மலாயாப் பல்கலைக்கழக பொருளாதார கருத்தரங்கை காரணமின்றி எதிர்க்கும் மதவாதத் தரப்பினர்
-நக்கீரன்
கோலாலம்பூர், பிப்.12
மலாயாப் பல்கலைக்கழகத்தில் நேற்று, பிப்ரவரி 11 சனிக்கிழமை பிற்பகலில் ஒரு பொருளாதார கருத்தரங்கு நடைபெற்றது. மலாயாப் பல்கலைக்கழகத்-தின் Resource Centre, Asia-Europe Institute சார்பில் இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சிறப்பு கருத்துரையாளராக தமிழ் நாட்டரசின் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அழைக்கப்பட்டிருந்தார். கருத்தரங்கின் தலைப்பு சமத்துவ வளர்ச்சி. கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் டத்தோ டாக்டர் ராஜா ராசையா.
இந்த நிகழ்ச்சிக்குத்தான் மலேசியாவில் உள்ள மலேசிய இந்து தரும மாமன்றம் உள்ளிட்ட பிரதான இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் தொடர்பில், இந்து தரும மாமன்றத்தின் முகநூல் பக்கத்தில் மின் பதாகையும் வெளியுட்டுள்ளனர்.
திராவிட மாடல் சிந்தனை இங்கு எதற்கு என்ற கேள்வியை முன்வைத்து, ‘இறைவன்மீது நம்பிக்கை வைத்தல்’ உள்ளிட ஐந்து கோட்பாடுகள் அடங்கிய ‘ருக்குன் நெகாரா’ கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்போம் என்றெல்லாம் அந்தப் பதாகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கல்வி வளர்ச்சியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் முதன்மை மாநிலமாக தமிழ் நாடு விளங்குகிறது. ‘எல்லார்க்கும் எல்லாமும்’ என்பதுதான் இன்றைய தமிழ் நாட்டரசின் கொள்கை. அதைத்தான், தமிழ் நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் என்கிறார். காரணம், திராவிட மரபில் வந்த கட்சியின் ஆட்சி நடைபெறுவதால் அவர்கள் அவ்வாறு சொல்லிக் கொள்கின்றனர்.
அந்த மாநில அரசில் நிதி அமைச்சராகத் திகழும் தியாகராஜன், பழுத்த ஆன்மிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கையில் கயிறு கட்டி இருப்பவர். நெற்றியில் குங்குமம் இட்டிருப்பவர். மதுரை மீனாட்சி அம்மன் ஆலய வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் தியாகராஜன் குடும்பத்திற்கு வழிவழியாக இன்றளவும் பெரும் பங்குண்டு.
இப்படிப்பட்ட நிலையில், நேற்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொருளாதார கருத்தங்கிற்கும் இந்து மதத்திற்கும் மலேசியாவின் ருக்குன் நெகாரா கோட்பாட்டிற்கும் என்ன தொடர்பிருக்கிறது?.
பின்னர் ஏன் மலேசியாவில் உள்ள இந்து அமைப்புகள் இந்தப் பொருளாதாரக் கருத்தரங்கை எதிர்க்க வேண்டும்?.
இன்றைய தமிழ் நாட்டு அரசாங்கத்தின் கொள்கை என்பது, சமயம்-சாதி ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட எல்லாவற்றையும் புறக்கணித்து, ‘அனைவருக்கும் கல்வி- அனைவருக்கும் மாநில முன்னேற்றத்தில் சமவாய்ப்பு’ என்பதுதான்.
இந்தக் கொள்கைவழி மாநிலத்தை பலவகையாலும் முன்னேற்றி வருகின்ற-னர். இப்படிப்பட்ட உன்னத சமூக நலத் திட்டத்தின் அமலாக்க முறையைப் பற்றித்தான் இந்தக் கருத்தரங்கில் பேசினர்.
