இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்சனை ’எத்தை தின்னால் பித்தம் தெளியும்’ என்கிற வகையில் பல தசாப்தங்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில், புதிய கருத்து ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது,
எல்லைதாண்டிய மீன்பிடித் தொழில் செய்வோரைக் கட்டுப்படுத்த கடற்தொழிற் திணைக்களத்திற்குத் துணையாகத் தொண்டர் அணியை உருவாக்குது தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
”இலங்கை, இந்தியா கடற்தொழிலாளர்களுக்கிடையிலான பிரச்சினை தொடர் கதையாகக் காணப்படுகையில் இரு தரப்பிலும் தீர்வு காணப்பட வேண்டிய தேவை உள்ளது. தொடர்ச்சியாக இராஜதந்திர ரீதியான கலந்துரையாடல்கள் இடம்பெற்றாலும் தீரந்தபாடில்லை”.
இலங்கை கடல் எல்லையை தொடர்ச்சியாக தீவிரமாக கண்காணித்து வருவதாக கடற்படை கூறிவரும் நிலையில் இப்படியான தொண்டர் அணி என்பது எந்தளவிற்கு பயனளிக்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளன.
கச்சத்தீவு அன்ந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் பங்குபெற இந்திய மீனவர்கள் அங்கு வந்துள்ள நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து வந்துள்ளது.
அது மட்டுமின்றி சட்ட அங்கீகாரமற்ற தொண்டர் அணி எப்படி எல்லை தாண்டும் மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்தும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தியாவுடன் ஆக்கபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைவதை தடுக்க அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமே தவிர, இப்படியான தொண்டர் அணி என்பது அறிவார்ந்த செயல் அல்ல என்று மீனவர்கள் தரப்பு கூறுகிறது.