரசியல் நிலைப்பாடு பற்றிக் கவனங்கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாத நிலையில் தெரிவுசெய்யப்படுபவர்கள் தமிழ்த்தேசிய அரசியலில் இருந்து ஒருபோதும் வழுவாதவர்களாக இருப்பதை வாக்காளர்கள் உறுதிசெய்யவேண்டும்.
தமிழ்த்தேசிய நிலைப்பாடு மட்டுமே ஒரு வேட்பாளரின் தகுதியாக இருக்கமுடியாது. உள்;ராட்சிச் சபைகளில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியம் பேசும் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களிற் பலரின் நடவடிக்கைகள் முகஞ்சுழிக்க வைப்பதாகவே இருக்கின்றன. மக்கள் நலன்களைப் புறந்தள்ளி ஆட்சிக்கவிழ்ப்பிலே குறியாக இருப்பவர்களாகவும் சபையிலேயே சாதியம் பேசுபவர்களாவும் இருக்கிறார்கள். வாக்கு வங்கிக்காக வன்முறைக் கும்பல்களை வளர்த்தெடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, தெரிவுசெய்யப்படும் ஒருவர் அரசியல் அறம் கொண்டவராகவும் தனிமனித ஒழுக்கம் பேணுபவராகவும் இருப்பதை வாக்காளர்கள் உறுதிசெய்யவேண்டும் என்றும் தெரிவித்தார்.