சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
இருநாட்களிற்கு முன்னர் இலங்கையின் முன்னணி சட்டத்தரணி ஒருவரிடம் பயங்கரவாத தடைச் சட்டம், அதன் பாதிப்பு அது நீக்கப்பட வேண்டிய அவசியம் ஆகியவை குறித்து பொதுவாக ஒரு உரையாடலை மேற்கொண்டிருந்தேன். அந்த உரையாடல் குறித்த சில கருத்துக்களை இக்கட்டுரையின் பிற்பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு முன்னதாக ஒரு பழைய விஷயம் எனது நினவைற்கு வந்தது.
பத்தாண்டுகளிற்கு முன்னர் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல சஞ்சிகையான டைம் தனது அட்டைப்படத்தில் பிக்கு ஒருவரின் படத்தை வெளியிட்டது. டைம் பத்திரிகையின் அட்டையில் ஒருவரது படம் வருவது என்பது பொதுவாக மிகவும் பெருமைக்குரிய ஒரு விஷயம். உலகின் முன்னணி அரசியல் தலைவர்கள், சமூகத்தில் அருந்தொண்டாற்றியவர்கள், சாதனைப் படைத்த விளையாட்டு வீரர்கள், தலைசிறந்த பெண்கள் அந்தப் பட்டியல் நீளும். கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் திகதியிட்டு வெளியான இதழில் மியான்மார் (பர்மா) நாட்டிலிருக்கும் பௌத்த பிக்கு அசின் விராத்துவின் படம் வெளியாகியிருந்தது. ஆனால் அதற்கான காரணம் வேறு.
அசின் விராத்து எதிர்மறையான ஒரு விஷயத்திற்காக அட்டைப்படச் செய்தியானார். அவரது படத்திற்கு கீழ் ஆங்கிலத்தில் “The face of Buddhist Terror” பௌத்தத்தின் பயங்கரவாத முகம் தலைப்பிடப்பட்டிருந்தது. பர்மாவில் முஸ்லிம்களிற்கு எதிராக அவர் தலைமையிலான பிக்குகள் முன்னெடுத்த வன்செயல்கள் மற்றும் இனவாதப் பிரச்சாரம் ஆகியவற்றால் ஏற்பட்ட விளைவுகளை மையப்படுத்தி அந்த கட்டுரை எழுதப்பட்டிருந்தது. மேலும் தீவிரவாத பிக்குகள் எப்படி ஆசியாவில் இஸ்லாமியர்களிற்கு எதிரான வன்முறையை தூண்டுகிறார்கள் என்கிற வாசகமும் கட்டுரையை வாசிக்க ஈர்க்கும் முகமாக அட்டையில் பிரசுரமாகியிருந்தது.
அந்த சமயத்தில் ஒரு நாள் மாலை கோடைக்காலத்தில் அந்தக் கட்டுரை பற்றிய பேச்சு எமது பிபிசி சகாக்களிடையே எழுந்தது. பொதுவாக அமைதியை போதிக்கும் பௌத்த மதத்தை சேர்ந்த சில பிக்குகள் இவ்வாறு செயல்படுவது அந்த மதத்திற்கே இழுக்கு என்று ஒரு அப்பாவி வெள்ளைக்கார நண்பர் கூறினார். ஏதோ ஓரிருவர் தவறு செய்வதை இடதுசாரி சித்தாந்தம் கொண்ட டைம் பத்திரிகை இப்படி அட்டையில் போட்டு புத்தரையும் அவர் உருவாக்கிய மதத்தையும் களங்கப்படுத்துகின்றன என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். உடனே சிலர் ஒரு பிக்குவின் படம் அட்டையில் வெளியானதற்கே இவ்வளவு அங்கலாய்க்கிறீர்களே இலங்கை நிலவரம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டால் அதிர்ச்சியடைவீர்கள் என்று நண்பர் ஒருவர் கூற- வெள்ளைக்காரரின் புருவங்கள் உயர- நான் கூறினேன் இலங்கையிலுள்ள கடும்போக்கு எண்ணம் கொண்ட பிக்குமார்களை கணக்கெடுத்து அவர்களின் படங்களை அட்டையில் போடுவதாக இருந்தால், டைம் பத்திரிகைக்கு குறைந்தது பத்தாண்டுகளிற்கு அட்டைப்படத்திற்கு பஞ்சமே இருக்காது என்று சொல்ல, அதை சிங்கள மொழி சேவையின் நண்பர் ஒருவர் ஆமோதித்தார்.
