கதிரோட்டம் 03-03-2023
இலங்கையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தப்போவதாக ரணில் ‘பொய்யான’ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ‘தூங்கிக் கொண்டிருந்த பல அரசியல்வாதிகளை கண் திறந்து வாய் திறந்து ஏதோ எல்லாம் பேசத் தொடங்கியுள்ளார்கள். பொதுவாகவே இலங்கையை வழி நடத்தும் மத்திய அரசு செயலிழந்து போய் தடுமாறுகின்றபோது. உள்ளுராட்சித் தேர்தல்கள் எதைச் சாதித்து விடப்போகின்றன எனற் கேள்விகள் தெற்கிலும் வடக்கிலும் கிழக்கிலும் தலைநகரிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ள இந்த நாட்களில் தமிழர் பகுதியில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை சாட்டாக வைத்து தங்கள் முகங்களைக் காட்டத் தொடங்கியுள்ளார்கள் பலர்.
சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் ஆலயத்திற்கு அருகில் அமைந்திருக்கும் இளங்கலைஞர் மன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் தனது உரையில் ‘போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க எமது கட்சிக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்க அந்த ‘புலம்பல் அறிவிப்பு’ நகைச்சுவையாகவும் நையாண்டியாகவும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் எல்லாம் தகவல்களாக தாவித்திரிந்ததை பலர் அறிந்திருந்தார்கள்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் எத்தனையோ வருடங்களாக போதைப்பொருள் வர்த்தகம் வானளவிற்கு உயர்ந்து அங்கு நிம்மதியாக வாழ்ந்து வந்தவர்களை அவலங்களுக்குள்ளாக்கிய சம்பங்களை கண்டும் காணாதவர் போல இருந்து விட்டு தற்போது உள்ளுராட்சி மன்றங்களின் மூலம் போதைப் பொருளை ஒழிப்போம் என்று ‘அரசியல்’ பேச முற்படுகின்றவர்களை வடக்கு கிழக்கு மக்கள் செவிமடுத்து எவ்விதமான மாற்றங்களையும் கண்டுவிட முடியாது என்பதையே தற்போது யாழ்ப்பாணத்தில் மாற்று அரசியல் கொள்கைகளோடு முன்வந்துள்ள பல இளைஞர்கள் தெரிவித்துள்ளார்கள் என்பது அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகளாக உள்ளன.
இதைப்போன்ற மற்றுமொரு செய்தி வடக்கிலிருந்து தற்போது வெளியாகியுள்ளது. கொழும்பில் வாசம் செய்கின்ற தமிழ் அரசியல் தலைவர் சம்பந்தன் அவர்கள் தொடர்பான செய்தியொன்றை; சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்
தனது அலுவலகத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப் பின்போதே அவர் கீழ் கண்ட வாறு கூறினார்.
“கடந்த சில நாட்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசு கட்சி, அதன் செயற்பாடுகள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. அது பற்றி விமர்சனம் செய்ய நாங்கள் விரும்பவில்லை. ஆனால் இருந்தாலும் கூட ரெலோவின் பேச்சாளர் சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இல்லை. அல்லது அவரது பதவி செயலற்றுப் போய்விட்டது. அவருடைய தலைவர் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
தமிழரசுக் கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை. ஆனால் இரண்டு கட்சிகளாலும் காலம் காலமாக பல காலமாகவே உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விடயம் – அந்த விடயத்தை அவர்கள் நிறைவேற்றி இருக்கின்றார்கள். அது அவர்களின் உரிமை. பாராளுமன்றத் தேர்தல்கள் முடிந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட மூன்று கட்சி களும் அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு சம்பந்தனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராக தெரிவு செய்தனர். அது முன்பும் அவ்வாறே நடந்தது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் தெரிவு என்பது இதுவரையில் பாராளுமன்றக் குழுவாகவே இருந்திருக்கின்றது.
பாராளுமன்றக் குழு தெரிவு செய்த சம்பந்தன் இன்னும் அந்தப் பதவியில் தான் இருக்கின்றார். ஆகவே அவரை நீக்குவதோ அல்லது அந்தப் பதவி வறிதாக்குவதோ வெறுமனே ஓர் ஊடக அறிக்கை மூலம் சொல்ல முடியாது. முறைப்படியாக பாராளுமன்றக் குழு கூடி விரும்பினால் அவரை நீக்கலாம் அல்லது அவர் விரும்பினால் விலகலாமே தவிர பதவி வறிதாக்கல், செயலற்றுப் போதல் என்று எதுவும் இல்லை. நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு தலைவரை இவ்வாறு அவமதிக்கின்ற ஒரு கூற்றை என்னைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சி சார்ந்தது மட்டுமல்லாது பொதுவாகவே ஒரு மனிதனின் மதிப்பு சார்ந்த விடயத்தில் அதை ஆட்சேபிக்கின்றேன். அது தவறு. சம்பந்தன் இன்னும் பாராளுமன்றக் குழுவின் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் செயற்படுகின்றார் என்பதே உண்மை” என்றார்.
“இவ்வளவு விடயங்களையும் மிகவும் சிரமப்பட்டு சம்பந்தன் அவர்களுக்காக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ள சிவிகே சிவஞானம் அவர்கள். தான் குறிப்பிட்ட சம்பந்தன் அவர்கள் இதையெல்லாம் தனது காதுக்குள் எடுத்து செயற்படுகின்ற அல்லது இயங்குகின்ற நிலையில் உள்ளாரா என்பதையும் கவனித்தல்லவா இருக்க வேண்டும்” என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள் மாற்றுத் தலைமையை விரும்பும் இன்னொரு சாரார்.
ஏவ்வாறாயினும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பு பலமிழந்து போய்உள்ள நிலையிலும். அதன் ‘மூத்த’ அல்லது ‘முதிய’ தலைவர்கள் அரசியலில் ஓய்வு பெற வேண்டியவர்களாக. மாவை சேனாதிராஜா மற்றும் சம்பந்தன் ஆகிய இந்த இருவர் மீது உள்ள நம்பிக்கைகள் கீழே ‘இறங்கிச்;’ செல்லுகின்ற நிலையில் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் தகுந்த முடிவுகளை எடுக்கவும் தகுந்த அரசியல் வழிகாட்டிகளை தேடவும் முயல வேண்டும் என்ற கோரிக்கையை இவ்வாரக் கதிரோட்டம் மூலம் விடுக்கின்றோம்.
.