எமது யாழ் செய்தியாளர்
நீதிமன்றம் கட்டளை இட்டபின்பும் அதனை மீறி குருந்தூர்மலையில் பௌத்த கட்டுமானப் பணிகள் இடம்பெறுவதாக துரைராசா ரவிகரன் பொலிசில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குருந்தூர்மலையில் பௌத்த கட்டுமானப் பணிகள் இனி மேற்கொள்ளப்படவே கூடாது என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றக் கட்டளையை மீறி அங்கு கட்டுமானப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இப்பகுதியில் பொலீசார் பாதுகாப்புக்கடமையில் தொடர்ந்தும் ஈடுபட்டிருக்கும் நிலையிலும் அங்கே எவ்வாறு நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்த கட்டுமானப்பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன எனக் கேள்வி எழுப்பியே வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடொன்றினைப் பதிவுசெய்துள்ளார்.
முல்லைத்தீவு பொலிசில் முறைப்பாடு பதிவு செய்தபின்னர் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ”குருந்தூர்மலையில் விகாரைக்குரிய கட்டுமானப்பணிகள் தற்போது முடிவுற்றிருப்பதை எம்மால் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
குருந்தூர்மலைக்கட்டுமானப் பணிகளை இடைநிறுத்தும்படி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று உத்தரவிட்டபின்னரும்கூட அங்கு கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது”.
அதிலும் குறிப்பாக 12.06.2022 அன்று, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி கபோக் கல்லினால் ஆன புத்தர் சிலை ஒன்றினை நிறுவுவதற்கும், விசேட பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்குமான முயற்சியில் பௌத்த தேரர்களும், இராணுவத்தினரும், தென்னிலங்கையைச் சார்ந்த சிலரும் ஈடுபட்டிருந்தனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத்தெரிவித்து நாம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தோம்.
அவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக நாம் போலீசாரால் கைதுசெய்யப்பட்டோம்“.
போலீசாரல் தாங்கள் கைதுசெய்யப்பட்டு விடுதலையான பிற்பாடு, குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளை மீறப்பட்டுள்ளது என்ற விடயத்தினை நாம் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்ததாகவும் அவர் கூறினார்.
அதன்படி 19.07.2022அன்று இது தொடர்பில் ஆராய்ந்த நீதவான், குருந்தூர்மலைக்கும் நேரில் வந்து நிலமைகளைப்பார்வையிட்டதுடன், அன்றைய தினமே நீதிபதி கட்டளையொன்றையும் வழங்கியிருந்தார் என்று குறிப்பிட்ட துரைராசா ரவிகரன், நீதவான் பிறப்பித்த அக்கட்டளையில், 12.06.2022 அன்று எவ்வாறு அந்தவிகாரையின் கட்டுமானப்பணிகள் காணப்பட்டதோ, அவ்வாறே இருக்கவேண்டும். அதற்குமேல் எவ்வித கட்டுமானப் பணிகளும் இனி மேற்கொள்ளக்கூடாதென உத்தரவிட்டிருந்தார் என்பதை ஆதாரங்களுடன் முன்வைத்தார்.
அதனைக் கண்காணிக்கும் பொறுப்பு பொலிசாரிடமும் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது குருந்தூர்மலையில் கட்டுமானப்பணிகள் மிக வேகமாக இடம்பெற்று, பௌத்த விகாரை அங்கு முழுமையாக அமைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். இவற்றின் அடிப்படையில் நான் முல்லைத்தீவு பொலிஸ்நிலையத்திற்குச்சென்று, முறைப்பாடொன்றினைப் பதிவுசெய்திருந்தேன் என்றார் ரவிகரன்.
குறிப்பாக நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி குருந்தூர்மலையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருகின்றன என்பதை தாம் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளதுடன்.
இந்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் ஜெயத்திலக என்பவரின் பெயரைக் குறிப்பிட்டதுடன், கல்கமுவ சாந்தபோதி தேரர், சப்புமஸ்கட குருந்தூர்மலை விகாரதிபதி ஆகியோரது பெயர்களைக்குறிப்பிட்டு முறைப்பாட்டைப் பதிவுசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“ருந்தூர்மலையில் தொடர்ச்சியாக பொலீசார் கடமையில் இருந்தும்கூட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவே பொலீசார் இதற்கு பெறுப்புக்கூறவேண்டும்“ என்ற வகையிலே பொலிஸ் தலமைப் பொறுப்பதிகாரி அமரசிங்விற்கு எதிராகவும் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார் ரவிகரன்.
“எதிர்வரும் 02.03.2023 அன்று குருந்தூர்மலை தொடர்பான வழக்கொன்று விசாரணைக்கு வருகின்றது. அப்போது இந்தவிடயத்தை எமது சட்டத்தரணிகளுக்கு தெரியப்படுத்தி, நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரவிருக்கிறேன் “