டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முன்னேற்றம் அடைந்துள்ளார். 777 புள்ளிகளைப் பெற்றுள்ள ரோஹித் சர்மா 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்தார். டெல்லியில் நடந்த 2ஆவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 32 ரன்களும், 2 ஆவது இன்னிங்ஸில் 31 ரன்களும் எடுத்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை ரோஹித் சர்மா வெளிப்படுத்தி வரும் நிலையில், அவருக்கு 7 ஆவது இடத்தை ஐசிசி வழங்கியுள்ளது.
முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ லபுஸ்சேன் 912 புள்ளிகளுடன் உள்ளார். 2 ஆவது இடத்தில் இதே நாட்டை சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித் 875 புள்ளிகளைப் பெற்றிருக்கிறார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் 862 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 826 புள்ளிகளுடன் 4 ஆவது இடதிலும் உள்ளனர்.
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் விலகியுள்ள ரிஷப் பந்த் 781 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் நட்சத்தி பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு 665 புள்ளிகள் பெற்றுள்ளார். அவருக்கு 16 ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 624 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்திய அணியின் மற்றொரு பேட்ஸ்மேன் செதேஷ்வர் புஜாரா 25 ஆவது இடத்தையும், 621 புள்ளிகளுடன் ஷ்ரேயாஸ் ஐயர் 27 ஆவது இடத்தையும், 618 புள்ளிகளுடன் மயங்க் அகர்வால் 28 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், தர வரிசையில் முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது.