-நக்கீரன்
கோலாலம்பூர், பிப்.14:
2022 முள்ளி வாய்க்கால் நினைவு நாள் தொடர்பாக, பாஜக மேடையில் ஏறியபொழுதே பழ.நெடுமாறனும் காசி ஆனந்தனும் காவி நிறத்தினுள் சங்கமமாகியது வெட்ட வெளிச்சமானது.
அடுத்த ஒன்பது மாதங்களில் இப்பொழுது, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் மேதகு பிரபாகரன் உயிருடன் இருப்பதாக மறு உறுதிப்படுத்தி இருக்கிறார் பழ.நெடுமாறன்; காவி ஆனந்தன்.
இந்த அறிவிப்பைச் செய்வதற்கு அவர் தேர்ந்தெடுத்த இடம், தஞ்சை முள்ளி வாய்க்கால் முற்றம்.
ஈழத் தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் தம் இன்னுயிரைத் துறந்த முள்ளி வாய்க்காலின் சிவப்பு அத்தியாயம், குருதி வாடை வீசியபடி தொடர்ந்து கொண்டிருக்க, அந்தப் போராட்டக் களத்தின் நினைவாக தஞ்சாவூர் விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளி வாய்க்கால் முற்றத்தை காவி அரசியலுக்கு பயன்படுத்த துணிந்துவிட்டார் பழ.நெடுமாறன்.
சோனியா காந்திக்கு வாய்த்த அரசியல் அடிமை மன் மோகன் சிங் எப்படியோ, ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் கொத்தடிமைப்பட்ட பன்னீர் செல்வம், பழனிச்சாமி எப்படியோ அதைப்போல ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனத் தலைமையின் வாழ்நாள் அடிமைதான் மோடி.
டில்லி முகலாய சாம்ராஜியத்தில் வஞ்சக அத்தியாயம் படைத்த அலாவுதீன் கில்ஜிக்கு மாலிக் காபூர் எப்படியோ அப்படித்தான் சூழ்ச்சி-வஞ்சகம்-கொலை-பிராமண ஆதிக்கம் ஆகியற்றை இரகசியக் கொள்கையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு அடிமைச் சேவகம் புரிந்து வருகிறார் மோடி.
இப்படிப்பட்ட ராஷ்ரிய சுயசேவை சங்கம்- ஆர்.எஸ்.எஸ்., 2024 செப்டம்பர் 27-இல் நூற்றாண்டை எட்டுகிறது. அதற்குள், தமிழ் நாட்டையும் ஈழத்தையும் உள்ளடக்கி ஏதோ குயுக்தியான திட்டத்தை புதுடில்லி வகுத்துள்ளது.
இந்தத் திட்டத்தில், காசி ஆனந்தனும் பழ நெடுமாறனும் கமுக்கமாக ஐக்கியமாகி உள்ளதாகத் தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் கரமான பாஜக-வின் நிழல் தேசியத் தலைவர் மோடியையும் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலையையும் பழ நெடுமாறன் புகழ்ந்து பேசியதும் அதற்கு காசி ஆனந்தன் ஒத்தூதியதும் இதன் அடைப்படையில்தான்.
இப்பொழுது மேலை நாடுகளில் மேதகு பிரபாகரன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர்கள் உயிருடன் இருப்பதாகவும் கூறி நிதி வசூலிக்கும் தந்திரம் குறித்து, 24-01-2023-இல் விடுதலைப் புலிகளின் அமைப்பு சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.
அடுத்த இரு வார காலத்தில் புது டில்லி அரசின் இணை அமைச்சர் எல்.முருகனும் அண்ணாமலையும் ஈழ மண்ணிற்கு சென்று வந்துள்ளனர்.
இந்த இருவரும் தமிழ்நாட்டிற்குத் திரும்பிய அடுத்த நாளில், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் இப்பொழுது இதை அழுத்தமாகக் குறிப்பிடுவதற்கு காரணம், காலம் கனிந்துள்ளது என்றும் நெடுமாறன் செய்தியாளர்களிடம் தஞ்சையில் பேசி இருக்கிறார்.
தலைவர் பிரபாகரன் இருப்பது உண்மையானால், அதைவிட உவப்பான செய்தி உலகத் தமிழர்களுக்கு வேறொன்றும் இருக்க முடியாது. ஆனால், உண்மை அல்லாத ஒரு தகவலை உண்மையென காசி ஆனந்தனை கூட வைத்துக் கொண்டு பழ.நெடுமாறன் அவிழ்த்து விடுவதன் சூட்சுமம் என்னவென்று புரியவில்லை.
ஆனால், ஒன்றுமட்டும் தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ். காவி வலையில் இந்த இருவரும் சிக்கி உள்ளனர் என்பது மட்டும் தெளிவாகிறது. இந்தக் காவி வலை, பன்னாட்டு அளவிலான சதியை உள்ளடக்கியுள்ளது என்பதையும் அவதானிக்க முடிகிறது.
இன்னும் சற்று காத்திருப்போம்; முற்றிய கத்தரிக்காய் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும்.