“சிவாஜிலிங்கம் தனது ஆதங்க ஆவேசத்தை வெளிப்படுத்துகிறார். இது அவரது உரிமை.அவரது ஆவேச கோரிக்கைகள் தமிழ் மக்களின் ஆவேச கோரிக்கைகள்தான். எனக்கு அதில் மாற்று கருத்து தெரியலை. ஆனால் இவர் இப்படி தன்னந்தனி மனிதராக இதை செய்யும்போது, அவர் முன்வைக்கும் கோஷங்களும் பலவீனமடைகின்றனவே? தவிர்க்க முடியாமல் ஒரு கோமாளி தோற்றப்பாடும் ஏற்படுகிறதே? இவற்றை இன்னமும் கட்சி, இயக்கரீதியாக பலமாக திட்டமிட்டு அமைப்புரீதியாக செய்ய முடியாதா?”
இவ்வாறு கேட்டிருப்பவர் மனோகணேசன்.சுதந்திர தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வில் பங்குபற்றுவதற்காக வருகை தந்த ஜனாதிபதிக்கு எதிராக சிவாஜிலிங்கமும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்புக் காட்டியிருந்தார்கள். இதில் சிவாஜி லிங்கம் தனி ஒரு ஆளாக நின்று கோஷம் எழுப்பும் காணொளியை பார்த்துவிட்டு மனோகணேசன் மேற்கண்டவாறு கேட்டார்.
இயல்பிலேயே சிவாஜிலிங்கம் ஒரு தனிமனித ராணுவந்தான். நினைவேந்தலிலும் அவர் அப்படித்தான், எதிர்ப்புப் போராட்டங்களிலும் அப்படித்தான். பெரும்பாலான அவருடைய துணிச்சலான அரசியல் செயற்பாடுகளில் அவர் தனியாகத்தான் முன்செல்கிறார்.அதை ஒரு குழுச் செயல்பாடாகவோ, அல்லது கட்சிச் செயற்பாடாகவோ, அல்லது மக்கள் மயப்பட்ட ஒரு செயற்பாடாகவோ ஒழுங்குபடுத்தவேண்டும் என்று அவர் யோசிப்பதில்லை. சில சமயம் அவ்வாறு மற்றவர்களைக் கூட்டுச் சேர்ப்பது கடினமானது என்று அவர் கருதுகிறாரா?
ஆனால் எதிர்ப்பைக் காட்டும்போது அதை ஏதோ ஒரு விதத்தில் உலகத்தையும் ஊடகங்களையும் கவரும்விதத்தில் படைப்புத்திறனோடும், புத்திசாலித்தனமாகவும் ஒழுங்கமைக்கவேண்டும். ஆனால் தமிழ் அரசியல்பரப்பில் அவ்வாறு அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களில் படைப்புத்திறனோடு கூடிய கூட்டுச் செயற்பாடுகளை அனேகமாக காணமுடிவதில்லை.
அவ்வாறு மக்கள்மயப்படாத போராட்டங்கள் உரிய செய்தியை,உரிய தாக்கத்தோடு,உரிய தரப்புகளுக்கு உணர்த்தத் தவறுகின்றன. யாழ்ப்பாணத்தின் முக்கிய சந்தைகளில் வெள்ளை உடுப்போடு ஒரு ஸ்பீக்கரை கையில் வைத்துக்கொண்டு மதபோதனையை முன்னெடுக்கும் ஒருவரை பெரும்பாலானவர்கள் கண்டிருக்கிறோம். அது அவருடைய நம்பிக்கை. ஆனால், அதைப்போல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் செயற்பட முடியாது.
சுதந்திர தினத்திலன்று பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி ஊர்வலமாக போனார்கள்.அதில் உதிரிகளாக கட்சி பிரமுகர்கள் காணப்பட்டார்கள்.சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்களோடு கலந்து கொண்டார்கள்.முன்பு நடந்த பீ2பி போராட்டத்தைப் போல பெருந்திரளான எண்ணிக்கையில் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதில் பங்குபற்றவில்லை. அதாவது அந்த எதிர்ப்பு பேரணியில் கட்சிகளின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவாக காணப்பட்டது.ஏன் அதிகம் போவான் அதில் பங்கு பற்றிய பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கையே நூற்றுக்கும் குறைவு.
மாணவர்களின் போராட்டம் தொடங்கமுன்பே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் மாணவர்களுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் தோன்றின. மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தை தொடங்கியபொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாக ஒரு போராட்டத்தை நடத்தியது. அதே நாளில் மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி தனியாக ஒரு போராட்டத்தை நடத்தியது. அப்போராட்டமானது அரசாங்கத்துக்கு எதிரானது மட்டுமல்ல,குறிப்பாக குத்துவிளக்கு சின்னத்தின் கீழ் காணப்படும் டெலோ இயக்கத்துக்கும் எதிரானது.
