தமிழும் சைவமும் மிளிர்ந்த பத்துமலையில் சரவணன் வினாக் கணைகள்!
-நக்கீரன்
கோலாலம்பூர், பிப்.19:
மலேசிய இந்து சங்கத்தின் சமய விழாக்களுள் தலையாய நிகழ்வான தேசியத் திருமுறை விழா 44-ஆவது தடவையாக இன்று பிப்ரவரி 19-ஆம் நாள் பத்துமலை தமிழ்ப் பள்ளி வளாகத்தில் தமிழும் சைவமும் மிளிரும் வண்ணம் நடைபெற்றது.
‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தலைமையேற்று, முதல் முறையாக நடைபெற்ற இந்த விழாவில் அரசியல்வாதியா-இலக்கியவாதியா-சமயவாதியா என்று அடையாளம் காணமுடியாத டத்தோஸ்ரீ மு.சரவணன், பிற்பகலில் நடைபெற்ற 2-ஆவது அங்கத்தை தொடங்கி வைக்குமுன் ஆற்றிய சிறப்புரை தேர்ந்த சமய உரையாகவும் திருமுறை நெஞ்சத்தினரின் உள்ளத்தை வருடிய நன்னெறிக் கருத்துரையாகவும் அமைந்தது.
தமிழினத்திற்கு கோடரிக் காம்பாக இருந்தாலும் இலக்கியத் தமிழுக்கு பூங்கொத்தாக விளங்கும் கம்பராமாயணத்தை யாத்த கம்பனைப் போற்றுவார் சரவணன்; கம்பதாசனாம் கண்ணதாசனையும் புகழ்வார் இவர்; கந்தனுக்கும் சரணம் பாடும் சரவணன், காவடி சுமந்து ஆடவும் செய்வார்; கந்தனின் தந்தை பரமனையும் போற்றுவார் என்பது இன்று தெரிந்தது.
உலகாளும் அன்னை உமையவளின் ஒருபாகமாக நின்றாடும் சிவபெருமானே நேரில் வந்து தங்களை ஆட்கொள்ளும் அளவுக்கு அன்றாடம் தொண்டறம் புரிந்தது ஒருபுறமிருக்க, ஒருகால் அல்ல; இருகால் அல்ல; ஊனோடு உயிர் ஒட்டியிருக்கும் எக்காலமும் சிவனை நினைந்து நினைந்து நல்ல தமிழில் பாடியவர்கள் அடியார்கள் எனப்படும் நாயன்மார் பெருமக்கள்.
அத்தகைய ஆன்றோரர், பரம்பொருளர் சிவனை நினைந்து நினைந்து உள்ளம் உருகிப் பாடிய திருமுறைப் பாடல்களை, இறப்பு வீட்டிலும் உயிர்நீத்த உடலத்தின் அருகிலும் பாடுவதற்கென முறைமை கண்ட இன்றைய சமயப் போக்கு சரிதானா என்று ஆயிரக் கணக்கில் திரண்டிருந்த திருமுறைத் திருக்கூட்டத்தினரைப் பார்த்து வினாத் தொடுத்த சரவணன், இவற்றை யெல்லாம் சீர்படுத்த வேண்டிய அருங்கடமை இந்து சங்கத்திற்கு இருக்கிறது என்றார்.
தவிர, செல்வாக்கினாலோ அல்லது அதிகாரத்தினாலோ இறையருளை ஒருவராலும் பெற்றுவிட முடியாது; துதிபாடலிலும் பரிகாரத்திலும் மயங்காத அவனருளை விலைவைத்து வாங்கவும் முடியாது என்பதற்கு 63 நாயன்மாரில் ஒருவரான பூசலார் நாயனாரின் ஆன்மிகப் பயணம் தெளிவாக விளக்குகிறது என்றார் சரவணன்.
காஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பல்லவ மன்னனான காடவர்கோன், அரும்பாடுபட்டு ஒரு சிவ தலத்தை உருவாக்கினான். திருப்பணி யாவும் நிறைவுற்று, திருக்குட நன்னீராட்டு விழாவிற்காக பொருத்தமான நாளை உறுதிசெய்தபின் பரம்பொருளரின் திருவுள ஒப்புகைக்காகக் காத்திருந்த வேளையில், காடவர்கோனின் கனவில் வந்த சிவபெருமான், இதே நாளில் வேறொரு தலத்தில் காட்சியளிக்க நான் செல்ல வேண்டி இருப்பதால், மன்னா நீ, இன்னொரு நாளை உறுதிசெய்து கொள் என்றார்.
நின்னாட்சிக்கு உட்பட்ட திருநின்றவூரில் பூசலார் என்பவர் எனக்காக ஒரு மாளிகை எழுப்பி இருப்பதுடன், நீ குறிப்பிடும் அதே நாளில் பூசலார் முன்னதாகவே ஒப்புதல் பெற்றுள்ளதால் நான் அங்குதான் செல்ல இருக்கிறேன் என்றும் சொல்லிவிட்டு மறைந்தாராம்.