இரு தினங்களிற்கு முன் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது சில முத்துக்களை உதிர்த்தார். அதில் ”தனக்கென்று இந்த நாடாளுமன்றத்தில் அரசியல் குழு ஏதுமில்லை. தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கு ஒரேயொரு உறுப்பினர் மட்டுமே உள்ளார். நான் ஒரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, ஒரு தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். நான் கட்சி அரசியலில் ஈடுபடுவதில்லை” என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே சென்றார்.
அதேவேளை…..அதாவது…..அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த அதேவேளை, எந்தவொரு நாட்டிலும் மிகவும் புனிதமானதும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை பறைசாற்றும் அரசியல் யாப்பின் பிரதியை பிக்குமார்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே தீயிட்டு கொளுத்தினர். அதிகாரப் பகிர்வு மற்றும் பரவலாக்கத்தை உறுதிப்படுத்தும் 13ஆவது சட்டத்திருத்தம் அரசியல் யாப்பின் ஒரு பகுதி. அந்த சட்டத்திருத்தத்தின் பிரதியை இனவாத எண்ணம் கொண்ட பிக்குமார் எரித்தாலும், அது அரசியல் யாப்பையே எரித்த செயலாகவே கருதப்படும்….கருதப்பட வேண்டும்.
ஆனால், பௌத்தம், பிக்குமார் என்றாலே கடும் குளிர் காய்ச்சல் வந்துவிடும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மௌனமாக வேடிக்கை பார்த்து மறைமுகமாக அதை ரசித்து ஆதரவை வழங்குகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஒரு மாற்றத்திற்கு இப்படிப் பார்ப்போமே…..இதே போன்று வடக்கு-கிழக்கு அல்லது சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதியில் அவர்கள், சிங்கள பேரினவாதிகள் தம்மீது முன்னெடுக்கும் அடக்குமுறைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாளமாக அரசியல் யாப்பின் பிரதியை தீயிட்டிருந்தால் என்னவாகியிருக்கும்?………அனைவர் மீது தடியடி நடந்திருக்கும்…..அனைவரும் ”நான்காவது மாடிக்கு” அழைத்துச் செல்லப்பட்டு “அன்புடன் கவனிக்கப்பட்டு” பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆண்டுகள் கணக்கில் வழக்கு பதிவு செய்யப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டிருப்பார்கள். காரணம் அரசியல் யாப்பை எரித்தவர்கள் தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள்.
அதே அரசியல் யாப்பு அல்லது அதிலுள்ள ஒரு பகுதியை எரித்த பிக்குமார்கள் மீது இதே பயங்கரவாதத் தடைச் சட்டம் பாயுமா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. பயங்கரவாதம் இனம், மதம், மொழி, கலாசாரம், கல்வித் தகுதி, பொருளாதார நிலை போன்ற எந்த அளவுகோலாக இருந்தாலும் அதற்கெல்லாம் அப்பாற்பட்டது.