இவ்வாறாக சுதந்திர தினத்தையொட்டி நடந்த போராட்டங்களை தொகுத்துப் பார்த்தால் தமிழ்மக்கள் கூட்டாகவும் செயல்பட மாட்டார்களா? படைப்புத்திறனோடு போராடவும் மாட்டார்களா? என்று கேட்கத் தோன்றுகிறது.மட்டக்களப்பில், சுமந்திரனும் சாணக்கியனும் அவர்களுடைய ஆதரவாளர்களும் காந்தி குல்லாயோடு காட்சியளித்தமை ஒரு படைப்புத்திறனாகப் பார்க்கப்படவில்லை. மாறாக அது ஒரு பகிடியாகப் பார்க்கப்பட்டது.
இவ்வாறாக கடந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளில் நடந்த போராட்டங்கள் அனைத்திலும் கூட்டுச் செயற்பாடு குறைவாக இருந்தது. தனிமனித முனைப்பு அல்லது கட்சி முனைப்பு துருத்திக் கொண்டு தெரிந்தது. படைப்புத்திறன் இருக்கவில்லை.பழைய சலித்த அதே போராட்ட வழிமுறைகள். போலீசார் கைது செய்தபடியால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டத்திற்கு ஒரு கவனிப்பு கிடைத்தது.அதுவும் பிணை கிடைத்தவுடன் கொதிப்பு அடங்கிவிட்டது.
இவ்வாறு உலகின் கவனத்தை ஈர்க்கமுடியாத போராட்டங்களால் ஒரே ஒரு நன்மை உண்டு. குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளர்களை ஓரளவுக்கு கூட்டிக் கட்டி வைத்திருக்க அது உதவும். ஆனால் அதைவிட ஆழமான பொருளில் தமிழ் மக்களை ஒரு தேசமாக திரட்ட மேற்படி போராட்டங்களால் முடிந்திருக்கிறதா?
புலம்பேந்து வாழும் ஒரு நண்பர் அண்மையில் கேட்டார்… ”போராட்டம் என்று சொன்னால் தமிழ் மக்கள் எப்பொழுதும் வீதியிலே நிற்க வேண்டுமா? ஒரு மக்கள் கூட்டம் ஆண்டு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்களையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்திக் கொண்டிருக்க முடியுமா?” என்று.பொருத்தமான கேள்வி.
ஒர் உடனடிக் பிரச்சினையை முன்வைத்து நிகழும் மக்கள் போராட்டங்கள் அவற்றின் இலக்கை அடையும்வரை தொடர்வது தவிர்க்க முடியாது. உதாரணமாக டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டம். ஆனால் ஒரு மக்கள் கூட்டத்தின் விடுதலைக்கான ஒரு போராட்டத்தை பொறுத்தவரை குறிப்பாக அறவழிப் போராட்டம் என்று வரும்பொழுது ஆண்டு முழுக்க போராட முடியாதுதான். ஏன் அதிகம் போவான் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எத்தனை நாள் போராடியிருக்கிறார்கள் என்பது இடைக்கிடை ஊடகங்களில் வெளிவரும். ஆனால் அப்போராட்டங்கள் எந்தளவு தூரத்துக்கு உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன? அல்லது எந்த அளவுக்கு சொந்த மக்களை சென்றடைந்திருக்கின்றன?
ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல அறவழிப் போராட்டத்திலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை போராட்டம் எனப்படுவது இறுதியிலும் இறுதியாக தேசத்தை நிர்மாணிப்பதுதான். தேசத்தை நிர்மாணிப்பது என்பது ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாக வனையும் அடிப்படை மூலக்கூறுகளை பலப்படுத்துவது தான். அதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்குவதுதான்.ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கருநிலை அரசு இருந்தது. அது தேச நிர்மாணத்துக்கு வேண்டிய கட்டுமானங்களை ஏதோ ஒரு விகிதமளவுக்கு கட்டியெழுப்பிக் கொண்டிருந்தது.ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறு தேசநிர்மாணத்துக்கு தேவையான கட்டமைப்புகள் எவையும் கட்டி எழுப்பப்படவில்லை. பதிலாக அவ்வப்போது காட்டப்படும் சிறிய மற்றும் பெரிய எதிர்ப்புகளுக்கூடாக கட்சிகளைத்தான் கட்டியெழுப்பி வருகிறார்கள்.
