உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 150 ரன்களை பாகிஸ்தான் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. மகளிருக்கான ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து இடையிலான போட்டியில் இங்கிலாந்தும், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவும வெற்றி பெற்றிருந்தன.
இந்நிலையில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கேப்டவுனின் நியூலேண்ஸ் மைதானத்தில் இன்று மாலை 6.30-க்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸில் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்து விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் முனீபா அலி 12 ரன்களும், ஜவேரியா கான் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிதா தார் ரன் ஏதும் எடுக்காமலும், சித்ரா அமீன் 11 ரன்னிலும் விக்கெட்டை பறி கொடுத்தார்கள். 4 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் இருந்தபோது, கேப்டன் பிஸ்மா மாரூபுடன் ஆயிஷா நசீம் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மாரூப் 68 ரன்களும், ஆயிஷா 43 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ராகர் தலா 1 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் வீராங்கனைகள் களத்தில் இறங்கியுள்ளனர்.