தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்த எஸ்.ஏ. 20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேபிடல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்று தென்னாப்பிரிக்காவில் எஸ்.ஏ. 20 என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் முதல் சீசனாக நடத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 10ஆம் தேதி இந்த போட்டி தொடங்கியது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன. எஸ்.ஏ. 20 தொடரின் இறுதிப் போட்டிக்கு சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணிகள் தகுதி பெற்றன. ஜோகன்ஸ்பர்க்கின் தி வாண்டரர்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி இன்று நடத்தப்பட்டது.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுதது கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சால்ட், குசால் மெண்டிஸ் களத்தில் இறங்கினர். மெண்டிஸ் 21 ரன்னிலும், சால்ட் 8 ரன்னிலும் வெளியேற, அடுத்து வந்த தீனிஸ் டி ப்ரூன் 11 ரன்னிலும், ரூசோ 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்ததால் ரன்குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கேபிடல்ஸ் அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் வாண்டர் மெர்வ் 4 விக்கெட்டுகளையும், மகளலா மற்றும் ஒட்டினெல் பார்ட்மென் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி விளையாடியது. தொடக்க வீரர் டெம்பா பவுமா 2 ரன்னில் வெளியேறினாலும், மற்றொரு ஓப்பனர் ஆடம் ரோசிங்டன் 30 பந்துகளில் 5 சிக்சர், 4 பவுண்டரியுடன் 57 ரன்கள் குவித்தார். ஜோர்டன் ன்மேன் 22 ரன்னும், கேப்டன் எய்டன் மார்க்ரம் 26 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் கணிசமான ரன்களை சேர்க்க, சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 16.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 4 விக்கெட்டுகளை எடுத்த சன்ரைசர்ஸ் அணியின் வாண்டர் மெர்வ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். தொடர் நாயகன் விருது சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரமுக்கு அளிக்கப்பட்டது.