(எமது யாழ் செய்தியாளர்.)
தமிழகத்தில் இருந்து கச்சதீவு வருகைதரவிருந்த பக்தர்களுடன் விண்ணப்பித்த 8 பி.ஜே.பி உறுப்பினர்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கச்சதீவு புனித அந்தோணியார் உற்சவ்வமானது வியாழன்( 03ஆம் திகதி) ஆரம்பித்து வெல்லிவரை இடம்பெறவுள்ளது. இதற்காக தமிழகம் இராமேஸ்வரத்தில் இருந்து வியாழனன்று 71 படகுகளில் வருகைதர 2 ஆயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு விண்ணப்பித்த 2 ஆயிரத்து 408 பேரில் 6 பேர் கடத்தல் குற்றவியலுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட அதே நேரம் மேலும் 8 பேர் பி.ஜே.பி அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என்பதனால் அரசியல் சார்பு அமைப்பாக கருதி அவர்களிற்கான அனுமதியும் தமிழக அரசால் மறுக்கப்பட்டுள்ளது.
அனுமதி மறுக்கப்பட்ட விடயம் இந்தியாவின் மத்தியில் ஆட்சி செய்யும் பி.ஜே.பியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதேநேரம் கச்சதீவு புனித அந்தோணியார் திருவிழாவில் இந்தியா – இலங்கை இரு நாட்டுப் பக்தர்களும் கலந்துகொள்வதனால் இவர்களில் உள்ள மீனவர்களும் தமது பிரச்சணை தொடர்பிலும் சந்தித்து பேச்சு நடத்துவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு இடம்பெறும் ஆலய உற்சவத்தில் மீனவர்கள் பேச்சுவார்த்தை என்னும் போர்வையில் இரு நாட்டு அரசியல் தரப்பினரே பேச்சில் ஈடுபடவுள்ளதனால் இவ்வாறு இடம்பெற ஏற்பாடு செய்யப்படும் பேச்சிற்கு ஆயர்கள் அனுமதிக்ககூடாது என வடக்கு மாகாணத்தின் பல மீனவ அமைப்புக்கள் கோரிக்கை விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.