இதற்கு ஏன் இந்த மதவாத அமைப்புகள், மதவாதம் தலைக்கேறிய நிலையில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
இந்தியாவில் வலச்சாரி அரசியல் சித்தாந்தம் கொண்ட பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சி, 2014இல் உருவானதில் இருந்தே உலகெங்கும் உள்ள இந்து மதவாத அமைப்புகள் திவிரத்தன்மையுடன் செயல்படுகின்றன. அதன் தாக்கம், மலேசியாவிலும் பிரதிபலிக்கிறது.
உலக அகிம்சையின் சின்னமாக அண்ணல் காந்தி அடிகளை, ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு பிரகடனப்படுத்தி உள்ளதுடன், காந்தி பிறந்த அக்டோபர் 2-ஆம் நாளை உலக அகிம்சை தினமாகவும் ஆண்டுதோறும் அனுசரித்து வருகிறது.
அப்படிப்பட்ட காந்தியை, நாதுராம் விநாயக கோட்சே என்னும் இந்து மதவெறியன் சுட்டுக் கொன்றான். ஈரான்-ஈராக் பகுதியில் இருந்து பல ஆயிர ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடியும் மேய்ச்சல் நிலம் நாடியும் இந்தியாவிற்கு வந்த பிராமணர்கள், இந்தியாவின் செல்வச் செழிப்பைக் கண்டு அங்கேயேத் தங்கிவிட்டனர்.
அவ்வாறு தங்க முற்பட்டவர்கள், சொர்க்கம்-நகரம்; முற்பிறவி-அடுத்தப் பிறவி குறித்த கட்டுக்கதைகளைக் கற்பித்து, தங்களை உயர்சாதிக்காரர்களாகவும் அறிவாளிகளாகவும் காட்டிக்கொண்டு அந்த மண்ணிலேயே நிலைப்படுத்திக் கொண்டனர்.
தங்களின் ஆதிக்கத்திற்கு யார் குறுக்கே வந்தாலும் அவர்களை தீர்த்துக்கட்டுவது இவர்களின் வழக்கம். ஆதித்த கரிகால சோழன், நந்த நாயனார், நெல்லை மாவட்ட ஆட்சியாளர் ஆஷ், காந்தி உட்பட்ட அனைவரும் பார்ப்பனர்களால் கொலைசெய்யப்பட்டவர்கள்.
அப்படி கொலை செய்ய முடியாமல் போனால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்வது, இவர்களின் வாடிக்கை-குயுக்தி; இதில், அவர்கள் நேரடியாக பங்கு பெறாமல், மற்றவர்களை அதாவது, நம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே ஏவிவிடுவார்கள். அசோக மாமன்னர், களப்பிரர், திருவள்ளுவர், கம்பர், வள்ளலார் சுவாமிகள், பெரியார், அண்ணல் அம்பேத்கார் போன்றவர்களெல்லாம் இத்தகையத் தாக்குதலுக்கு இன்றளவும் ஆளாகி வருகின்றனர். இதற்கெல்லாம் அடித்தளம் இட்டவன் சாணக்கியன் என்னும் தகிடுதத்தக்காரன். அதனால்தான், உண்மையை உணர்ந்த பொதுமக்கள் அவனை பொதுவெளியில் எரித்துக் கொன்றனர்.
நேற்றைய மலாயாப் பல்கலைக்கழக பொருளாதாரக் கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் ஒருவகையில் பார்ப்பன அடிமைகள்தான். மதவாதம் இவர்களின் அறிவுக் கண்களுக்கு திரைபோட்டுள்ளது.
மலேசிய இந்து தர்ம மாமன்றம், சிறந்த கல்விமானும் சமூகப் பற்றாளரும், சமயச் சான்றோருமாகிய டத்தோ முனைவர் என்.எஸ். இராஜேந்திரன் பொறுப்பில் இருந்தவரை அது, ஒரு சமய மறுமலர்ச்சி இயக்கமாக இருந்தது.
அருமையான கிளியை வளர்த்து, கடைசியில் அதை கடுவன் பூனையிடம் கொடுத்தக் கதையாக என்றைக்கு இந்த அமைப்பை அ.இராதாகிருஷ்ணன் என்பவரிடம் கொடுத்தாரோ, அன்றுமுதல் அந்த சமய அமைப்பு, மதவாத அமைப்பாகவும் ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பாகவும் மாறிவிட்டது.
