(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத் தொடர்: பகுதி 5)
கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி
கனடாவாழ் உதயன் வாசகர்களே- நீங்கள் மிகுந்த விலை கொடுத்து வாங்கி அணியும் பிராண்டட் உள்ளாடைகள் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது என்று எப்போதாவது அதைத் திருப்பிப் பார்த்ததுண்டா?
அவற்றுள் Made in Sri Lanka என்று இருக்கக் கூடும் அல்லது Made in Bangladesh என்று இருக்கக் கூடும். இலங்கையைச் சேர்ந்த கம்பனிகளே அவ்வகை ஆடைகளை அங்கும் உற்பத்தி செய்கின்றன.
இலங்கை எவ்வாறு இந்த உள்ளாடைத்துறையிலே சிறக்குமியல்பு பெற்றது?
மேற்குலக நாட்டுச் சந்தைகளில் விற்பதற்காக ஆடைகளை சலுகை வழங்கப்பட்ட நாடுகளில் உற்பத்தி செய்து தீர்வை விலக்களிப்புகளுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யலாம் என்னும் சந்தைவாய்ப்பை வழங்கியமையினாலேயே இலங்கையில் ஆடைதயாரிப்புத் துறை வளர்ச்சி பெற்றதேயன்றி வரலாற்று ரீதியாக பெல்ஜியத்திற்கு கண்ணாடி போல சுவிட்சர்லாந்திற்கு கைக்கடிகாரங்கள் போல இலங்கை ஒரு தையற்கடையாக இருக்கவில்லை. இந்த கோட்டா முறைமையும் சலுகைகளும் உருமாறி இப்போது GSP (General System of Preference)- பொது முன்னுரிமைத் தெரிவு என அழைக்கப்படுகின்றன. இது போன்ற சலுகைகளை ஆடைதயாரிப்புக்கு மாத்திரமன்றி வேறுபல பொருள்களுக்கும் வழங்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பின்தங்கிய வறிய நாடுகளின் பொருள்களுக்கு தமது சந்தையைத் திறந்துவிடும். இச்சலுகைகளை வழங்கியபோதிலும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் GSP+ எனஅழைக்கப்படும் சலுகைப்பொதியே இப்போது சமர்க்களத்திற்கு வந்திருக்கிறது
இலங்கை இப்போது அனுபவித்துவரும் GSP+ சலுகைப்பொதியினை இழக்க நேரிடும் இடரபாயத்தில் உள்ளதென இலங்கையில் உள்ள ஜேர்மன் தூதுவர் எச்சரித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிக்கொள்ள அல்லது மாற்றியமைக்க இலங்கை தொடர்ந்தும் தயக்கம் காட்டிக் காலதாமதம் செய்துவருவதே இதற்கான முதன்மைக்காரணம் எனக்கூறப்படுகிறது. கடந்த 2022 ஒக்டோபர் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் அர்சுலா வான் டையர் அம்மையார் 2023 ஆரம்பத்தில் இலங்கையின் அடைவுகள் தொடர்பான மீளாய்வு அறிக்கை வெளிவரும் எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கை வெயிளிடப்படத் தயாராகிவிட்டமை தெரிய ஆரம்பித்துள்ளது. இந்த செயன் முறை 20.06.2021 அன்று ஆரம்பித்தது. ஐரோப்பியப் பாராளுமன்றம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GSP+ சலுகைகளை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற பின் ஐரோப்பியப் பாராளுமன்றத்திலுள்ள 683 பிரதிநிதிகளில் 628 பேர் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். 15 பேர் மாத்திரமே தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்கள். இத்தீர்மானம் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது. அந்த செயற்பாடு இறுதிக்கட்டத்தை அடைந்து இப்போது ஜேர்மன் தூதுவரின் வாய் மொழி மூலம் வெளிவந்திருக்கிறது. அன்று ஐரோப்பியப் பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து வியப்புக்கு இடமின்றி வழமைபோலவே இலங்கைத் தரப்பிலிருந்து அதற்கு எதிராக வீராவேசமான கருத்துக்கள். வெளிப்படுத்தப்பட்டன. அதெப்படிச் செய்யலாம். இலங்கை இறைமையுள்ள நாடு அதன்மீது மேற்குலகம் சதிசெய்து தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளப்பார்க்கின்றன என்று சாடினர். தொலைநோக்குப்பார்வை கொண்டதாக காட்டிக்கொண்ட இலங்காபிமானிகள் GSP+ போன்ற முன்னுரிமைச் சலுகைகளில் தங்கிருப்பதை விடுத்து போட்டித்தன்மைவாய்ந்த உலக சந்தையில் இலங்கை தனது பொருள்களையும் சேவைகளையும் மேம்படுத்துவதன் மூலம் மேற்குலக நாடுகளின் இது போன்ற நேர்மையற்ற அழுத்தங்களிலிருந்து விடுபடவேண்டும் என்று வீரவசனம் பேசினர்.