எனவே தமிழ் மக்கள் போராட்டம் என்பதனை தனிய எதிர்ப்பு அரசியலாக மட்டும் சுருக்கி பார்க்காமல் அதைவிட பரந்தகன்ற அர்த்தத்தில் அதை தேச நிர்மாணமாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாகத் திரட்டும் அடிப்படை அம்சங்களைப் பலப்படுத்தும் விதத்தில் உரிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அவ்வாறான கட்டமைப்புகளில் ஒன்றாக போராட்டத்திற்கான மக்கள் அமைப்பும் கட்டி எழுப்பப்பட வேண்டும்
தமிழ் கட்சிகளில் பெரும்பாலானவற்றிடம் மாணவ அமைப்புகள் இல்லை. யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள சிங்கள மாணவர்கள் மத்தியில் தென்னிலங்கையில் இயங்கும் ஜேவிபி போன்ற கட்சிகளுக்கு உறுப்பினர்கள்உண்டு.சிறிய அளவில் கட்டமைப்புகளும் உண்டு.ஆனால் போராடும் தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறான கட்டமைப்புகள் கிடையாது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் அவ்வாறு மாணவர் போராடடத்திற்கூடாக மேலெழுந்த ஒருவர். ஆனால் அக்கட்சியிடமும் பலமான மாணவ அமைப்புக்கள் கிடையாது, அப்படிப்பட்ட கட்டமைப்புகள் இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான், பல்கலைக்கழக மாணவர்களின் ஊர்வலத்தைப் பலப்படுத்தி பிரம்மாண்டமானதாக கட்டமைக்க வேண்டும் என்ற அக்கறை கட்சிகளிடம் இருக்கவில்லை மாணவர்களிடமும் இருக்கவில்லை
தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாவற்றுக்கும் மாணவ அமைப்புகள்,மகளிர் அமைப்புகள் என்று வெவ்வேறு வயது மட்டங்களுக்கு ஏற்ப கட்டமைப்புகள் உண்டு. குறிப்பாக கேரளா,மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கொமியூனிஸ்ற் கட்சிக்கு இளையோர் மத்தியில் மூன்றுக்கும் குறையாத கட்டமைப்புகள் உண்டு.பள்ளி மாணவருக்கு ஒரு கட்டமைப்பு, பல்கலைக்கழக மாணவருக்கு ஒரு கட்டமைப்பு, மாணவப் பருவத்தைக் கடந்தவர்களுக்கு ஒரு கட்டமைப்பு, என்றெல்லாம் கட்டமைப்புகள் உண்டு. ஆனால் தமிழ் கட்சிகளுக்கு அப்படியெல்லாம் கட்டமைப்புகள் இல்லை.ஆனால் ரோட்டரிக் கிளப் போன்றவற்றுக்கு அப்படிப்பட்ட கட்டமைப்புகள் உண்டு.
இப்பொழுது உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான அறிவிப்புகள் வந்தபின் பெண் வேட்பாளர்களை தேடி கட்சிகள் ஓடத்தொடங்கி விட்டன கிராம மட்ட மகளிர் அமைப்புகள் பலமாக இருந்தால் அதற்குள் இருந்தே உள்ளூர் தலைமைத்துவங்கள் மேலெழுந்து வரும்.அப்படிப்பட்ட கட்டமைப்புகள் இல்லாத வெற்றிடத்தில்தான் தேர்தல் என்று வந்ததும் வேட்பாளர்களைத் தேடி அலையும் ஒரு நிலை.அதிலும் பெண்கள் பொறுத்து உள்ளூராட்சித் தேர்தல்களில் 25 விகிதம் பெண் வேட்பாளர்கள் இருக்க வேண்டும் என்று சட்ட ஏற்பாடு உருவாக்கப்பட்ட பின்னர்தான் கட்சிகள் பெண்களை வேட்பாளர்களாக இணைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது.மற்றும்படி பால் சமநிலையை பேண வேண்டும் என்று எத்தனை கட்சிகள் சிந்திக்கின்றன?
எனவே கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட முடியாத தமிழ்க் கட்சிகள் குறைந்தபட்சம் கட்சிகளைக்கூட உரிய கட்டமைப்புகளுக் கூடாகக் கட்டியெழுப்பவில்லை. இருக்கின்ற சில கட்டமைப்புகளும்கூட விசுவாசக் கட்டமைப்புகளே தவிர, அரசியல் மயப்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் அல்ல. இவ்வாறான ஒரு வெற்றிடத்தில்தான் போராட்டம் என்று வரும்பொழுது தனிமனித முன்னைப்புகள் துருத்திக்கொண்டு தெரிகின்றன. படைப்புத்திறன் குறைந்த போராட்டங்கள் மக்களையும் ஊடகங்களையும் வெளியுலகத்தையும் போதிய அளவுக்கத் ஈர்க்கத் தவறுகின்றன.