தமிழர்களின் அறிவுப் பெட்டகம்-தமிழர்களின் இலக்கிய முகவரி பொய்யா-மொழிப் புலவர் திருவள்ளுவரை, ஸ்ரீவள்ளுவர் என்று குறிப்பிடுவதுடன், அப்படி குறிப்பிட்டால் என்ன என்றும் கேட்கிறார் இந்த இராதாகிருஷ்ணண்.
இப்படிப்பட்ட தமிழ்-தமிழர் விரோதி தலைமையில் உள்ள இந்து அதர்ம மாமன்றத்தின் முகநூல் பக்கத்தில், இந்தக் கருத்தரங்கிற்கு எதிராக தகவல் பதிவிட்டுள்ளதைப் பார்க்கும்பொழுது, இந்தத் தரப்பினருக்கு சமயத் தெளிவும் இல்லை; பொருளாதாரம் குறித்த புரிதலும் இல்லையெனத் தெரிகிறது.
காந்தியைக் கொன்ற கோட்சே என்ற பார்ப்பனன், தன் கையில் பளிச்சென தெரியும்படி முஸ்லிம் என்று பச்சைக் குத்தி இருந்தான்.
காந்தியைக் கொன்றதும் அல்லாமல், காந்தியைக் கொன்றது வேற்று மதத்தவர் என்று புரளி கிளப்புவதும் அதன்வழி மதக் கலவரத்தை ஏற்படுத்துவதும் கோட்சேவின் நோக்கமாக இருந்திருக்கிறது.
நல்வாய்ப்பாக, டில்லியில் மௌண்ட் பேட்டன் பிரபுவும் சென்னையில் தந்தை பெரியாரும் மதக் கலவரம் ஏற்படா வண்ணம் சமுதாயத்தியக் காத்தனர். வானொலியிலும் பேசி, காந்தியைக் கொன்றது ஓர் இந்துதான் என்றும் அதுவும் மதவெறி கொண்ட ஒரு பார்ப்பனன் என்பதையும் பொதுமக்களுக்குத் தெரிவித்து அமைதி ஏற்படுத்தினர்.
அப்படிப்பட்ட நாதுராம் விநாயக கோட்சே, ராஷ்டிரிய சுயசேவை சங்கம் என்னும் இந்து தீவிரவாத அமைப்பில் பயிற்சி பெற்றவன். இந்த சங்கம்தான் சுறுக்கமாக ஆர்.எஸ்.எஸ். என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவுதான் பாஜக என்னும் பாரதிய ஜனதாக் கட்சி. இந்தக் கட்சியின் ஆளுக்கைக்கு இந்தியா வந்தபின், கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடப்பதை ஊரும் உலகும் அறியும்.
1925-இல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, இன்னும் ஈராண்டுகளில் அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது. அதற்குள், இந்தியாவை, ஒரேமொழி; ஒரேக் கலாச்சாரம், ஒரேத் தேர்தல், ஒரே நிருவாகம் என்றெல்லாம் மாற்றி முழுமையான பார்ப்பன ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர துடியாய்த் துடிக்கின்னர்.
இதற்குத் தடையாக இருப்பது ஒரேயொரு மாநிலம்தான். அது தமிழ்நாடு; அங்குதான் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. திராவிடக் கொள்கை கொலுகொண்டுள்ளது; இதன் விளைவாகவே, இந்துத் தீவிரவாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் ‘திராவிடம்’ என்னும் சொல் வேப்பங்காயாகக் கசக்கிறது.
1935-இல் இந்தியாவிற்கான அரசியல் சாசனம் முதன் முதலாக வரையப்பட்டது. அது, உருவான இடம் இலண்டன் மாநகரத்தின் பங்கிங்காம் அரண்மனை. அதன் பெயர் அனைத்து இந்திய அரசியல் சாசனம். அப்போது, ஆங்கிலேய நிருவாகத்தின்கீழ் இரண்டு-மூன்று இந்தியாக்கள் இருந்தன. அதனால், அதற்கு அனைத்து இந்திய அரசியல் சாசனம் என்று பிரிட்டிஷ் அரண்மனை பெயர் சூட்டியது.