ஆனால் இது எதுவும் இலங்கைக்கு உடனடியாகவோ நீண்டகாலத்திலோ சாத்தியப்படப் போவதில்லை. இன்றுள்ள சூழ்நிலையில் இலங்கை அதுபற்றி கனவு கூடக்காண முடியாது.
ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தகத்தில் அதிகளவில் தங்கியுள்ள நாடுகளின் ஏற்றுமதிகளுக்கு ஐரோப்பிய சந்தையில் பிரவேசிப்பதற்கும் வழமையான இறக்குமதித் தீர்வைகளிலிருந்து விலக்குப் பெறவும் முன்னுரிமைச்சலுகை வழங்கும் ஒரு ஏற்பாடே இந்த GSP+ ஆகும். அது தெரிவு செய்யப்படும் நாடுகளுக்கே வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற சலுகைகளை அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளும் வழங்குகின்றன.
இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தினதும் ஐக்கிய அமெரிக்காவினது GSP+ சலுகைகளால் பெரிதும் நன்மையடைந்து வருகிறது. இச்சலுகைகளைப்பெறும் தகுதியுள்ள பயனாளி நாடுகள் சில விடயங்களை சலுகை வழங்கும் நாடுகள் அறிவிக்கும். அவை பெரும்பாலும் மனித உரிமைகளின் மேம்பாடு, ஜனநாயக விழுமியங்களில் முன்னேற்றம் சட்டவாட்சி மற்றும் சர்வதேச தர நியமங்களையும் சட்டங்களையும் பின்பற்றல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இவை நாகரிக வளர்ச்சிகொண்ட எந்த ஒரு நாடும் அடைய வேண்டும் என எதிர்பார்க்கப்படும் மேம்பட்ட விடயங்களாகும். மாறாக GSP+ சலுகை வழங்கும் எந்த ஒரு நாடும் பயனாளி நாட்டின் சந்தையை தமக்கு சாதகமாக மாற்றவேண்டுமென்றோ அந்நாட்டின் சொத்துக்களைக் கையகப் படுத்த வேண்டுமென்றோ கருதவில்லை. பயனாளிநாடுகள் தீர்வையின்றி அல்லது குறைந்த தீர்வைகளுடன் முன்னுரிமை அடிப்படையில் இலகுவில் தமது பொருள்களுக்கான சந்தைகளை பெற்றுக்கொள்ள உதவும் ஒரு அமைப்பாகவே அது செயற்பட்டு வருகிறது. ஜனநாயக விழுமியங்களைப் பேணுவதிலும் மனித உரிமை விடயங்களிலும் மோசமான பதிவுகளைக் கொண்டுள்ள நாடுகள் சலுகைகளைப் பெறுவதற்காக முண்டியடிக்கும்.
