மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 207 ரன்கள் குவித்துள்ளது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 30 பந்துகளில் 65 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் இன்று ஆரம்பம் ஆனது. தொடக்க போட்டியில் ஹர்மன்ப்ரீத் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார்.
இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யஸ்திகா பாட்டியா, ஹேலி மேத்யூஸ் ஆகியோர் களத்தில் இறங்கினர். யஸ்திகா 1 ரன்னில் வெளியேற அடுத்து இணைந்த ஹேலி – நேட் சீவர் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. ஹேலி 47 ரன்னும், நேட் சீவர் 23 ரன்னும் எடுத்து வெளியேறினர். இதையடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் – அமெலியா கெர் இணை இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 89 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் கவுர் 30 பந்தில் 14 பவுண்டரியுடன் 65 ரன்கள் எடுத்தார்.
அமெலியா கவுர் 24 பந்தில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 207 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் ஸ்னே ராணா 2 விக்கெட்டுகளை எடுத்தார். 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.