எமது யாழ் செய்தியாளர்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் (14) ஈ.பி.டி.பி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மணிவண்ணன் அணி மற்றும் புளட் என்பன கூட்டாக எதிர்ப்புத் தெரிவிக்க 8 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டமானது இன்று சபையில் மாநகர முதல்வர் இ.ஆனல்ட்டினால் முன்வைக்கப்பட்டது.
இதன்போது 1,712 மில்லியன் ரூபா பெறுமதியிலான வரவு செலவுத் திட்டமே முன்மொழியப்பட்டு விவாதம் நிறைவடைந்த பின்பு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
இன்றைய வாக்களிப்பில் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும், அளிக்கப்பட்டன.
மாநகர சபையில் பிரதி முதல்வராக இருக்கும் ரெலோ கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் து. ஈசன், புளொட்டைச் சேர்ந்த பி. தர்சானந், சு. சுபாதீஸ் ஆகிய இரண்டு உறுப்பினர்களும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எஸ். சாந்தரூபன் ஆகியோர் கூட்டத்துக்குச் சமூகமளிக்கவில்லை.
யாழ் மாநகர சபையில் இதற்கு முன்னர் முதல்வராக இருந்த மணிவண்ணன் சமர்ப்பித்த வரவு-செலவு திட்டமும் தோற்கடிக்கப்பட்டு அவர் பதவியிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டது. அப்படியான சூழல் இப்போது மீண்டும் உருவாகலாம் என்று கணிக்கப்படுகிறது.
மாநகர சபையில் உள்ள உறுப்பினர்கள் மக்கள் நலனைக் கருதி செயற்படாமல், சுய லாபம் மற்றும் கட்சி சார்ந்த அரசியலை முன்னெடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளனர். உறுப்பினர்களிடையே மக்கள் நலம் தொடர்பில் ஒற்றுமை இல்லாததால் யாழ் மாநகரில் பல பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் மனம் வருந்துகின்றனர்.
அரசியல் கட்சிகள் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்படாவிட்டால், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அவர்களிற்கு தக்கபாடம் புகட்டப்படும் எனவும் யாழ் மாநகர மக்கள் எச்சரித்துள்ளனர்.