கோவிட் தொற்று ஆரம்பமான காலப்பகுதியில் தனது அலுவலக பெண் பணியாளரோடு கொண்டிருந்த முறையற்ற தொடர்பு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிப்பு
(ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் தலைநகரம் என்று வர்ணிக்கப்படுகின்ற ரொறன்ரோ நகரவாசிகளால் நேசிக்கப்பெற்ற அதன் நகரபிதா ஜோன் ரோரி விரைவில் பதவி துறக்கவுள்ளார் என்ற செய்தி இன்று மாலை கனடா எங்கும் பரவிய நிலையில் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்
கோவிட் தொற்று ஆரம்பமான காலப்பகுதியில் தனது அலுவலக பெண் பணியாளரோடு கொண்டிருந்த முறையற்ற தொடர்பு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் இந்த நிலையில் தனது குடும்பத்தாரோடு மீண்டும் ஒரு இறுக்கமானஉறவை கட்டியெழுப்புவதற்காகவும் தனது தவறுக்காகவும் இந்த திடீர் முடிவை தான் எடுக்க வேண்டி வந்ததாக பதவி விலகவுள்ள நகரபிதா ஜோன் ரோரி இன்று மாலை செய்தியாளர்களிடம் தெரிவிததார்.
சில நாட்களுக்கு முன்னர் ஸ்காபுறோ நகரில் தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை அவர் சந்தித்த போது கேள்வி நேரத்தின் போது நாம் அவரைப் பாராட்டி தெரிவித்த உரையாடலின்போது அவர் சிரித்த முகத்துடன் தனது பதிலை வழங்கியிருந்தமை இன்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகவே தெரிகின்றது.
ஜோன் ரோரி அவர்கள் தனது சேவைக்காலத்தில் தொடர்ச்சியாக தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை தனது அலுவலகத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்தியிருந்ததை உதயன் பத்திரிகை சார்பில் நாம் பாராட்டிய போது அந்த பாராட்டுக்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட அவர் தற்போது பதவியை துறந்து செல்வது மேற்படி தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்கும் ஒரு சவாலாகவே இருக்கும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
இன்று மாலை ஊடகவியலாளர்களைச் சந்தித்து அவர் உரையாடிய போது கோவிட்-19 தொற்றுநோயின் ஆரம்ப காலத்தின் போது அந்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்ததாக ஜொன் ரோரி கூறினார். இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் பரஸ்பரம் முடிவடைந்தது எனத் தெரிவித்த அவர்
“மேயராகவும் ஒரு குடும்ப மனிதராகவும் நான் வைத்திருக்கும் தரத்தை இது பூர்த்தி செய்யவில்லை” என்று ஊடகச் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
“இந்த உறவை உருவாக்க அனுமதித்தது என் தரப்பில் ஒரு பெரிய பிழை என்பதை நான் அங்கீகரிக்கிறேன். 40 வயதுக்கு மேற்பட்ட எனது மனைவி பார்பராவும், தொற்றுநோய்களின் போது எனது பொறுப்புகளை நிறைவேற்றும் போது நானும் பல நீண்ட காலங்களைத் தவிர்த்திருந்த நேரத்தில் இது சம்பவம் இடம்பெற்றது என்பதை உணர்கின்றேன்.
“இதன் விளைவாக, நான் மேயர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன், அதனால் எனது தவறுகளைப் பற்றி சிந்திக்க நேரத்தை இனிமேல் ஒதுக்க முடியும்” என்றும் ஜொன் ரோரி அறிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
“நான் ஆழ்ந்து வருந்துகிறேன், ரோறன்ரோ நகரத்தின் மக்களிடமும், எனது ஊழியர்கள், நகர சபையில் உள்ள எனது சகாக்கள் மற்றும் பொது சேவைகள் உட்பட எனது செயல்களால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் தயக்கமின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று ஜொன் ரோரி மேலும் கூறினார்.
“எல்லாவற்றையும் விட, நான் என் மனைவி, பார்ப் மற்றும் எனது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், நான் யாரையும் விட அதிகமாக பாதிப்புக்களை ஏற்படுத்திவிட்டேன் என்பதை உணர்கின்றேன்”
இவ்வாறிருக்க. ஜொன் ரோரியின் ராஜினாமாவை அடுத்து ரொறன்ரோவில் இடைத்தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது
அந்த பெண்ணுடனான ஜொன் ரோரியின் உறவைப் பற்றி செய்தி வெளியிட்ட முதல் ஊடகம் ரொறன்ரோ ஸ்டார் பத்திரிகை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.
நகர சபை நிர்வாகஇது தொடர்பாக வெளியிட்ட கருத்து பகிர்வில் தேர்தல் நடைபெறும் வரை துணை மேயர் ஜெனிபர் மெக்கெல்வி தற்காலிக மேயராக பதவிவகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 2018 முதல் வார்டு 25 ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் வட்டாரத்தின் கவுன்சிலராகவும் தொடர்ந்து துணை நகரபிதாவாகவும் பணியாற்றி வருகின்றார்.
டொராண்டோ நகர சட்டத்தின்படி, ஒரு கவுன்சிலர் ராஜினாமா செய்தால் இடைத்தேர்தலை நியமிப்பது அல்லது நடத்துவது நகர சபையின் விருப்பத்திற்கு உகந்தது போலல்லாமல், ஒரு இடைத்தேர்தல் அவசியம் நடத்தப்பட வேண்டும். யாராவது ராஜினாமா செய்த 60 நாட்களுக்குள் இடைத்தேர்தலுக்கான துணைச் சட்டத்தை நகர சபை நிறைவேற்ற வேண்டும் என்பதும் நகர சபைகள் சட்டத்தில் உள்ளதாகவும் எமது ஆசிரிய பீடத்திற்கு கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.