தமிழ்த் திரைப்படத்துறை என்றவுடன் எமக்கு உடன் ஞாபகத்திற்கு வருவது தென்னிந்திய திரைப்படங்களே! அனால் அதையும் தாண்டி ஈழத் திரைப்படத்தறை. புலம் பெயர் தமிழர்களின் திரைப்படத்துறை என்ற இரண்டு தளங்களிலிருந்தும் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பெற்று திரைகளுக்கு வந்த வண்ணமே உள்ளன.
இவ்வாறு திரைப்படங்களை தயாரிப்பதும் அவற்றை பல்வேறு நாடுகளிலம் திரையிடுவதும் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவதும் விருதுகளைத் தட்டிக் கொள்வதும் என் காதுகளுக்கும் கண்களுக்கும் அருகில் வந்து போகின்ற தகவல்களாக உள்ளன.
இவ்வாறான நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கனடாவின் ஸ்காபுறோ நகரில் திரையிடப்பெற்ற ‘பொய்மான்’ என்னும் புலம் பெயர் தமிழர்களின் திரைப்படத்தை பார்த்து இரசித்த பின்னர், விமர்சனம் ஒன்றை எழுத வேண்டும் என்ற உற்சாகமான எண்ணத்தைத் தோற்றுவித்துள்ளது என்பதே இந்தப் பதிவிற்கான காரணமாகும்.
ஒரே வரியில் கூறுவதானால் “புலம் பெயர் தமிழர்களின் திரைப்படத் தயாரிப்பு முயற்சிகள் அவ்வப்போது சற்று விலகிச் சென்றாலும் அண்மைக் காலங்களில் சரியான பாதையிலேயே செல்கிறன என்பதை மெய்ப்பித்த திரைப்படமாக ‘பொய்மான்'” திகழ்கின்றது
கனடாவில் ‘பொய்மான்'” ஐ நாம் பார்த்து ரசித்து பரவசத்துடன் படமாளிகையை விட்டு வெளியேவந்த போது ரசிகர் அனைவரும் ஒரே குரலில் ‘சபாஷ்’ என்று பகிர்ந்து கொண்டமை அவர்கள் முகங்களில் காணப்பெற்ற ‘மலர்ச்சி’ ஆகியவை அந்த திரைப்படத்திற்கு கனடாவில் மாபெரும் மகுடம் சூட்டப்பெற்றதற்கு ஒப்பானது என்றே பதிவு செய்கின்றோம்.
திரைப்படத்தின் கதையை முழுமையாகச் சொல்வஐது விட . படத் தயாரிப்பில் அடங்கியுள்ள உத்திகள். இயக்கம். நடிக நடிகைகளின் பாத்திரப் படைப்புக்கள் தொழில் நுட்பம், குறிப்பாக ஒளிப்பதிவு. இசை. பாடல்கள் நடிப்பு என இவை அனைத்திலும் காணப்பட்ட சிறப்புக்களை இந்தப் பதிவில் குறிப்பிடுவது தவிர்க்க முடியாதது என்பதே எமது கருத்தாகும்.
படமாளிகையை விட்டு வெளியேறிய போது.. அவுஸ்த்திரேலியா வாழ் வைத்தியப் பெருந்தகை ஜெயமோகன் அவர்களால் தயாரிக்கப்பட்டது என்பதோடு அவரே கதாநாயகராக நடித்தும் உள்ளார் என்பதை அறிந்து கெண்ட போது. ‘பொய்மான்’ திரைப்படத்திற்காக தன்னையும் தன் குடும்பத்தினரையும் எந்தளவிற்கு அர்ப்பணித்திருப்பார் என்பதை உணரக் கூடியதாக இருந்தது
கனடாவிற்கு வெளியே தயாரிக்கப்பெற்ற நம்மவர்களின் திரைப்படங்களைப் பார்க்க எமக்கு முன்னர் சந்தர்ப்பங்கள் கிட்டியிருந்தன. அவற்றுள் சில இன்றும் எம் மனங்களில் நிலைத்து நிற்கின்றன. அதே போன்று அவுஸ்த்திரேலியாவில் தயாரிக்கப்பெற்ற திரைப்படமாக இருந்தாலும் எமது வடக்கு கிழக்கு தாய் மண்ணின் அழகையும் அதன் வளத்தையும் அதற்கு மேலாக எமது மக்கள் இராணுவ அடக்குமுறையின் கீழ் அனுபவித்த வலிகள் மற்றும் இழந்த உறவுகள் உடமைகள் பற்றிய காட்சிகளை சில நிமிட நேரத்திற்குள் திரைக்குள் கொண்டு வந்து காட்டி எம்மவர்களை கண்ணீர் சிந்தவைத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். ஓளிப்பதிவாளர் ஆகியோரை பாராட்டாமல் இருக்க முடியாது.
‘பொய்மான்’ திரைப்படத்தின் கதைக் கருவைப் பற்றி நினைக்கின்றபோது அது ஒரு சவால்கள் நிறைந்த ஒன்றாகவே நாம் பார்க்கின்றோம்.
