இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட்கர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜெயதேவ் உனாட்கட் இடம்பெற்றிருந்தார். ரஞ்சி கோப்பை தொடரில் அவர் இடம்பெற்றுள்ள சவுராஷ்டிரா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெங்கால் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக ஜெயதேவ் உனாட்கட் விளையாடவுள்ளார். ரஞ்சி கோப்பை போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதன் அரையிறுதி சுற்றுக்கு சவுராஷ்டிரா, கர்நாடகா, பெங்கால் மற்றும் மத்திய பிரதேச அணிகள் தகுதி பெற்றன.
கடந்த 8 ஆம் தேதி நடந்த முதல் அரையிறுதி போட்டியில் கர்நாடக அணி சவுராஷ்டிராவை எதிர்கொண்டது. இதில் கர்நாடகா முதல் இன்னிங்ஸில் 407 ரன்களும், சவுராஷ்டிரா 527 ரன்களும் எடுத்தன. 2ஆவது இன்னிங்ஸில் கர்நாடக அணி 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சவுராஷ்டிரா அணி 34.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மற்றொரு அரையிறுதி போட்டி நடப்பு சாம்பியனான மத்திய பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையே இந்தூரில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் பெங்கால் 438 ரன்கள் எடுக்க, மத்திய பிரதேசம் 170 ரன்னில் ஆட்டமிழந்தது. 2 ஆவது இன்னிங்ஸில் 279 ரன்களை பெங்கால் எடுத்தது. இதையடுத்து 548 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மத்தியபிரதேசம் அணி 241 ரன்னில் ஆட்டமிழந்து 306 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 16ஆம்தேதி நடைபெறுகிறது.