சம்மந்தப்பட்ட பகுதிக்கு அமைச்சர் காதர் மஸ்தான் விஜயம்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள ஆத்திமோட்டை கிராமத்தில் 03-03-2023 வெள்ளி மாலை மணல் அகழ்வில் ஈடுபட்ட மன்னார் நானாட்டன் பிரதேச சபை உறுப்பினர் ரொஜன் ஸ்ராலின் இன் கைப்பற்றப்பட்ட மணல் தூக்கும் வாகனத்தை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக நேற்று சனிக்கிழமை (4) காத்திருந்த பொது மக்கள் மற்றும் கிராம சேவகர்கள் மீதும் குண்டர்களை ஏவி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
நேற்று முன் தினம் மணல் அகழ்வு இடம் பெற்ற பகுதிக்கு பொது மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து நேரடியா விஜயம் மேற்கொண்டு மணல் அகழ்வை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் உட்பட்ட குழுவினர் தடுத்து நிறுத்தி பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டிருந்த நிலையில் இலுப்பைகடவை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சம்மந்தப்பட்ட மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர் மீதோ, குழு மீதோ எந்த நடவடிக்கையும் மேற்கொண்டிருக்கவில்லை.
மேலும் கைப்பற்றபட்ட பொருட்களையும் பொலிஸார் கையகப்படுத்தாத நிலையில் அதை பாதுகாத்த மக்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் மீதும் நேற்றைய தினம் பிரதேச சபை உறுப்பினர் ரொஜன் ஸ்ராலின் தலைமையிலான குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
15 க்கு மேற்பட்ட குண்டர் குழுக்கள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டதில் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உட்பட பெண் கிராம சேவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இலுப்பைகடவை பொலிஸார் பல மணி நேரம் ஆகியும் எந்த வித நடவடிக்கை மேற்கொள்ளாததை தொடர்ந்து ஆத்திமோட்டை கிராம மக்கள் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான காதர் மஸ்தானுக்கு விடயத்தை தெரியப்படுத்தியதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் தக்குதலுக்கு உள்ளான நபர் கிரம சேவகர்களை சந்தித்ததுடன் ஆத்திமோட்டை பகுதி மக்களிடமும் கலந்துரையாடினார்.
அத்துடன் சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெற்ற பகுதிக்கும் விஜயம் மோற்கொண்டு பார்வையிட்டார்.
அதேரம் குறித்த பிரச்சினை மற்றும் மணல் அகழ்விற்கு வழங்கப்பட்ட முறையற்ற அனுமதி மற்றும் பொலிஸார் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமை தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
குறித்த மணல் அகழ்வுடன் சம்மந்தப்பட்ட ரொஜன் ஸ்ராலின் என தெரிவிக்கப்படும் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் இதற்கு முன்னதாக பிரதேச சபை அமர்வில் வன்முறையில் ஈடுபட்டவர் என்பதுடன் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பல வழக்குகள் இவர் மீது உள்ளமை குறிப்பிடத்தக்கது .
அத்துடன் இம் முறை குத்துவிளக்கு சின்னதில் மன்னாரில் களமிறங்கியுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முருங்கன் வட்டார வேட்பாளராக மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தகது.