Scarborough North City Councilor Myers Jamaal
எனது பாட்டியோடு ஒரு தடவை ஸ்காபுறோ வீதி ஒன்றை நான் கடக்க முற்பட்ட போது ஏற்பட்ட மனப் பாதிப்பே என்னை மாநகராட்சி அரசியலுக்கு அழைத்துச் சென்றது
கனடா உதயன் பிரதம ஆசிரியருக்கு வழங்கிய பேட்டியில் ஸ்காபுறோ வடக்கு நகரசபை உறுப்பினர் தெரிவிப்பு
“சில வருடங்களுக்கு முன்னர் எனது பாட்டியோடு ஒரு தடவை ஸ்காபுறோ வீதி ஒன்றை நான் கடக்க முற்பட்ட போது ஏற்பட்ட மனப் பாதிப்பே என்னை மாநகராட்சி அரசியலுக்கு அழைத்துச் சென்றது. அன்று நாம் இருவரும் வீதியைக் கடக்க முயன்றோம். நான் அழைத்தும் எனது பாட்டி வீதியைக் கடக்க விரும்பவில்லை. ஏன் என்று கேட்டேன். இங்கு பாதுகாப்பாக வீதியைக் கடக்கும் சரியான அறிவிப்பு எதுவும் இல்லை என்றார். அப்போதுதான் ஒரு மாநகராட்சி அரசு சரியாக செயற்படாவிட்டால் அங்கு வாழும் மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர் கொள்கின்றார்கள் என்று. ஒரு சட்டத்தரணியான நான் அன்று முடிவெடுத்தேன். ரொறன்ரோ மாநகர அரசியலுக்குள் புகுந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று’’
இவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமையன்று 17ம் திகதி கனடா உதயன் பிரதம ஆசிரியருக்கு வழங்கிய பேட்டியில் ஸ்காபுறோ வடக்கு நகரசபை உறுப்பினர் தெரிவித்தார். உதயன் பிரதம ஆசிரியரின் முதலாவது கேள்வியாக அமைந்த ‘ தாங்கள் அரசியலுக்குள் வரவேண்டும் என்று தீர்மானித்த நேரம் எவ்வாறு நிகழ்ந்தது? என்பதற்கு பதிலளிக்கும் போதே ஸ்காபுறோ வடக்கு நகரசபை கவுன்சிலர் மையர்ஸ் ஜமால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கவுன்சிலர் மையர்ஸ் ஜமால் அவர்களிடம் உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்கள் சில முக்கியமான கேள்விகளைக் தொடுத்தார் அவைகளுக்கு, ஷஸ்காபுறோ வடக்கு கவுன்சிலர் அவர்கள் தகுந்த பதில்களை அளித்தார்.
கவுன்சிலர் அவர்கள் உதயன் பத்திரிகையின் 26 ஆண்டு சமூக அக்கறை கொண்ட அனுபவத்தையும் பத்திரிகையின் வளர்ச்சியையும் பாராட்டியவண்ணம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்
அத்துடன் ஜனவரி மாதத்தில் ரொறன்ரோவின் பல பகுதிகளிலும் நடைபெற்ற தமிழர் மரபுரிமை மாதத்தின் கொண்டாட்ட நிகழ்வுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த கவுன்சிலர் மையர்ஸ் ஜமால் அவர்கள் தான் பங்கு பற்றிய இந்த கொண்டாட்ட நிகழ்வுகளில் தமிழர்களின் பண்பாடு மற்றும் அவர்களது கலைப் படைப்புக்கள் அத்துடன் சமூக அக்கறையுடன் ஒவ்வொரு விழாவில் நடத்தப்பெறுகின்ற விதம் போன்ற அனைத்தையும் பாராட்டி., தான் அடுத்து வருகின்ற ஒவ்வொரு வருடமும் தமிழர் மரபுரிமை மாதத்தின் கொண்டாட்ட நிகழ்வுகளில் தொடர்ச்சியாக கலந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து ரொறன்ரோ நகரசபையினால் நிர்வகிக்கப்படும் மிருகக் காட்சிசாலை தொடர்பாக உரையாடப்பெற்றது. ரொறன்ரோ மிருகக்காட்சிச் சாலையான பரந்த நிலப்பரப்பில் ஸ்காபுறோவில் அமைந்துள்ளது. அதன் மேற்பார்வைக் குழுவில் கவுன்சிலர் மையர்ஸ் அவர்கள் பதவி வகிப்பதனால் அவரிடம் உதயன் ஆசிரியர் அவர்கள் மிருகக் காட்சிச் சாலையின் செயற்பாடுகள் பற்றி கேள்விகளைக் கேட்டார்.