1947-இல் இந்தியா விடுதலை அடைந்ததும், புதிய சூழலுக்கு ஏற்ப இதே அரசியல் சாசனத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியல் சட்டத்தை இயற்ற நேரு புதிதாக அரசியல் சட்ட வரைவுக் குழுவை ஏற்படுத்தினார்.
கே.எம். முன்ஷி, சாதுல்லா, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், என்.கோபாலசாமி ஐயங்கார், கிருஷ்ணமாச்சாரி ஆகிய சட்டமேதையர் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். இவர்களுக்கு தலைவராக இருந்தவர் மாபெரும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்.
இவர்கள் எல்லோரும் பார்த்து பார்த்து; நுணுகி நுணிகி தயாரித்த அரசியல் சாசனம் அடுத்த மூன்றாண்டுகளில் நடைமுறைக்கு வந்தது.
இப்படிப்பட்ட சட்டத்தை முதன்முதலில் திருத்த வைத்தவர் தந்தை பெரியார். அந்த சட்டத் திருத்தத்திற்குப் பெயர் ‘கம்யூனல் ஜி.ஓ.’ என்பதாகும்.
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்ததைப் போல, சுதந்திர இந்தியாவிலும் எல்லா வேலைவாய்ப்பையும் பிராமணர்களே ஆக்கிரமித்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. எல்லா சாதியினருக்கும் அவரவர் சாதி எண்ணிக்கை விகிதாச்சாரத்-திற்கு ஏற்ப அனைவருக்கும் வேலைவாய்ப்பு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். இது, வாய்மொழி உத்தரவாக இல்லாமல், அரசியல் சட்டத்தின்படி உரிமையாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்திய பெரியார், அரசியல் சாசன நகலையும் எரித்தார்.
இதைக் கண்டு எரிச்சல் அடைந்த நேரு, இது குறித்து அம்பேத்கரிடம் ஆலோசனை கேட்டார். பெரியாரின் கோரிக்கையில் நியாயமும் உண்மையும் இருப்பதால், அதற்கு செவிசாய்க்கத்தானான் வேண்டும் என்று அம்பேத்கர் கூறியதன் அடிப்படையில் இந்தியாவின் புதிய அரசியல் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட்டது.
அதன் அடிப்படையில்தான், தமிழ் நாட்டில் 69% பேர் இன்று கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பங்கு கொள்கின்றனர். கவுண்டர், செட்டியார், பிள்ளைமார், நாடார், படையாச்சி, தேவர், முதலியார், பல்லர், பறையர், மலைவாழ் மக்கள் அருந்ததியர் உள்ளிட்ட அனைத்து சாதி மக்கள் மற்றும் கிறித்தவர்-இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரும் அவரவருக்கு உரிய விகிதப்படியான கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.
இல்லாவிடில், உடல் அலுங்காத சொகுசான வேலை அவ்வளவையும் பார்பனர்கள் அபகரித்துக் கொண்டு, ஓட்டுநர்-நடத்துனர்- மூட்டை தூக்குபவர்-கொத்தாளு-சித்தாளு என வியர்வையும் இரத்தமும் சிந்தும் வேலையாகத்தான் மற்றவர்களுக்கு, அதாவது நம்மவருக்கெல்லாம் கிடைத்திருக்கும்
இவர்களில், சிறுபான்மையின மக்களைத் தவிர, பிற அனைவரும் இந்துக்கள்-தானே; இந்துக்களின் எதிர்கால நலனுக்கும் அவர்தம் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கும்தானே பெரியார் குரல் கொடுத்தார்; ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் திருவள்ளுவ நெறிப்படி எல்லார்க்கும் எல்லாமும் என்பதுதானே திராவிட மாடல்!
சிந்திக்க மறுக்கும் மதவாதிகளுக்கு வேண்டுமானால் இது புரியாமல் போகலாம்; ஆனால், ஜனநாயக செயல் கட்சியின்(ஜசெக) நீண்டகால செயல்பாட்டாளரும் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் சுங்காய் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாக இருப்பவருமான சிவநேசனுக்கும் ஏன் விளங்காமல் போனது?
