கடந்த திங்கட்கிழமை நள்ளிரவுக்கு பின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கின்றார். அரசியல் அமைப்பின் 70 (1) அ உருப்புரையின்படி அவர் இனி நாடாளுமன்றத்தை எந்த வேளையும் கலைக்கலாம். அதாவது ராஜபக்சகளின் தாமரை மொட்டு கட்சியினர் பலமாக காணப்படும் நாடாளுமன்றத்தின் மீதான அவருடைய பிடி மேலும் பலமடையப் போகின்றது. அதுமட்டுமல்ல ஒரு தேர்தல் நடந்து அதில் தாமரை மொட்டு கட்சிக்கு முன்பு மக்கள் வழங்கிய மக்களானை காலாவதியாகிவிட்டது என்று தெரிய வந்தால் ,அப்பொழுதும் அக்கட்சியின் மீதான ரணில் விக்கிரமசிங்கவின் பிடி மேலும் பலமடையும்.
நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு.ஆனால் தேர்தல்களை நடத்துவதற்கு வேண்டிய நிதி இல்லை என்ற காரணத்தை முன்வைத்து தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படும் நிலைமைகளே அதிகம் உண்டு. அரசாங்கம் ஒரு தேர்தலை வைக்கத் தயங்குகிறது என்ற அபிப்பிராயம் பரவலாக உண்டு. அதில் ஓரளவுக்கு உண்மையும் உண்டு. இப்போதிருக்கும் அரசாங்கம் ஒரு நூதனமான சேர்க்கை. ஒற்றை யானையாகிய ரணில் விக்கிரமசிங்க தாமரை மொட்டுக்கள் பலமாக இருக்கும் நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்குகிறார். ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர். தாமரை மொட்டுக்களின் தாய்க் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. இரண்டு கட்சிகளுமே தேர்தல் அரசியலில் பரம வைரிகள். ஆனால் சிங்கள மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் கொண்டு வந்த அச்சுறுத்தல் காரணமாக இரண்டு பாரம்பரிய எதிரிகளும் தங்களுக்கு இடையே சுதாகரித்துக் கொண்டு ஒரு நூதமான கூட்டுக்கு போனார்கள். அதுதான் இப்போதுள்ள அரசாங்கம். சிங்கள அரசியல்வாதிகள் ஒரு பொது எதிரிக்கு முன் எவ்வாறு தங்களை சுதாகரித்துக் கொள்வார்கள் என்பதற்கு இப்போதிருக்கும் அரசாங்கம் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.
தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின் இந்த அரசாங்கம் அதற்குரிய மக்களாணையை இழந்து விட்டது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. எனவே ஒரு தேர்தல் நடக்குமாக இருந்தால் அதில் இந்த அரசாங்கத்திற்கு மக்களாணை இல்லை என்பது தெரியவரக்கூடும். அந்த அடிப்படையில் சிந்தித்தால், இந்த அரசாங்கத்தை பொறுத்தவரை தேர்தலை வைப்பது என்பது அமில பரிசோதனையை ஒத்தது. எனவே இந்த அரசாங்கம் தேர்தலை ஒத்திவைப்பதற்கான காரணங்களைத் தேடும் என்று பரவலாக எதிர்பார்ப்பு உண்டு.
ஆனால் இங்கே ஒரு நுட்பமான வேறுபாட்டை நாம் கவனிக்க வேண்டும். அது என்னவெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே மக்கள் ஆணையை இழந்தவர். ஆனால் தாமரை மொட்டு கட்சி கடைசியாக நடந்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று ஆட்சியை கைப்பற்றிய ஒரு கட்சி. தன்னெழுச்சி போராட்டங்களின் விளைவாக அது மக்களானையை இழந்து விட்டது என்று கருதப்பட்டாலும் இனி ஒரு தேர்தலில்தான் அதைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். எனவே ஒரு தேர்தலைக் குறித்து அதிகம் பயப்பட வேண்டியது தாமரை மொட்டுக் கட்சிதான்.
