கதிரோட்டம் 10-02-2023
ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கின்ற தாயானவள். அந்தக் குழந்தையோடு இந்த பூமியில் தன் வாழ் நாள் முழுதும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று தான் தனது எதிர்காலத்தை திட்டமிடுவாள். அந்தத் தாயைப் பெற்றெடுத்த அவளது தாய் கூட அவ்வாறே சிந்தித்து இருப்பாள். இவ்வாறாக இந்த பூமித்தாய் தன் மடியில் ஏற்கும் மக்களை பல்வேறு வழிகளில் வாழ வைக்கின்றாள்.
மனிதப் பிறப்பெடுக்கும் ஒவ்வொருவக்கும் தேவையான அனைத்தையும் வழங்குகின்ற எமது பூமித்தாய் இறுதி வரை எமக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டாள் என்றே நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கைகளை கைகளில் எடுத்துக் கொண்டு எமது வாழ்க்கையை தொடருவதுண்டு.
நாம் சுவாசிக்கும் காற்று. நமக்கு தேவையான உணவு. எமது மானங்காக்கும் ஆடை. அருந்தும் நீர் இன்னும் இது போன்ற பஞ்ச பூதங்களை எமக்காகப் படைத்து பத்திரமாக எம்மை தாங்கி நிற்கும் பூமித்தாய் எம்மைப் பெற்ற அன்னையைப் போன்றவள் என்று தான் உலகில் எந்த ஒரு நாட்டில் வாழுகின்ற ஒரு மனிதனோ அன்றி எந்த ஒரு கடவுளை வணங்குகின்றவரும் எண்ணியிருப்பதுண்டு.
ஆனால் இத்தனை நாட்களாக அல்லது வருடங்களாக எம்மைத் தாங்கி நின்ற பூமித்தாய் திடீரென ஒரு நாள் எம் வாழ்க்கையையும் பறித்து பேரழிவு அல்லது இயற்கை அனர்த்தம் அல்லது பூகம்பம் என்ற பெயரில் வாழ்ந்த அந்த பிரதேசத்தையே பிணக்காடாக மாற்றுவாள் என்று எதிர்பார்த்திருப்பார்களா?
இவ்வாறாக இயற்கையின் அழிவைச் சந்தித்த துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களைப் பற்றியும் அழிவுற்ற இந்த நாடுகளுக்கு தேவையான அவசர உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்ற நாடுகள் பற்றியும் இடிந்து விழுந்த கட்டடங்களின் சிதைவுகளுக்குள்ளே இருந்து அகற்றப்படுகின்ற உயிரற்ற உடல்கள் மற்றும் உயிரோடு மீட்கப்படும் எம் உடன் பிறவா உறவுகள் ஆகியவை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில் எமது இவ்வார கதிரோட்டத்தை நாம் வடிக்கும் நேரத்தில் நாம் உள்ளோம்.
உலகின் பல பாகங்களிலிருந்தும் பாதிக்கப்பட்ட அந்த நாடுகளுக்கு உதவிகள் விரைகின்றன. கனடா. இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் தாராளமான உதவிகளை செய்வதற்கான ஆரம்ப வேலைகளை ஆற்றத் தொடங்கிவிட்டன. கொடுமையிலும் கொடிதான இந்த துயரத்தை எங்கள் கண்முன்னே கொண்டு வரும் தொலைக் காட்சிகளை பொழுது போக்காக பார்த்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக நாமும் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்க செஞ்சிலுவைச் சங்கங்கள் போன்ற அமைப்புக்களை நாட வேண்டும்.
சுற்றத்தாரை கதறியழ வைக்குதுருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பம் பாதித்த பகுதிகளில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே அதிகளவில் சடலங்கள் மீட்பகப்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை 25000 என்ற எண்ணிக்கையை கடந்து விட்டது. பலர் உயிருடனும் மீட்கப்பட்டனர். என்ற செய்திகள் இன்னும் வந்து கொண்டே உள்ளன.
தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ஆம் திகதி ஏற்பட்ட பயங்கர பூகம்பம் ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது எனவும். இதனால் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின எனவும் நாம் அறிந்துள்ளோம். நாம் அறிகின்ற செய்திகளை விடவும் அந்த இழப்புக்கள் மற்றும் தேசத்து மக்களின் வலிகள் நிறைந்த மீட்புப் பணிகள் எவ்வளவு சவால்கள் நிறைந்தவை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
பல்வேறு நாடுகளில் இருந்து துருக்கி சென்றுள்ள மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியை தொடங்கினர் எனவும் குறிப்பாக இந்தியாவிலிருந்து சென்ற நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு பயனுள்ள பணிகளை ஆற்றுவதாக எமது இந்தியச் செய்தியாளர் அறிவித்துள்ளார்.
கடும் குளிருக்கு இடையிலும் மீட்பு பணி இரவு பகலாக தொடர்ந்தது. பலர் உயிருடன் மீட்கப்பட்டனர் எனவும் கட்டிட இடிபாடுகள் இடையே மீட்கப்படும் சடலங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளன எனவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இதனால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 25000ஐ கடந்து விட்டது. துருக்கியில் மட்டும் உயிரிழப்பு 18,00 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் உயிரிழப்பு 3,377 ஆக அதிகரித்துள்ளது. சேதமடைந்த கட்டிட இடிபாடுகளை மீட்பு படையினர் தொடர்ந்து அகற்றி வருகின்றனர் எனவும் அறியப்படுகின்றது.
பூகம்பம் ஏற்பட்டு 3 நாட்கள் ஆகிவிட்டதாலும், கடும் குளிர் நிலவுவதாலும், இன்னும் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை குறையத் தொடங்கியுள்ளதாகவும் எனினும் தேடுதல் பணிகள் கட்டட இடிபாடுகளை அகற்றி உயிர்தப்பியுள்ளவர்களை விடுவிப்பது போன்ற பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன என்பதும் இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் என்பதையும் இந்த நேரத்தில் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றோம்