ஏதும் மாறுபட்ட கருத்து இருந்தால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருடன் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றிருக்க வேண்டும். அதைவிடுத்து, திராவிட மாடல் பேச்சும் சிந்தனையும் இங்கு எதற்கு என்று கேட்க சிவநேசன் யார்?
நான் இருக்கிறேன். நானொரு பத்திரிகையாளன்; தவிர நானும் தமிழன்தான்; நான் சார்ந்த இனத்தை மேலை நாட்டவர் திராவிடர் என்கின்றனர். மொத்தத்தில் தமிழும் திராவிடமும் ஒன்றுதான். எங்கள் கருத்தை நாங்கள் கேட்பதற்கு தடை சொல்ல சிவநேசனுக்கு என்ன உரிமை இருக்கிறது.
மலாயாப் பல்கலைகழகத்தில் நடைபெற்ற இந்தப் பொருளாதாரக் கருத்தரங்கிற்கு எதிராக நாளேட்டில் அறிக்கைவிட்டிருந்த சிவநேசனிடம் அதுகுறித்து நேற்று காலையில் கருத்து கேட்டபொழுது, “அவர்கள் எல்லாம் ‘திக’ காரர்கள், அவர்களுக்கு இங்கு என்ன வேலை? இங்கு எதற்காக அவர்கள் பேச வர வேண்டும். இந்த நாட்டில் ருக்குன் நெகாரா கோட்பாடு இருக்கிறது. அதற்கு எதிராகப் பேசும் திக காரர்களை அனுமதிக்கக்கூடாது; உள்ளூர் நாளேடுகளில் இந்தியாவைப் பற்றி அன்றாடம் 4 பக்க செய்தி வருகிறது; அதை நான் படிப்பதில்லை. இங்குள்ள செய்தியைத்தான் இங்குள்ள நாளேடுகள் வெளியிட வேண்டும் என்றெல்லாம் சிவநேசன் பேசிய பொருத்தமில்லா கருத்துகளை பொறுமையுடன் கேட்டுக் கொண்ட நான்,
தியாகராஜன், தமிழ் நாட்டு அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருக்கிறார். அவர் ஒரு பொருளாதார வல்லுநர்; இங்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதார சிந்தனை குறித்துதான் பேச இருக்கிறார். இதற்கும் மதத்திற்கோ இறைக் கொள்கைக்கோ மலேசியாவின் ருக்குன் நெகாரா சிந்தனைக்கோ எந்தத் தொடர்பும் இல்லையே என்று சொல்லுவதற்குள் தொடர்ந்து குறுக்கிட்டார்.
உடனே நான், நீங்கள் சொன்ன கருத்தை யெல்லாம் நான் பொறுமையாகக் கேட்டேன்; இப்பொழுது என்னுடைய கருத்தைக் கேட்க மறுப்பதுடன் தொடர்ந்து ஏன் இடைமறிக்கிறீர்கள்; ஒரு மக்கள் பிரதிநிதிக்கு இது பொருத்தமல்ல என்று கூறினேன்.
அடுத்து, நீங்கள் திக-வா என்று என்னைக் கேட்டார். நான் திராவிடர்க் கழகத்தில் இல்லை; ஆனால், நீங்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரா என்று கேட்டதும் உடனே சிவநேசன் தொடர்பை துண்டித்துக் கொண்டார்.
ஓர் அரசியல் கட்சியில் செயல்படும் சிவநேசன் ஆன்மிக சிந்தனையாளர் என்பதைவிட அப்பட்டமான மதவாதியாக இருக்கிறார். அதனால்தான், மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கவோ விளக்கம் பெறவோ மறுத்து பின்வாங்குவதுடன் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறார்.
ஜசெக தலைமை, சிவநேசன் அரசியல்வாதியா இல்லை மதவாதியா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதியாக இருக்கும் சிவநேசனுக்கு, நடுநிலையோடு சிந்திக்கவும் பேசவும் முடியாமல் இருப்பது சமூக அவலம்.