ரிஷப் பந்த் கன்னத்தில் அறைவேன் என்று கிரிக்கெட் லெஜெண்ட் கபில் தேவ் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருந்தவர் ரிஷப் பந்த். மேட்ச்சின்போது ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை ரிஷப் பந்த் ஒருபோதும் மாற்றிக் கொள்ள மாட்டார். பல முறை ஆட்டத்தின் போக்கையே மாற்றி ரசிகர்களின் பாராட்டுக்களை ரிஷப் பந்த் பெற்றிருக்கிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் தற்போது மும்பையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
ரிஷப்பின் தலை நெற்றி, முதுகு, கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது 2 அறுவை சிகிச்சைகள் அவருக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், காயத்திலிருந்து சிறிது சிறிதாக ரிஷப் பந்த் மீண்டு வருகிறார். ரிஷப பந்த் இடம்பெறாதது இந்திய அணிக்கு இழப்பாக மாறியுள்ளது. இவரது இடத்தை கே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஆகியோர் நிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரிஷப் பந்த் கன்னத்தில் அறைவேன் என்று கிரிக்கெட் லெஜெண்ட் கபில் தேவ் கூறியுள்ளார். அவரது பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் குறித்து கபில்தேவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- ரிஷப் பந்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது பேரன்பு வைத்துள்ளேன். அவர் விரைவில் குணம் அடைந்து மைதானத்திற்கு திரும்ப வேண்டும். அந்த நேரத்தில் அவரது கன்னத்தில் பலமாக அறைவேன். ஏனென்றால் அவர் தன்னுடைய நலனை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை. அவருக்கு ஏற்பட்ட காயத்தால் இந்திய அணி இன்னும் சிறப்பான நிலையை அடையவில்லை. அவர் அணியில் இருந்தால் இந்திய அணியின் பலம் அதிகரித்திருக்கும். இதனால்தான் அவர் விரைந்து குணம் அடைய வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.