ஞாபக மறதி (amnesia) நோயால் பாதிக்கப்பட்டவர் என்று பொய்யைச் சொல்லி அந்த நோயாளியாக நடித்து அதன் மூலமாக திரைக்கதையை நகர்த்தி அதற்குள் எமது தமிழர் சமூகத்திற்குள் புரையோடிப் போயுள்ள மனித நேயத்தையும் தியாகங்களையும் அதற்கு சமாந்தரமாக படிந்துள்ள பொருளாசை. ஏமாற்றுத்தனம் ஆகியவற்றை கதையின் மூலமும் வசனங்கள் மூலமும் எடுத்துச் சொல்லும் ‘பொய்மான்’ திரைப்படத்தில் ஆரோக்கியமான நகைச்சுவைகளுக்கும் பஞ்சமில்லை என்றே துணிந்து பதிவு செய்கின்றோம்.
ஒரு வேண்டுகோள் இந்த திரைப்படத்தை கனடாவில் திரையிட ஏற்பாடுகள் செய்தவர்களுக்கு. தயவு செய்து இந்த ‘பொய்மான்’ மீண்டும் எமது இரசிகர்களுக்கு காட்டப்பட வேண்டும். அதே நேரத்தில் கனடா வாழ் திரைப்பட ரசிகர்களுக்கான ஒரு வேண்டுகோள்:- அற்புதமான கலைப்படைப்பான’ பொய்மான்’ மீண்டும் இங்கு திரையிடப்பெறுகின்ற போது. எவ்விதமான தயக்கமும் இன்றி அன்றே படமாளிகைகளுக்குச் சென்று அதைப் பார்த்து ரசித்து எம்மைப்போன்று பாராட்டுங்கள். இவ்வாறான எம்மவர் திரைப்படங்கள் தொடர்ந்த வெண் திரைகளில் தோன்றிட வழி செய்யுங்கள் என்பதை தயவுடன் பதிவு செய்கின்றோம்.
‘பொய்மான்’ திரைப்படத்தின் உருவாக்கத்தில் பின்னால் உள்ள விபரங்களையும் நாம் இங்கு பதிவு செய்கின்றோம்.
அவுஸ்திரேலிய மண்ணில் ஷோபனம் கிரியேஷன்ஸ் கலைஞர்களால் உருவாகியுள்ள “பொய்மான்” திரைப்படம், தமிழ்க் கலைஞர்களின் அரியதொரு படைப்பாக காணப்படுகிறது. கங்காரு தேச தமிழ் சினிமா படைப்பாற்றலில் இத்திரைப்படம் ஓர் மைல்கல்லாக தடம் பதிக்கும் என்றும் எதிர்வு கூறலாம்.
அவுஸ்திரேலிய மண்ணில் உருவாகிய “பொய்மான்” ஆஸ்திரேலிய திரையரங்குகளில் ஏற்கெனவே திரையிடப்பட்ட போது பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது. “பொய் மான்”. இவ் முழுநீள திரைப்படத்தில் ஜனார்தன், கவிஜா, ஜெயமோகன், ஷர்மினி அகிய நடிக நடிகைகள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷோபனம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில்புற்றுநோய் மருத்துவராகவும், மேடை நாடகம், குறும்பட இயக்குனாராகவும் அவுஸ்த்திரேலியாவில் நன்கு அறியப்படும் மருத்துவர் ஜெயமோகன் முழுநேர திரைப்பட இயக்குனாராக அறிமுகமாகியுள்ளார்..
இந்திய சினிமாக்களுக்கு ஒப்பாக போட்டி போடும் வகையில்,புலம்பெயர் இளங் கலைஞர்களின் படைப்பாற்றலில் அவுஸ்திரேலியாவில் உருவாகிய “பொய்மான்” திரைப்படம் தமிழ் சினிமா உலகில் ஓர் வரலாற்றுச் சாதனை படைக்கும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை ஒரு கப்புசினோ காதல் மற்றும் பூமராங் போன்ற பாராட்டப்பட்ட குறும்படங்களையும் இயக்கிய டாக்டர் ஜே ஜெயமோகன் எழுதி இயக்கியுள்ளார். இயக்குனர் ஜெயமோகனின் இரண்டு குறும்படங்களும் உலகளவில் 50,000க்கும் அதிகமான பார்வைகளுடன் பலத்த பாராட்டுக்களையும் பெற்றுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது
பொய் மான் திரைப்படத்தின் எடிட்டிங்கை செந்தில்குமார் ஆர் மற்றும் ஹரிஷ் செய்துள்ளனர். கலை இயக்கம் பணியை ஷாமினின் சி ஆற்றியுள்ளனர்.
இத்திரைஇசை பாடல்களின் வரிகளை பாரதியார், குவேந்திரன், ஜெயமோகன், ஆதி எழுதியுள்ளனர். பொய்மான் படத்தின் இசையை சாரு ராம், ஆதி, குரு பி ஆகியோர் மெருகூட்டியுள்ளனர்.
பலத்த எதிர் பார்ப்புகளுடன் வெளிவரும் பொய்மான் பாடல்களை கலைமாமணி பூஷணி கல்யாணராமன், கிரே , ஆர்.பி ஷ்ரவன் (சூப்பர் சிங்கர்), ஆதி ஆகிய பாடகர்கள் பாடியுள்ளனர்.
கனடாவிலிருந்து மலையன்பன்