அதேவேளை மனித உரிமைகள் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் வாய்கிழியப்பேசும் சலுகை வழங்கும் நாடுகள் தமது சொந்த நாட்டின் மனித உரிமைகள் ஜனநாயகம் பற்றி முதலில் கவனித்துவிட்டு மற்ற நாடுகளின் விவகாரங்கள் குறித்துப் பேசவேண்டும், இறைமைகொண்ட ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வேறுநாடுகளுக்கு அருகதை இல்லை அதனால் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு தாம் அடிபணிய மாட்டோம் என்று சலுகை பெறும் நாடுகள் சவடால் விடும்.
இவை வெறும் விதண்டாவாதங்கள் என்பது குழந்தைக்கும் புரியும். ஏனெனில் சலுகை வழங்கும் எந்த ஒரு நாடும் பயனாளி நாட்டைக் கட்டாயப்படுத்த முடியாது. GSP+ சலுகை வேண்டாமென்றால் எந்த ஒரு பயனாளி நாடும் எவ்வித கட்டுப்பாடுகளுக்கும் உட்பட வேண்டியதில்லை. தமது இஷ்டப்படி எதனையும் செய்து கொள்ளலாம். மறுபுறம் GSP+ சலுகைகளைப் பெறுவதற்காக செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்படும் விடயங்கள் ஒன்றும் தீண்டத்தகாத விடயங்களோ பொது மக்களுக்கு எதிரானவையோ அல்ல. மாறாக நாகரிக முதிர்ச்சி கொண்ட எந்த சமூகமும்; சுயமாகவே எய்த வேண்டுமென எதிர்பார்க்கப்படும் உயரிய விழுமியங்களாகும்.
எனவே இத்தகைய நாடுகளில் வாழும் பிரஜைகளுக்கு இது பற்றிய புரிதல் இருப்பது அவசியமாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகள் இதனை தமது தாய் நாட்டுக்கு எதிரான சர்வதேச சதி என்று மக்களை பிழையாக வழிநடத்துகின்றனர். அதுபற்றி எதுவும் புரியாத மக்களும் பூம் பூம் மாடுகள் போல தலையாட்டி அவர்களுக்காக கடைக்குப் போகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற கோரயுத்தம் பல்லாயிரக்கணக்கானவர்களைப் பலிகொண்டும் அங்கவீனர்களாக்கியும் கோடிக்கணக்கான சொத்துகளை அழித்தும் 2009இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னரும் நாட்டில் ஜனநாயகமோ மனித உரிமைகளோ சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மேம்படவில்லை. முற்றாக தமிழ்மக்களுக்கு எதிராகப்பயன்படுத்தப்பட்ட அதே கொடுங்கோல் சட்டங்கள் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் எதிராகப் பரந்துபட்டளவில் முன்பை விடத் தீவிரமாகப்பயன்படுத்தப்பட்டும் வருகிறது. போரின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் ஜனநாயக விரோத செயற்பாடுகள் போன்றவற்றை முன்னிறுத்தி ஐரோப்பிய ஒன்றியம் 15.02.2010 அன்று இலங்கைக்கு வழங்கியிருந்த GSP+ சலுகைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியது. 9.6 சதவீத தீர்வைகளை செலுத்தியே இலங்கைப் பொருள்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பிரவேசிக்க நேர்ந்தது. இதன் காரணமாக இலங்கை மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டது. பெரும் எண்ணிக்கையிலான சிறிய ஆடைதயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். பெரிய நிறுவனங்கள் தமது ஏற்றுமதிகளின் விலைகளைக் குறைப்பதன் மூலம் தீர்வைப்பாதிப்பைத் தாமே தாங்கிக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியச் சந்தைகளைத்தக்க வைக்க முயற்சித்தன. மறுபுறம் உயர்விலைகொண்ட ஆடைகளை தயாரிப்பதன் மூலம் சந்தையை பாதுகாக்க முனைந்தன.