ரொறன்ரோ மிருகக் காட்சிசாலையானது கனடாவிலேயே மிகப் பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ளது என்றும் வேறு மாகாணங்களிலிருந்தும் பார்வையாளர்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருப்பதாகவும் மிருகக் காட்சிச் சாலையின் செயற்பாடுகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் தொகை மிகக்குறைவு என்றும் மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அதன் வருமானத்தையும் பெற்று செலவுகளைச் சமாளிப்பதாகவும் நிர்வாகக் குழு உறுப்பினர் என்ற வகையில் கவுன்சிலர் மையர்ஸ் அவர்கள் தெரிவித்தார்கள்.
தொடர்நது உரையாற்றுகையில் உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்கள் கவுன்சிலரிடம் ரொறன்ரோ நகரசபையின் ஸ்காபுறோ வடக்கு வட்டாரத்தின் அவசரத் தேவைகள் எதுவென்று நீங்கள் கருதுகின்றீர்கள் என்ற கேள்வியைக் கேட்டார்.
அதற்கு பதிலளித்த கவுன்சிலர் கூறியுதாவது:-
தகுந்த வதிவிடங்களை வாங்கிக் கொள்ளும் வசதிகள் மற்றும் வருமானம் தரக்கூடிய வேலை வாய்ப்புக்கள் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எமது வட்டாரத்தின் வரியிறுப்பாளர்கள் பலர் என்னிடம் தொடர்ச்சியாக முறையிடுகின்றார்கள். வசதியான வீடுகள் அவர்களில் பலரின் குடும்பங்களுக்கு இல்லை என்பதே இதன் அர்த்தமாகும். ஒரே வீட்டில் பல குடும்ங்கள் ஒன்றாக வாழ்வதால் குடும்பங்ளுக்கிடையே தனித்துவமின்மை, போன்ற பல இடர்பாடுகள் காணப்படுவதாகவும் கவுன்சிலர் தெரிவித்தார்.
இறுதியாக உதயன் பத்திரிகை ஆசிரியர் கவுன்சிலரிடம் உங்கள் வட்டாரத்தில் அல்லது ரொறன்ரோ நகரசபை எல்லைக்குள் வசிக்கும் தமிழ் மக்கள் தொடர்பான தங்கள் அபிப்பிராயத்தை எம்மோடு பகிர்ந்து கொள்வீர்களா? ஏன்று மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதிலளித்த கவுன்சிலர் மையர்ஸ் ஜமால் அவர்கள்
“ நான் சந்திக்கும் இலங்கைத் தமிழர்கள் அனைவருமே மிகுந்த நட்போடு என்னோடும் எனது சக உத்தியோகத்தர்களோடும் பழகி வருகின்றார்கள். எப்போது என்னை ஊக்கப்படுத்தும் பண்பு கொண்டவர்கள். நான் புதிதாக தேர்ந்தெடுக்கப்பெற்ற கவுன்சிலர் என்ற வகையில் தமது தேவைகளை என்னோடு பகிர்ந்து கொள்கின்ற அதே வேளையில, எமது பணிகளுக்கு தான் எவ்வாறு உதவலாம் என்றும் அவர்கள் எண்ணுவதை நான் அவதானித்துள்ளேன். அத்துடன் 1983 இல் இடம்பெற்ற அவர்கள் தாயகத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் மத்தியில் நிம்மதியான வாழ்க்கையை வேண்டிய கனடாவிற்கு குடியேறிய அவர்களின் கதைகள் மற்றும் வலிகள் ஆகியவற்றை நான் ஆங்கிலப் பத்திரிகைகளுடாக வாசித்து அறிந்தததாகவும், பல மக்கள் வந்து இழப்பீட்டு நிதியை; பெற்றமை பற்றியும், அவர்கள் தற்போது கல்வி, பொருளாதாரம், என்பவற்றில் சிறப்பாக உள்ளதாகவும் கூறி தனது நேர்காணலை இனிதே நிறைவு செய்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்.