(மன்னார் நிருபர்)
(21-02-2023)
மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு,மன்னார் நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு,மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தப்பிய இரண்டு கைதிகளில் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (21) காலை மண்டபம் அகதி முகாமில் தஞ்சமடைந்துள்ள தாக தெரிய வருகிறது.
குற்றம் ஒன்றின் காரணமாக மன்னார் போலீசாரால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் தப்பிய மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான செல்வராஜ் சிந்துஜன் கடல் மார்க்கமாக மண்டபம் அகதி முகாமில் இன்று செவ்வாய்க்கிழமை(21) அதிகாலை தஞ்சமடைந் துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிந்துஜன் தந்தை செல்வராஜ் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை சிந்துஜன் மண்டபம் அகதி முகாமில் தஞ்சம் அடைந்துள்ளதால் உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் குறித்த நபர் மண்டபம் அகதி முகாமில் உள்ளமை தெரிய வருகிறது.
-குறித்த நபர் வவுனியா சிறைச்சாலையில் குற்றம் ஒன்றிற்றாக தடுத்து வைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது மன்னாரை சேர்ந்த இருவர் கை விலங்குடன் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
-இந்த நிலையில் குறித்த நபர் தலைமன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.
தப்பிய மற்றைய கைதியை பொலிஸார் தேடி வருகின்றனர்.