இது கனவாகவும் தெரியவில்லை; நினைவாகவும் புரியவில்லையே என்று உறக்கத்தையும் இருப்பையும் தொலைத்து பரிதவித்த காடவர்கோன், பொழுது புலர்வதற்கு முன்பே திருநின்றவூருக்கு சென்று, அங்கு புதிதாக எழுப்பப்பட்டுள்ள சிவதலம் எங்கே இருக்கிறதென்று தேடித்தேடி அலைந்தும், ஓரிடத்திலும் அத்தகைய புத்தாலயத்தை காடவர்கோனால் காணமுடியவில்லை.
வேறுவழியின்றி பூசலாரின் இருப்பிடம் தேடி, அவரை அழைத்தபோது, பூசலாரோ ‘தம்முடைய் இருப்பிடத்தைத் தேடி மன்னரே வந்திருக்கின்றாரே’ என்று பதற்றமும் அச்சமும் ஒருசேர மனதைப் பற்றிய வண்ணம் மன்னர்முன் வந்து நின்றதும்..;
“எங்கே நீ எழுப்பிய ஆலயம்?” என்று மன்னன் அதட்டியுள்ளான்.
மன்னர்கோனே, “என் அன்றாட வாழ்வில் சிவனடியார்களுக்கு எளிய தொண்டாற்றி வந்த வேளையில், இதே ஊரில் லிங்கத் திருமேனியாக எழுந்தருளியிருந்த ஈசனுக்குக் கூரையில்லாததால், அகிலம் படைத்த அந்த ஆலவாயனுக்கு ஓர் ஆலயம் எழுப்ப விரும்பினேன். ஆனால், என்னிடம் போதிய பொருள் இன்மையால், அதைத் தேடி அலைந்தேன். ஒருவழியும் புலப்படாமல், உடலும் உள்ளமும் சோர்ந்து நின்றேன்; அப்போது, ஈசன் என் மனத்தில் தன் திருமேனி தோன்ற நின்றார். அதனால், ‘புறத்தே கோயில் எழுப்பத்தானே பொருள் தேவை. இனி அகத்தே அவனை நிறுத்திக் கோயில் எழுப்புவோம்’ என்று முடிவு செய்து என் உள்ளத்தில்தான் பார்த்துப் பார்த்து கோயில் கட்டி இருக்கிறேன். திருப்பணி யாவும் நிறைவுப்பெற்று, இப்பொழுது பரம்பொருள் காட்சி தரவும் சித்தம் இசைந்துள்ளார்; இதுதான் நடந்தவை” என்று பூசலார் சொன்னதும் மன்னர் காடவர்கோன், உடனே பூசலாரின் திருவடியைத் தொழுது அரண்மனைக்குத் திரும்பினான் என்பது, பூசலார் நாயனாரின் வாழ்க்கை;
இந்த ஆன்மிக வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது பாடம், சிவனை வழிபாட்டு நாயகனாகக் கொண்ட திருமுறைக் கூட்டத்தினர், புறவழிபாட்டைக் காட்டிலும் அகவழிபாட்டில் அக்கறைக் கொள்ளுதல் நலம் என்று பேசினார் சரவணன்.
மலேசிய இந்து சங்கத்திற்கு ஒரு நல்ல தலைவராக ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் வாய்த்திருக்கிறார். இவரின் தலைமையில், மலேசிய இந்து சங்கம் இன்னும் சிறப்பாக வளர்ச்சி காண வேண்டும்; அதற்கு ஏதுவாக, இந்து சங்கத்தில் பாடம் கற்ற மாணவனான தாமும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் அரசியல் இயக்கமும் பொருளாதார அடிப்படையிலும் இன்னும் பிற வகையிலும் தேவையானவற்றைச் செய்வோம் என்று சரவணன் உறுதி அளித்தார்.
மஇகா முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியமும் இதில் கலந்து கொண்டார்.
முன்னதாக, காலை நிகழ்ச்சியில் பினாங்கு துணை முதல்வரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் இராமசாமி கலந்து கொண்டு, இந்து சங்கத்தின் 44-ஆவது தேசியத் திருமுறை விழாவை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மலேசிய இந்து சமுதாயத்திற்கு ஓர் அரணாகத் திகழ வேண்டிய கடப்பாடு, மலேசிய இந்து சங்கத்திற்கு இருக்கிறது. குறிப்பாக, எளிய மக்கள் எதிர்கொள்ளும் மதமாற்றம் உள்ளிட்ட சிக்கலைக் களைய இந்து சங்கம் போராட வேண்டும். சிவ வழிபாட்டிலும் கௌமார நாயகன் முருக வழிபாட்டிலும் நம்பிக்கை கொண்ட தாங்களும் இந்து சமய எல்லைக்கு உட்பட்டவர்கள்தான் என்று குறிப்பிட்ட பேராசிரியர் ப.இராமசாமி, புதிய தலைவர் தங்க கணேசன் தலைமையில் சிறப்பாக செயல்படும் மலேசிய இந்து சங்கத்திற்கு தங்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றும் குறிப்பிட்டார்.