எமது யாழ் செய்தியாளர்
இலங்கையில் மகாசங்கத்தினர் எதிர்ப்பதை நடைமுறைபடுத்த முடியாது, எனவே தமிழ்த் தலைவர்களே இறங்கிவர வேண்டும் என்று நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் வாக்கு ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் அனைத்து மக்களிற்குமான ஜனாதிபதியாக இருந்த ஒருவரின் இப்படியான கருத்து தமிழ்ச் சமூகத்திடம் கடும் அதிருப்தி மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
”இலங்கை பௌத்த நாடு. மகாசங்கத்தினருடன் மோத முடியாது. பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள சக்திகள் எதிர்க்கும் விடயத்தை செய்யவும் முடியாது. எனவே, வடக்கு அரசியல் தலைவர்கள் சமஷ்டியில் தொங்கிக்கொண்டிருக்காது நடுநிலைபோக்குக்கு இறங்கிவர வேண்டும்” என்று திருவாய் மலர்ந்துள்ளார் மைத்ரிபால சிறிசேன.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார்.
நாட்டின் அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்பட்டுள்ள 13ஆவது திருத்த சட்டத்தின்படி அதிகாரப் பகிர்வை அளிக்க இயலாது என்பதே அவரது உரையின் மையமாக இருந்தது. நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாணாக்கியன் ராஜபுத்திரன் தெரிவித்த கருத்துக்களிற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவரது கருத்து இருந்தது.
”எனக்கு முன்னர் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சமஷ்டி வேண்டும் எனக் கூறினார். அவரின் இந்த அறிவிப்பு சிங்கள மக்களையும், பௌத்த தேரர்களையும் கொதிப்படைய வைக்கக் கூடியது. அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை அப்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் ஜே.ஆர். ஜயவர்தன கொண்டுவந்திருந்தாலும் அதன் பின்னர் அவரோ அல்லது நான் உட்பட ஜனாதிபதி பதவிகளை வகித்தவர்களோ அதில் கைவைக்கவில்லை. ஏனெனில் சிங்கள, பௌத்த மக்களை பகைத்துக்கொண்டு செய்ய முடியாது என்பது தெரியும். எனினும், தற்போதைய ஜனாதிபதி ஏன் கைவைத்துள்ளார் என்பது தெரியவில்லை”.
நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஒருவர், அதிலும் தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் தேர்வானவர் இப்படி பேசியது சிங்கள மக்களிடையே கூட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி ஒருவர் சுயலாபத்திற்காக இனவாதத்தைக் கக்கியுள்ளார் என்றும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அவரது அஜாக்கிரதை மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறியதற்காக அவருக்கு உச்ச நீதிமன்றம் 100 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்து இந்தாண்டு ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது. அதிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவே மைத்ரி மீண்டும் இனவாதத்தை கையில் எடுத்துள்ளார் என்று அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பௌத்த மதகுருமார்கள் எதிர்க்கும் எந்த செயலையும் நாட்டில் செய்ய முடியாது என்பதை அவர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது சிங்கள கடும்போக்கு உறுப்பினர்களுக்கு ஊக்கமளிப்பது போலுள்ளது என்ற கவலைகள் எழுந்துள்ளன.
”இந்நாட்டில் பிக்குகள் எதிர்க்கும் விடயத்தை ஒருபோதும் செய்ய முடியாது. அதனால்தான் செல்வநாயகம் – பண்டாரநாயக்க உடன்படிக்கை கூட கொளுத்தப்பட்டது. மகாசங்கத்தினருடன் மோத முடியாது. இது பௌத்த நாடு. சிங்கள சக்திகளையும், பௌத்த பிக்குகளையும் பகைத்துக்கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது”.
மேலும் தான் ஜனாதிபதியாக இருந்தபோது வடக்கில் 95 சதவீத காணிகளை விடுவித்ததாக கூறிய அவர் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையே சிறந்தது என்றும் நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால் காணி விடுவிப்பு தொடர்பில் அவர் கூறுவது உண்மை இல்லை என்று தமிழர் தரப்பினர் வாதிடுகின்றனர். எந்த தரவுகளின் அடிப்படையில் அவர் 95% நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறார் என்று தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதுமட்டுமின்றி தமிழ் அரசியல் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் “வடக்கு அரசியல் தலைவர்கள் முழு இறாத்தல் இறைச்சியும் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நிற்காமல், நடுநிலை போக்குக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை சிங்கள பெரும்பான்மை மக்களிடம் தமிழ் மக்களிற்கு அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உரிமைகளை அளிக்க அவர் ஏன் குரல்கொடுக்கவில்லை என்றும், அவரது செயல்பாடும் பேச்சும் தமிழர்களின் முதுகில் குத்துவது போலவும் முற்றாக துரோகம் இழைக்கும் செயலாகவுமே உள்ளது என்று தமிழர்கள் வருந்துகின்றனர்.