கடலுணவு ஏற்றுமதிகள் மாலைதீவுகளின் போட்டியைச் சந்திக்க முடியாமல் சந்தைகளை இழந்தன. இந்நிலைமை தொடர்ந்த நிலையில் 2015இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களை அடுத்து 9.05.2017 அன்று இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ முன்னுரிமைச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் 500 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த GSP+ சலுகைகளை இடைநிறுத்தி வைத்திருந்த காலப்பகுதியிலும், அமெரிக்கா இலங்கைக்கு இச்சலுகைகளைத் தொடர்ச்சியாக வழங்கிவந்தது. எனவே மேற்குலக நாடுகள் இலங்கையுடன் தொடர்பிலிருப்பதை ஒரேயடியாக நிறுத்திவிடாது. ஆனாலும் அது மேற்குலக நாடுகளுக்கு இலங்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததென்று அர்த்தப்படாது. உண்மையில் இலங்கைக்கே மேற்குலக நாடுகளின் சந்தைகள் தேவைப்படுகின்றன. இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளி நாடு சீனா என்று கூறப்பட்டாலும் இலங்கையின் ஏற்றுமதிகளில் சீனாவுக்கான ஏற்றுமதிகள் மிக மிக அற்பமே. ஆனால் இலங்கையின் இறக்குமதிகளில் 22.4 சதவீதம் சீனாவிலிருந்து வந்தது. இலங்கையின் ஏற்றுமதிகளில் 23 சதவீதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செய்யப்பட்டது. 9 சதவீதம் மாத்திரமே ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெறப்பட்டது. 2020 இல் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிலிருந்து 2083 மில்லியன் யூரோ பெறுமதியான பொருள்களை இறக்குமதி செய்தது. ஆகவே ஏற்றுமதிகளுக்காக இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளின் சந்தைகள் தேவைப்படுகிறது. அது மட்டுமன்றி இலங்கையின் முதன்மை ஏற்றுமதிச்சந்தை அமெரிக்காவாகும். இலங்கையின் 25 சதவீதமான ஏற்றுமதிகள் அமெரிக்காவுக்குச் செல்கின்றன. ஆகவே இலங்கையின் ஏற்றுமதிகளில் பெரும்பாலானைவை மேற்குலக நாடுகளுக்கே செல்கின்றன. இதுபோன்றவொரு சந்தை வாய்ப்பை சீனாவால் வழங்கிவிட முடியாது.
அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தால் நிலைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும். அந்த அபாயச் சங்கு ஆட்சியாளர்களின் காதுகளில் கேட்கவே இல்லை. கெடுகுடி சொற்கேளாது என்பதற்கேற்ப மனித உரிமைச் சட்டங்களை தூக்கி வீசிவிட்டு பயங்கரவாத தடைச்சட்டததை மேலும் கூர் தீட்டிப்பயன்படுத்துவதையே சமீபத்தில் அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளரின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. பொருளாதாரம் படுபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. விலைவாசிகள், வரி, மின்கட்டணம், நீர்க்கட்டணம், எரிவாயுவிலை என அனைத்தும் ஏககாலத்தில் அதிகரித்து இடிமேல் இடியாக இறங்கி மக்களை வதைத்துவரும் நிலையில் “நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டுவந்தான் ஒரு தோண்டி, மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி“ என்று கையில் இருந்த 500 மில்லியன் டொலர் சலுகை வர்த்தகத்தையும் இழந்துவிடும் நிலையில் இலங்கை இருக்கிறது.
GSP+ இழக்கப்படுமாயின் அது பெரிய நெருக்கடியை உருவாக்கும். சுருக்கமாகச் சொன்னால் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் சேர்ந்து இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு GSP+ சலுகையை நீக்கினாலோ அல்லது இலங்கையிலிருந்தான இறக்குமதிகளின் அளவை மட்டுப்படுத்தினாலோ இலங்கைப் பொருளாதாரம் எழவே முடியாதபடி சுருண்டு விழும். அதனை சீனாவால் காப்பாற்ற முடியாது.
இலங்கையால் தனது உள்ளாடையை (தொழிலை) காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை என்றால் ……….?
பார்க்கவே கண்கூசும்……..
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 1
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 2
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 3
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 4
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 5
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 6
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 7
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 8
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 9
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 10
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 11