இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சில சாதனைகள் ஏற்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். டெஸ்டில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்த ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும், 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லி மைதானத்தில் நாளை மறுதினம் தொடங்குகிறது.
இந்த போட்டியில், 100 ரன்களை புஜாரா எடுத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன் எடுத்த 4ஆவது வீரர் என்ற சாதனையை ஏற்படுத்துவார். டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த டாப் 20 வீரர் என்ற பட்டியலில் இடம்பெற ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித்திற்கு 73 ரன்கள் தேவை. இந்த டெஸ்ட் புஜாராவுக்கு 100ஆவது டெஸ்ட் போட்டியாகும். இவருக்கு முன்பாக 12 இந்திய வீரர்கள் 100 டெஸ்ட்களில் விளையாடியுள்ளனர். பார்டர் – கவாஸ்கர் தொடரில் 100ஆவது விக்கெட்டை எடுக்க, ஆஸ்திரேலிய அணியின் நாதன் லியோனுக்கு இன்னும் 5 விக்கெட்டுகள் தேவை.
அனில் கும்ப்ளே இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 25 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவரின் சாதனையை முறியடிக்க அஷ்வினுக்கு மேலும் 5 விக்கெட்டுகள் தேவை. இன்னும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை ரவிந்திரா ஜடேஜா ஏற்படுத்துவார். இதேபோன்று டெஸ்டில் 2000 ரன்களை எடுப்பதற்கு அவருக்கு இன்னும் 62 ரன்கள் தேவைப்படுகிறது. தனது 50ஆவது விக்கெட்டை எடுக்க அக்சர் படேலுக்கு இன்னும் 2 விக்கெட்டுகள் வேண்டும். 2ஆவது டெஸ்டில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை, கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக பெறுவார் அஷ்வின்.