இங்கிலாந்து அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து அணி ஃபாலோ ஆன் ஆகியுள்ளது. தோல்வியை தவிர்க்க நியூசிலாந்து அணி வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். முன்னதாக 209 ரன்களுக்கு நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி டிராவி முடிந்த நிலையில், 2 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது 3 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களத்தில் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தாலும், ஜோ ரூட் – ஹேரி ப்ரூக் இணை அற்புதமாக விளையாடி 4 ஆவது விக்கெட்டிற்கு 302 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 435 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 53.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டிம் சவுத்தி 49 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 73 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 226 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஃபாலோ ஆன் ஆன நியூசிலாந்து அணி தற்போது 2ஆவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இன்றைய 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் நியுசிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் டாம் லாதம் 83 ரன்னும், டெவோன் கான்வே 61 ரன்னும் எடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தற்போது கேன் வில்லியம்சன் 25 ரன்னுடனும், ஹென்றி நிகோல்ஸ் 18 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து அணி இன்னமும் இங்கிலாந்தை விட 24 ரன்கள் பின் தங்கியுள்ளது.