கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் மகளிர் ஐபிஎல் தொடர் இன்று கோலாகலமாக தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மட்டுமின்றி தொடர் முழுவதையும் இலவசமாக பார்ப்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்… ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து அதே போன்ற ப்ரீமியர் தொடர்கள் பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் முதன் முறையாக மகளிருக்கான ப்ரீமியர் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த மாதம் ஏலம் நடைபெற்றது. இதில் முன்னணி வீராங்கனைகள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா ரூ. 3.40 கோடிக்கும், கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் ரூ. 1.80 கோடிக்கும் எலுத்தில் எடுக்கப்பட்டனர். மகளிர் ஐபிஎல் அறிமுக சீசனில் குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. தொடக்க விழா இன்று மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
தொடக்க விழாவில் பிரபல இசைக் கலைஞர் ஷங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரபல நட்சத்திரங்கள் ஏ.பி.திலன், கியாரா அத்வானி, க்ரித்தி சனோன் உள்ளிட்டோர் கலை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா ஆரம்பம் ஆகிறது. இத்துடன் மகளிர் ஐபிஎல் முழுவதையும் நெட்வொர்க் 18 நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முதன் முறையாக, மகளிர் ஐபிஎல் தொடர் முழுவதையும் ஜியோ சினிமா ஆப்-இல் (JioCinema) இலவசமாக போனில் பார்த்து மகிழலாம்.