மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் உத்தரப் பிரதேச அணியான உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்டராக இருக்கும் அலிசா ஹீலி, உ.பி. வாரியர்ஸுக்கு பலம் சேர்ப்பார் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அணியின் உரிமையாளராக கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நன்கு அறியப்பட்ட வீராங்கனையாக அலிசா ஹீலி உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக 139 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஒரு சதம், 14 அரைச்சதங்களுடன் 2,500 ரன்களை எடுத்துள்ளார். மிகச்சிறந்த விக்கெட் கீப்பராகவும் அறியப்படும் இவர், 110 டிஸ்மிஸல்களையும் செய்திருக்கிறார்.
கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து அலிசா ஹீலி கூறுகையில், ‘உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதை பொறுப்பு நிறைந்ததாகவும், பெருமையாகவும் கருதுகிறேன். இது முதல் மகளிர் ஐபிஎல் தொடர் என்பதால் இது வரலாற்று நிகழ்வாக அமையும். இந்த தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உ.பி. வாரியர்ஸ் அணியில் மிகச்சிறந்த வீராங்கனைகள் உள்ளனர். எங்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளோம்.
அனுபவம் கொண்டவர்களும், இளம் வீராங்கனைகளும் அணியில் உள்ளனர். ரசிகர்கள் ஆதரவும் எங்களுக்குஅதிகம் உள்ளது.’ என்று கூறியுள்ளார். மகளிர் ஐபிஎல் தொடர் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உபி வாரியர்ஸ் அணி: அலிசா ஹீலி (கேப்டன்), சோஃபி எக்லெஸ்டோன், தீப்தி ஷர்மா, தஹ்லியா மெக்ராத், ஷப்னிம் இஸ்மாயில், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கெய்க்வாட், பார்ஷவி சோப்ரா, ஸ்வேதா செஹ்ராவத், எஸ் யஷஸ்ரி, தேவி லா ஹரிஸ்கிரே, கிரண் நவ்ஸ்கிரே, கிரண் நவ்ஸ்கிரே யாதவ் மற்றும் சிம்ரன் ஷேக்.