அதற்காக ரணில் பயப்படத் தேவை இல்லை என்பதல்ல. அவருக்கும் பயம் உண்டு. ஏனென்றால் அரசியல் ஸ்திரத்தன்மை உள்ளவரைதான் பொருளாதாரத்தை நிமிர்த்தலாம். அல்லது மறுவளமாகச் சொன்னால் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம். ஒரு தேர்தல் நடந்து, அரசாங்கத்துக்கு மக்களாணை இல்லை என்று தெரிய வந்தால், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை பலவீனமடையும். அப்பொழுது உதவி வழங்கும் தரப்புக்கள் உதவுவதற்குத் தயங்கும். பன்னாட்டு நாணய நிதியம் தரக்கூடிய நிதி உதவி இதுவரை கிடைக்கவில்லை. பெரும்பாலும் மார்ச் மாதத்திற்கு பின் அது கிடைக்கலாம் என்று ஜனாதிபதி எதிர்பார்க்கிறார். அது மிகச் சிறிய உதவி. இலங்கையின் கடனை அடைப்பதற்கு போதாது. ஆனால் அந்த உதவியின் மூலம் வேறு தரப்புகளிடம் உதவி பெறுவதற்குரிய நம்பகத்தன்மையை அரசாங்கம் பெற்றுவிடும். அதாவது உதவி பெறுவதற்கான தகமை அதிகரிக்கும். அதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் பிச்சை எடுப்பதற்கான தகமை அதிகரிக்கும். இந்த அடிப்படையில் பிச்சை எடுப்பதற்கு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும். ஒரு தேர்தலை வைத்து அதனால் நாடு குழம்புமாக இருந்தால்,அதனால் ரணில் எதிர்பார்க்கும் விதத்தில், எதிர்பார்க்கும் வேகத்தில் பொருளாதாரத்தை நிமிர்த்த முடியாமல் போகலாம். பொருளாதாரத்தை வெற்றிகரமாக நிமிர்த்தினால் அடுத்த ஜனாதிபதியாக ரணில் தான் வருவார். நாட்டுக்கு வேறு தெரிவு குறைவு.எனவே ரணில் அதை நோக்கித்தான் உழைக்கிறார்.அதற்கு அவருக்கு கால அவகாசம் வேண்டும்.அதே சமயம் அரசியல் ஸ்திரத்தன்மையும் வேண்டும்.
ஒரு தேர்தலானது, அரசியல் ஸ்திரத்தன்மையை பாதிக்கும்தான். எனினும் அதனால் ரணிலுக்கு எதிர்பாராத தோல்வி என்று எதுவும் கிடைக்காது. ஏனெனில் அவர் ஏற்கனவே மக்களானையை இழந்து விட்டார். ஆனால் தாமரை மொட்டுக்கு தோல்வி துலக்கமாகத் தெரிய வரலாம். அதனால் தாமரை மொட்டுக் கட்சிதான் இந்த விடயத்தில் அதிகம் அச்சப்படும்.
மேலும் இதில் ரணிலுக்கு ஒரு அனுகூலமான அம்சமும் உண்டு. என்னவெனில், ஒரு தேர்தலில் தோற்றால் தாமரை மொட்டுக்கள் ரணிலுக்கு மேலும் கீழ்படிவாக மாறும். எனவே ஒரு தேர்தல் நடந்தாலும் அதில் ரணிலுக்கு ஒரு நன்மை உண்டு. தீமையும் உண்டு.
உள்ளூராட்சி சபை தேர்தல் எனப்படுவது உள்ளூர் நிலவரங்களைப் பிரதிபலிப்பது. எனவே அதை வைத்து தேசிய அளவிலான அரசியலைக் கணிக்க முடியாது என்று ஒரு விவாதம் வரும். அதில் ஓரளவுக்கு உண்மையும் உண்டு. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை, உள்ளூர் செல்வாக்குகளே தீர்மானிக்கின்றன. உள்ளூரில் காணப்படும் சாதி சமயம் தனிப்பட்ட செல்வாக்கு போன்ற அனைத்து அம்சங்களும் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும். என்றாலும் தேர்தல் முடிவுகளை தேசிய அளவில் கணிக்கும் பொழுது அங்கே கட்சிகள் பெற்ற வெற்றியாகத்தான் அது பார்க்கப்படும். அப்படிப் பார்த்தால், தாமரை மொட்டு கட்சி அதன் செல்வாக்கை இழந்து விட்டதா இல்லையா என்பதனை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்தும். எனவே அதை தாமரை மொட்டுக்கள் விரும்பாது.
எனவே உள்ளூர் நிலவரங்களை அதிகம் பிரதிபலிக்கும் ஒரு தேர்தல் முடிவு என்றாலும் அது தேசிய அளவில் ஒரு கட்சியின் எழுச்சி வீழ்ச்சிகளை காட்டும் என்ற காரணத்தால், தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தாமரை மொட்டு கட்சி விரும்பக் கூடும்.