தமிழர்களின் நியாயமான உரிமைகளைக் கோரியும், 13ஆவது திருத்தச் சட்டம் மூலம் அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அம்சங்களை வலியுறுத்தியும், தொடரும் நில அபகரிப்பை நிறுத்தக் கோரியும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்கவும், வலிந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடைபெற்றது என்பதற்கான பதிலைக் கோரியும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாத வகையில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கியும், முன்னர் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி பேரணியாகச் சென்றவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உரிமைகளைக் கோரியவர்களை விசாரணைக்கு அழைத்த பொலிசாரும் சட்டத்துறையும், நாடாளுமன்றத்திற்கு முன்பாக அரசியல் யாப்பையே அவமதிக்கும் வகையில் அதை தீயிட்ட பிக்குமார்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை மேலே கூறிய சட்டத்தரணியுடனான உரையாடலின் போது எழுப்பினேன். மிகவும் மூத்த சிங்கள சட்டத்தரணியான அவர் உடனடியாக அளித்த பதில் “அது தான் உங்களிற்கே தெரியுமே சிவா….எமது நாட்டில் சட்டத்தின் அனுகூலம் பெரும்பான்மையானவர்களிற்கும் அதிலுள்ள கடுமையான விஷயங்கள் சிறுபான்மை மக்களிற்கும் நடைமுறைபடுத்தப்படுகிறது. இந்த விடயத்தில் நீதிமன்றம் சுயமாக தாமே முன்வந்து அரசியல் யாப்பை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் எமது நாட்டில் காவியைத் தொட்டால் கை இருக்காது என்கிற நிலை உள்ளது. எமது நாட்டில் பயங்கரவாதம் பரவி புரையோடிப்போய் சீரழிவை ஏற்படுத்தியதற்கு ஆயுதக் குழுக்கள் எந்தளவிற்கு காரணமோ அதைவிட கூடுதலாக காவி உடையில் இருக்கும் பல காடையர்களும் காரணம். அவர்கள் அரசியல் யாப்பை எரித்தது பயங்கரவாதத்திற்கு இணையான செயல். பிக்குகள் தவறுகளைச் செய்யும் போது உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று அவர்களின் ஆட்டம் இந்தளவிற்கு இருந்திருக்காது. என்று தமது ஆதங்கத்தையும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி இல்லாமையும், பிக்குமார்களின் அட்டகாசத்தையும், அவர்கள் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது காட்டும் காழ்ப்புணர்ச்சி மற்றும் வெறுப்புணர்ச்சி ஆகியவைற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக வந்த அரசுகள் தவறிவிட்டன என்றும் ஒரு சிங்கள சட்டத்தரணி என்கிற வகையில் மிகவும் வெட்கமும் வேதனையும் அடைவதாக உளமாற வருந்தினார்”.
13க்கு எதிராக பிக்குமார்கள் மேற்கொண்ட கீழ்த்தரமான செயல்பாடுகளிற்கு பின்புலம் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. நாட்டிலுள்ள அனைவரும் அரசியல் யாப்பை மதித்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவும், பிறகு அமைச்சர்களாகவும் பொறுப்பேற்பவர்கள் அரசியல் யாப்பின் மீதும் அதன் அடிப்படையில் அரசாட்சியை நடத்துவதாகவும் உறுதி ஏற்கின்றனர். அவர்கள் அரசியல் யாப்பை அவமதிக்கும் வகையிலோ அல்லது அதிலுள்ள அம்சங்களிற்கு முரணாகவோ நடந்துகொண்டால், அவர்கள் பதவியிலிருந்து சட்டரீதியாக நீக்கப்பட வேண்டும். அதுவே ஜனநாயக விழுமியம்.
அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பௌத்த பீடாதிபதிகளை சந்தித்தார். இதையடுத்து அதியுயர் பீடாதிபதிகள் அரசு 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைபடுத்தக் கூடாது, வடக்கில் இராணுவத்தினர் தொடர்ந்து இருக்க வேண்டும், அவர்கள் அங்கிருக்கும் விகாரைகளிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அரசிற்கு கடிதம் எழுதுகின்றனர். இதையடுத்து இனவாத எரிபொருள் நிலையங்களை நடத்துவது போன்று அமைச்சர் சரத் வீரசேகர, உதய கம்மன்பில, விமல் வீரசேகர போன்றவர்கள் 13 என்ற பேச்சை எடுத்தாலே நாக்கை அறுத்துவிடுவோம் என்கிற பாணியில் தொடர்ச்சியாகப் பேசுகின்றனர். இதற்கு பிறகு நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாகவே அரசியல் யாப்பை எரிக்கும் சட்டவிரோதச் செயல் இடம்பெற்றுள்ளது. இவை அனைத்திற்குமே ஒரு தொடர்பிருப்பதாகத் தோன்றுகிறது.
அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள ஒரு விஷயத்தை நடைமுறைபடுத்தக் கூடாது என்று கூறி போராட்டம் நடத்த இந்த பிக்குமார்களிற்கு அதிகாரம் கொடுத்தது யார்? அரசியல் யாப்பிற்கு எதிராக நடந்துகொள்வது சட்டவிரோதமில்லையா? இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு என்று கூறப்பட்டாலும், அரசியல் யாப்பிலுள்ளவற்றை சிங்கள பௌத்தவாதிகள் எப்படி எதிர்க்க முடியும்? இப்படி ஏராளமான கேள்விகள் எழும்புகின்றன.
இந்தக் கேள்விகள் ஒரு புறம் இருக்க, அந்த அரசியல் யாப்பின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரத் வீரசேகர போன்ற அமைச்சர்களும் எப்படி பதவி வகிக்க முடியும்? அதை எதிர்த்து ஏன் இதுவரை யாரும் நீதிமன்றத்தை நாடவில்லை?
நாட்டின் சரித்திரத்தைச் சற்று பின் நோக்கிப் பார்த்தால், அரசியல் யாப்பில் 6ஆவது சட்டத்திருத்தம் மற்றும் அதன் நோக்கம் மற்றும் தாக்கம் புரியும். 40 வருடங்களிற்கு முன்னர் கொண்டுவரப்பட்ட அந்த சட்டத்திருத்தத்தின்படி பிரிவினை கோருவது தண்டனைக்குரிய குற்றமாகும். அதை மீறும் வகையில் எந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் செயற்பட்டால் இதே சட்டமும், ஆட்சியாளர்களும் பார்த்துக் கொண்டிருப்பார்களா? உடனடியாக நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு, மகசின் அல்லது வெலிக்கடையில் அடைக்கப்பட்டிருப்பார்கள். அதே நிலைப்பாட்டைத் தானே இப்போது பிக்குமார்கள் மீதும் எடுத்திருக்க வேண்டும். அரசியல் யாப்பின் 6ஆவது திருத்தத்தை மீறுவது அல்லது பிரிவினை கோருவது சட்டவிரோதம் என்றால், அதே யாப்பிலுள்ள 13ஆவது திருத்தத்தை அமல்படுத்தக் கூடாது என்று போராடுவது சட்டவிரோதச் செயலாகாதா? மதகுருமார்களின் செயல்பாடானது நல்ல விடயங்களை போதித்து, சமூக ஒற்றுமையை வளர்த்து, மக்களை நல்வழிப்படுத்தி அனைவரும் நலமாக வாழ்வதை உற்தி செய்வதே ஆகும். அரசியல் யாப்பில் கூறியுள்ளதற்கு மேலதிகமாக ஏதும் கொடுக்க முன்வராவிட்டாலும் இருப்பதைப் பறிக்காமல் இருக்க வேண்டும்.
இல்லையென்றால் அவர்களின் முகமூடி கிழிக்கப்பட்டு, அசின் விராத்து போல் அவமானப்பட்டு அட்டைப்படத்தில் வரும் நிலை ஏற்படும். காலம் மிகவும் கொடியது என்பதை தர்மத்தைப் போதிப்பதாகக் கூறுபவர்கள் உணர வேண்டும்.