எமது யாழ் செய்தியாளர்
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை இரண்டாவது முறையாக யாழ்ப்பாணத்தில் அனுசரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு வந்திருந்த போது, அவருக்கும் அந்த நிகழ்விற்கும் எதிராக தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஷ் உட்பட பலர் இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
ரணிலின் யாழ் விஜயம் மற்றும் சுதந்திர தின நிகழ்விற்கு எதிரான போராட்டத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உட்பட பல அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
கருப்புக் கொடிகளை ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முயன்ற போது, யாழ் நகரின் வைத்தியசாலை வீதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை இ.போ.ச பேருந்து நிலையம் முன்பாக பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் தடுத்து நிறுத்தினர்.
எனினும் போராட்டத்தை தொடர்ந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரட்னம் சுகாஸ் உட்பட ஏழு பேர் பொலிசாரினால் அமுக்கிப்பிடித்து இழுத்துச் சென்று வாகனங்களில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் செல்லப்பட்டனர்.
இதேநேரம் நகரின் மணிக்கூட்டு வீதி-வைத்தியசாலை வீதி சந்திக்கு முன்பாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் ஓர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டதனால் அங்கும் பொலிசார் குவிக்கப்பட்டனர். இதனால் நகரின் மத்தியில் தொடர் பதற்றம் நிலவியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடித்து விரட்டப்பட்டதோடு வீதியில் நின்ற ஊடகவியலாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது. இந்தப் போராட்டம் சுமார் இரண்டு மணிநேரம் நீடித்தது.
சனிக்கிழமை (11) நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட பல தரப்பினர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இதற்கு எதிரான தடையாணையை யாழ்ப்பாணப் பொலிசார் உள்ளூர் நீதவான் நீதிமன்றத்தில் பெற்றனர். ஆனாலும், அதையும் மீறி பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் இந்த கருப்புக்கொடி போராட்டத்தில் பங்குபெற்றனர்.
நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை தனது 75ஆவது சுதந்திர தினத்தை சுமார் 200 மில்லியன் ரூபா செலவில் அனுசரித்தது. இதேவேளை வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் தமிழர்கள் இந்த நாளை கரிநாள் என்று கூறி அதை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சில நாட்களிற்கு முன்பு அதிகாரப் பகிர்வு, பரவலாக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை வலியுறுத்தி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி தமிழ் மக்களும் சிவில் அமைப்புகளும் ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தனர். அந்த ஊர்வலம் யாழ்ப்பாணத்தில் தொடங்கி மட்டக்களப்பில் முடிவடைந்தது.