ஏறக்குறைய அப்படியொரு நிலைமை தான் 2015 ஆம் ஆண்டுக்குப் பின் “நல்லாட்சி” காலகட்டத்திலும் ஏற்பட்டது. 2015ல் நடந்த தேர்தலில் ரணில் மைத்திரி கூட்டு வெற்றி பெற்றது. மஹிந்த அணி தற்காலிகமாக பின்னடைவைச் சந்தித்தது. ஆனாலும் அது ஒரு முழுத் தோல்வி அல்ல என்பதனை பின்வந்த கூட்டுறவு சபைகளுக்கான தேர்தல் நிரூபித்தது. தேர்தலில் ராஜபக்ச அணி வெற்றி பெற்றது. அந்த வெற்றி ஒரு உள்ளூர் தன்மை மிக்க வெற்றி. எனினும் அந்த வெற்றியைக் கண்டு ரணில் மைத்திரி அரசாங்கம் அஞ்சியது. அதன் விளைவாக அடுத்து நடத்த வேண்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தலை 20 மாதங்களுக்கு ஒத்தி வைத்தது. விளைவாக 2018 இல் நடந்தபோது தேர்தல் முடிவுகள் ரணில் மைத்திரி கூட்டுக்கு எதிரானவைகளாக காணப்பட்டன. அதாவது நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட அந்த அரசாங்கம் மக்களாணையை இழந்து விட்டது என்பதனையும், ராஜபக்சக்கள் மீண்டும் பலமடைகிறார்கள் என்பதனையும் அது நிரூபித்தது. அதன் விளைவாகவே மைத்திரி அச்சமடைந்து தனது விசுவாசத்தை இடம்மாற்றிக் கொண்டார். நல்லாட்சி அரசாங்கத்தைக் காட்டிக் கொடுத்து யாப்புச்சதிப் புரட்சியில் ஈடுபட்டார்.
எனவே இப்பொழுதும் ஒரு தேர்தல் நடந்தால் தாமரை மொட்டுக்கள் மக்களானையை இழந்து விட்டனவா என்று தெரியவரும்.சஜித் பிரேமதாசாவுக்கும் ஜேவிபிக்கும் எவ்வளவு பலம் அதிகரித்திருக்கிறது என்பதும் தெரியவரும். எனவே ஒரு தேர்தலை வைத்து தனக்கு மக்களாணை இருக்கா இல்லையா என்பதை பரிசோதிப்பதற்கு தாமரை மொட்டுக்கள் விரும்பவில்லை. எனவே உடனடிக்கு ஒரு தேர்தல் வைப்பதை ஒத்திவைக்க வேண்டும் என்ற அதிக விருப்பம் தாமரை மொட்டு கட்சியிடம்தான் உண்டு.
ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரை தேர்தல் நடந்தால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. தேர்தலை ஒத்திவைத்து அடுத்த ஆண்டளவில் நடத்தினால் அவர் இப்போது இருப்பதை விட பலமான நிலையில் இருப்பார். இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல, தாமரை மொட்டுக்கள் பலமாகக் காணப்படும் நாடாளுமன்றம் கடந்த திங்கட்கிழமையோடு அவருக்கு ஒப்பீட்டளவில் கீழ்ப்படிவுள்ளதாக மாறியிருக்கிறது. ஒரு தேர்தல் நடந்து அதில் தாமரை மொட்டுக்கள் தமது மக்கள் ஆணையை இழந்துவிட்டமை தெரியவந்தால்,அப்பொழுதும் தாமரை மொட்டுக்கள் ரணிலுக்கு மேலும் கீழ்படிவாக மாறும்.
அதேசமயம் தேர்தலை அடுத்த ஆண்டுவரை ஒத்தி வைத்தால் அதிலும் அவருக்கு நன்மை உண்டு. கடந்த சனிக்கிழமை தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடந்த ஒரு நிகழ்வில் நிகழ்த்திய உரையில் அவர் அதைச் சூசகமாகத் தெரிவித்திருகின்றார். அடுத்த ஆண்டளவில்தான் ஒரு தேர்தலுக்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறவருகிறார். ஆனால் அடுத்த ஆண்டு ஒரு ஜனாதிபதி தேர்தலையும் அவர் நடத்த வேண்டும். அனேகமாக அது அவருடைய ஆயுளின் கடைசி ஓவராகவும் இருக்கலாம்.அந்த ஓவரை வெற்றிகரமாக ஆடுவது என்றால் அவர் அதை இரண்டு தளங்களில் ஆட வேண்டும். ஒன்று தாமரை மொட்டுக்களின் மீதான தனது மேலாண்மையைப் பேண வேண்டும். இரண்டு பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டும். ஆனால் இலங்கையைப் போன்று பொருளாதார நெருக்கடிக்குள் விழுந்த கிரேக்கத்தில் ஐந்து ஆண்டுகளுக்குள் எழு தடவைகள் அரசாங்கம் மாறியது. அர்ஜென்டினாவில் ஐந்து தடவைகள் அரசாங்கம் மாறியது. ஐந்து தடவைகள் நிதியமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள். இலங்கையில் ?