கதிரோட்டம் 24-02-2023
இலங்கை என்னும் மாங்களித் தீவை ‘பிச்சை’ எடுக்கும் நிலைக்கு கொண்டு வந்தவர்களில் தற்போதைய ‘தற்காலிக’ ஜனாதிபதி ரணிலுக்கும் பங்குண்டு என்பதை இலங்கையின் ஆட்சி பீடங்களை அலங்கரித்தவர்களின் கடந்த கால அத்தியாயங்களைப் படிப்பவர்களுக்கு நன்கு புரியும்.
இலங்கையின் பிரதமராக முன்னர் பதவி வகித்தபோதும்; பின்னர் மகிந்தாவின் ஆட்சிக் காலத்தில் அவர்களோடு கொண்டிருந்த ‘வர்க்க உடன்பாடு’ காரணமாகவும் இலங்கையின் பொருளாதாரத்தை அடிமட்டத்திற்கு கொண்டு வந்தவர்களில் ரணில் முக்கிய பங்காளி என்பது உறுதி.
இவ்வாறாக தற்போது தான் வகிக்கும் ஜனாதிபதி பதவியின் மூலம் கிட்டும் அதிகார பலத்தையும் அனைத்து வசதிகளையும் தொடர்ந்து அனுபவிக்கத் துடிக்கும் ரணில் விக்கிரமசிங்க. தொடர்ந்தும் அதை அனுபவிக்கும் வகையில் அதற்கான திட்டங்களை தீட்டுகின்றார். இதற்காக அவர் நாளாந்தம் மக்களை ஏமாற்றும் வகையில் பொய்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது என்பதை கடந்த சில வாரங்களாக கொழும்பில் பரவலாக பரிமாறப்படும் கருத்தாகும்
அவரது இந்த கபடத்தனத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக இருப்பது இலங்கைக்கு தேவையான நிதி உதவிகளே ஆகும். இதோ வருகுது! அதோ வருகுது! ஏன்று மக்களை ஏமாற்றும் வகையில் அறிவிப்புக்களை தொடர்ச்சியாக விடுத்து வருகின்றார் இந்த ‘வித்தைக்காரர்’ ரணில்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதி உதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் சில நாட்களுக்கு முன்னர் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கவலை வெளியிட்டுள்ளார் என்பதை செய்திகள் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிந்தது
ஜனாதிபதி ரணில் கடந்த வெள்ளிக்கிழமை 17ம் திகதி ஒரு கூட்டத்தில் 2.9 பில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நிதியத்தினர் வழங்க இருப்பதாகவும் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் முதல் தவணையை மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்.
ஆனால் தனது டுவிட்டர் பதிவில்; தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தினரின் வசதி குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், இது முக்கிய பங்குதாரர்களான சீன அரசாங்கம், மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடுகளுடன் முரண்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் பணிப்பாளர் கிருஸ்ணஸ்ரீனிவாசன், சீனாவின் உத்தரவாதமின்றி இலங்கையின் வெளிநாட்டு நிதி வசதியை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரிக்காது என முன்னர் தெரிவித்திருந்ததையும் மனோ கணேசன் அவர்கள்; குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை மார்ச் மாதத்தில் வரும் என நம்பிக்கையூட்டும் செய்திகளை நாட்டுக்கு தெரிவிக்கின்றார்.
“உண்மையும் நேரும் பேசுவது யார்? இன்று இலங்கையர்களின் தலையில் தொங்கிக்கொண்டிருக்கும் 2.9 பில்லியன் டொலர் கேள்வி இதுவாகும்.” ஜனாதிபதியின் கூற்றின் துல்லியம் குறித்தும் மனோ கணேசன் அவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் இலங்கையின் ‘தற்;காலிக’ ஜனாதிபதியாக நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ரணிலுக்கு தமிழர் தரப்பில் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ‘தமிழரசுக் கட்சியினர்’ எப்போது மௌனமாக இருக்கையில் இவ்வாறு மனோ கணேசன் அவர்கள் ரணிலைக் கூட துணிச்சலாக விமர்சனம் செய்வது பாராட்டுரியதாகும்.